தனியார் நலனுக்காகவே பசுமைச் சாலைகள்!

தனியார் நலனுக்காகவே பசுமைச் சாலைகள்!

பசுமை வழிச்சாலை மக்களின் நலனுக்காக அமைக்கப்படவில்லை என்றும், தனியார் நிறுவனங்களின் நலனுக்காகவே அமைக்கப்படுகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை - சேலம் இடையே எட்டு வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக ஐந்து மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துவிட்டார். இதனால் பாதிப்பு குறைவு என்றும், பயன்கள் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், போராடுபவர்களை மிரட்டிப் பணிய வைத்து, சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் துடித்துக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டு இன்று (ஜூன் 17) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சர்வாதிகாரப் போக்குடன் பசுமைச் சாலைத் திட்டத்தை திணிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று எச்சரித்துள்ளார்.
"பசுமை வழிச் சாலையை எதிர்த்து ஐந்து மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். ஆனால், தமிழகத்தில் நடப்பது அடிமைகளின் ஆட்சி என்பதால் தங்களின் எஜமானர்கள் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகக் காவல் துறையினரை ஏவி, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய் வழக்கு போடுவது, கைது செய்வது, வீடு வீடாகச் சென்று மிரட்டுவது, காவல் துறை பாதுகாப்புடன் நில அளவை மேற்கொள்வது போன்ற அனைத்து வகையான அடக்குமுறைகளிலும் பினாமி அரசு ஈடுபட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ள அவர், "சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே மூன்று சாலைகள் இருக்கும்போது நான்காவதாகப் பசுமை சாலைத் திட்டத்திற்கான தேவை என்ன? மக்கள் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அவர்கள் துடிப்பது ஏன்? என்பன உள்ளிட்ட மக்களின் வினாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாலைக்குக் கையகப்படுத்தப்படும் நிலத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தனது அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்தி அமைக்கப்படும் பசுமை சாலை மக்களின் நலனுக்கானதாகவும், வளர்ச்சிக்குப் பயன்படுவதாகவும் அமையுமா? என்றால் அதுவும் இல்லை. இது முழுக்க, முழுக்க ஒரு தனியார் நிறுவன நலனுக்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் மக்களுக்கானவையாக இருக்க வேண்டும். மாறாக, தனியார் கார்ப்பரேட் நிறுவங்களின் நலனுக்கானவையாக இருக்கக் கூடாது.
அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்கான சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். இத்திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் ஐந்து மாவட்ட மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும். அத்தகைய போராட்டத்துக்கு இடம்தராமல் பசுமைச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
தனியார் நலனுக்காகவே பசுமைச் சாலைகள்! தனியார் நலனுக்காகவே பசுமைச் சாலைகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.