உடல், உரிமை, ஒடுக்குமுறை!

சிறப்புக் கட்டுரை: உடல், உரிமை, ஒடுக்குமுறை!

சல்மா

நான் எனது பதின் பருவத்தில் வீட்டில் இருக்கும்போது கீழே அமர மாட்டேன். நாற்காலியில் அமர்வது எனக்கு மிகவும் விருப்பமான விஷயம். நாற்காலியில் அமரும்போது கால் மீது கால் போட்டு அமருவதை மிகவும் விரும்புவேன். அப்படி அமர்வது எனது நீளமான கால்களுக்கு மிகவும் வசதியானதும்கூட.
ஒரே இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் அமர்ந்திருக்கும்போது கால்கள் இயல்பாகவே ஒன்றின் மீது மற்றது ஏறிக்கொள்ளும். வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் என் தாயார் தனது கண்களினால் சாடை காட்டி என் கால்களைத் தரையில் இறக்கிவிடுவார்.
அவர்கள் போன பிறகு நான் ஏன் என்று கேட்டால், பெண் பிள்ளைகள் கால் மீது கால் போட்டு அமர்வது திமிர், அடங்காப்பிடாரித்தனம் என்று பிறர் சொல்வார்கள் என்றார் அம்மா. உனக்கு மரியாதை தெரியாது, உன்னை மணமுடிக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் சொல்வார்.
திருமணத்திற்குப் பிறகு இதே கெடுபிடியை என் மாமியாரும் காட்டியபோது சற்று கோபம் உண்டாகியது. என்னுடைய காலை என்னுடைய மற்றொரு காலின் மீதுதானே போட்டேன், மற்றவர்கள் கால் மீது இல்லையே என்கிற ஆதங்கம் எழும்.
எதற்காக இந்தக் கதை? சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் வாழும் தலித் மக்கள் மீது மிகக் கொடூரமான கொலைவெறித் தாக்குதலை ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்திமுடித்து, சிலரது உயிரைப் பறித்திருக்கிறார்கள்.
இரவோடு இரவாக ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிக் கொல்கிற ஆதிக்கச் சாதியின் வெறியை, அந்த மனநிலையை, அதன் வன்மத்தை கற்பனைக்குள்கூட கொண்டுவர முடியாமல் மனம் தவிக்கிறது.
அந்த தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினர் முன்னிலையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்ததால் ஏற்பட்ட கோபம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. தலித் சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களது உடலைத் தங்கள் வசதிக்கேற்பப் பயன்படுத்திக்கொள்வதைக்கூடப் பிற சமூகத்தினர் அனுமதிக்க வேண்டுமா என்கிற கேள்வி இந்தப் படுகொலையின் பின்னணியில் எழுந்திருக்கிறது.
அதிகார அரசியல்
கால் மேல் கால் போட்டு அமர்ந்தது அந்தச் சம்பவத்துக்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். ஆனால், அதுதான் உண்மையான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் கால் மேல் கால் போட்டு உட்காருவது மற்றவருக்கு ஏன் கொதிப்பை வரவழைக்கிறது? கால் மேல் கால் போடுவது என்பது ஒருவர் தன் வசதிக்கு ஏற்பத் தன் விருப்பத்துக்கு ஏற்பத் தன் உடலைப் பயன்படுத்துவதன் ஓர் அடையாளம். அவருடைய உடல் அவர் வசம் இருப்பதன் அடையாளம். வயது காரணமாகக் குடும்பங்களில் இந்தச் செயல் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. பெரியவர்கள் முன்னால் கால் மேல் கால் போட்டு உட்காராதே என்று சொல்லப்படுகிறது. ஆண்கள் முன்னால் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவது முறையல்ல என்று இது தொடர்ந்தது. சமுதாயத்தில் தங்களுக்குக் கீழ் நிலையில் தள்ளப்பட்டிருக்கும் சாதியினர் தங்களுக்கு மேல் அடுக்குகளில் உள்ளவர்களுக்கு எதிரில் இப்படிச் செய்யக் கூடாது என்பதாக இதன் நீட்சி அமைந்தது.
பெரியவர்களுக்குச் சிறியவர்கள் தரும் மரியாதையைப் பெண்கள் ஆண்களுக்குத் தர வேண்டும்; கீழ் அடுக்குகளில் தள்ளப்பட்ட சாதியினர் மேல் அடுக்குகளை ஆக்கிரமித்துக்கொள்பவர்களுக்கும் அதே மரியாதையைத் தர வேண்டும்; இதுதான் கால் மேல் கால்போடுவது குறித்த அதிகார அரசியல். ஒருவரை ஆதிக்கம் செய்ய விரும்புபவர்கள் அவர்களுடைய செயல்பாடுகளை மட்டுமின்றி, உடல் இயக்கம், சிந்தனை ஆகியவற்றையும் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் உடல்கள் மீதான கட்டுப்பாடு. அதை மீறினால் வன்முறையாக வெடிப்பதும் அதே எண்ணம்தான்.
வெறுப்பின் வரலாறு
காலங்காலமாக நிலைபெற்றுவிட்ட வெறுப்பின் வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, கால் மேல் கால் போட்டு அமர்ந்ததுதான் இப்படுகொலைக்குக் காரணம் என்று குறுக்கிவிட முடியாது. தலித் மக்கள் கால் மேல் போட்டு அமர்ந்ததைக் காணச் சகிக்காத மனநிலைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. நீயும் நானும் சமம் இல்லை என்று ஒரு சாரார் இன்னொரு சாராரைப் பார்த்துச் சொல்லும் ஆதிக்க உணர்வுதான் அந்த வரலாற்றின் அடிநாதம். அந்த உணர்வின் தொடர்ச்சிதான் தலித் மக்களின் இந்தச் செயலை அனுமதிக்கவும் ஏற்கவும் மறுக்கிறது. அந்த மறுப்பே ஆத்திரமாகவும் தாக்குதல்களாகவும் பரிணமிக்கிறது.
தலித் மக்கள் தங்களது சுயமரியாதையை விட்டுத்தராத காரணத்தினால்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. நீ என்னைச் சார்ந்து, என் தயவில், எனக்குக் கீழாக அண்டி வாழ வேண்டியவன்; அதை மறுத்தால் நீ வாழவும் தகுதியில்லாதவன் என்னும் எண்ணம்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறது. இந்த எண்ணத்தை நினைத்துப் பார்க்கும்போதே அச்சமாக இருக்கிறது. இந்தப் படுகொலைச் செய்தி தரும் நடுக்கம் இன்னும் குறைய மறுக்கிறது.
இந்தக் கொலைவெறிக்குக் காரணமான அந்தச் சமூகத்தில் உறைந்துகிடக்கிற சாதிய மனநிலை மனதில் பெரும் அவநம்பிக்கையைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
கல்வி, வளர்ச்சி என்னும் மாயைகள்
நாட்டில் முழுக் கல்வியறிவு பெற்ற மாநிலமென அறியப்படுகிற கேரளாவில் கடந்த வாரத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி மணம் செய்துகொண்ட சில மணி நேரத்தில் மணமகனைக் கடத்திச் சென்று பெண்ணின் குடும்பம் அந்த இளைஞனின் கண்களைத் தோண்டி எடுத்துக் கொலை செய்தது. காரணம் மணமகன் தலித் கிறிஸ்தவர்.
கற்ற கல்வியும் பெற்றுள்ள வளர்ச்சியும் நமக்கு ஏற்படுத்தும் பெருமிதங்களை, கர்வங்களை இது போன்ற கொடூரங்கள் பெரும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. கல்வி என்பது என்ன, எதை வளர்ச்சி என்கிறோம் என்னும் ஆதங்கம் உண்டாகிறது.
சாதியெனும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய கட்டமைப்பு மனிதனை மனிதன் வெட்டிக் கொல்லத் தூண்டுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. நமது அரசியல் சாசனம் பார்த்துக்கொண்டிருக்கிறது. நமது சமூகம் இந்தச் சாதிய அடுக்கை, அமைப்பை, பத்திரமாகப் பாதுகாக்கிறது.
என்ன செய்யப்போகிறோம்?
சாதிய வெறுப்பு அதிகாரத்தின் மனநிலையிலிருந்து துணிந்து படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இந்த ஆதிக்கச் சாதிய மனநிலையை அதன் கொதிநிலையை இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மோடு இருக்க அனுமதிக்கப்போகிறோம்?
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம் யாருக்கானது? ஆதிக்க வெறியைத் தனது சீழ் பிடித்த மூளையில் பதுக்கிவைத்துப் பாதுகாக்கும் அற்பர்களுக்கனதா? சாதிய விழுமியங்களை உடைத்தெறியக் கைவசம் என்ன திட்டங்களை வைத்திருக்கிறோம்?
அன்றிரவு வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடியவர்களையும் உயிரிழந்தவர்களையும் அவர்களது ரத்தத்தையும் அதன் நிறத்தையும் மிச்சமிருக்கும் இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானிருந்தது. துளியும் வேற்றுமை இல்லாத அந்தக் குருதியின் மீது நமது ஒட்டுமொத்த நாகரிக அடையாளங்களும் வீழ்ந்து போய்க் கிடந்ததைக் காணத்தானே செய்தோம். வேறென்ன செய்தோம்?
இதுபோன்ற கொடூரம் நடப்பது இதுவே இறுதி என்கிற அசட்டு நம்பிக்கைகளை உருவாக்குவதும் கண்டனக் கூட்டங்களை நடத்துவதுமாக நாம் நிறைவடைந்துவிடுகிறோமா? அதுவே தொடர் நிகழ்வாக இருக்கப்போகிறதா? இதுவே இறுதி என்கிற முற்றுப்புள்ளியை வைக்கும் நேரம் எப்போது வாய்க்கும்?
உடல், உரிமை, ஒடுக்குமுறை! உடல், உரிமை, ஒடுக்குமுறை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.