“எட்டு வழிச் சாலையால் தீவாய் போகும் கிராமங்கள்”
அன்புமணியிடம் முறையிட்ட மக்கள்
சென்னை சேலம் பசுமை எட்டுவழிச் சாலைக்கு பெரும்பாலான மக்கள் தங்கள் நிலங்களை மனமுவந்து கொடுப்பதாகவும், சிலரே பிரச்னை செய்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆனால் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று (ஜூன் 26) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பசுமை சாலையால் பாதிக்கப்படும் கிராம மக்களை சந்தித்தபோது முதல்வர் கூறியதற்கு நேர் மாறாக தங்கள் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் பெரும்பான்மை மக்கள்.
எட்டு வழிச் சாலைக்கு ஆரம்பத்தில் ஆதரவு முகம் காட்டிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசின் கெடுபிடிகளையும், மக்களின் கொந்தளிப்புகளையும் கண்டு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அரசியல் தலைவர்களில் வேறு எவரையும் விட உடனடியாக களத்துக்கு சென்று மக்களை சந்திக்குமாறு அன்புமணிக்கு உத்தரவிட்டார். அதன்படி அன்புமணி நேற்று தொடங்கி மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால் எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்திப்பதற்கே அன்புமணி கடும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. காஞ்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான பொன்.கங்காதாரன் தான் அன்புமணியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக காவல்துறை அதிகாரிகளை சந்தித்த விதம் பற்றி நம்மிடம் விளக்கினார் பொன்.கங்காதாரன்.
“பாமக மாநில இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி மக்களை சந்திப்பார் என்று டாக்டர் 21 ஆம் தேதி அறிக்கை கொடுத்தார். மறுநாள் 22ஆம் தேதியே காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அன்புமணி மக்களை சந்திக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு இடங்களில் அனுமதி கேட்டோம். அவர்களும் அனுமதி கொடுத்தார்கள். உத்திரமேரூரைச் சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்கள் எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்படுகின்றன என்பதால் அவர்களை மையமாக உத்திரமேரூரில் சந்திப்பது என்று முடிவெடுத்தோம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தபோது 25 ஆம் தேதி அதாவது நிகழ்ச்சிக்கு முதல் நாள் மாலை 6 மணிக்கு டிஎஸ்பி ராஜேந்திரன் எனக்கு போன் செய்து, ‘அன்புமணி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை’ என்றார். நான் உடனே இதுபற்றி தலைவர் ஜி.கே.மணி அவர்களிடம் சொன்னேன்.
அவர் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். ‘வேணும்னா நிகழ்ச்சியை மாவட்டத் தலைநகரத்துல வச்சிக்கங்க. உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் அனுமதி கொடுக்க முடியாது’ என்று கூறினார்கள் காவல்துறை தரப்பில். நாங்களோ, ‘பாதிக்கப்படும் மக்களை அவர்களின் அருகில் சென்றுதான் பார்ப்போமே தவிர, மாவட்டத் தலைநகரங்களுக்கு அவர்களை அலைக்கழிக்க முடியாது. தவிர பசுமை எட்டுவழிச் சாலையால் உத்திரமேரூர் பகுதிதான் பாதிக்கப்படுகிறது. அங்கேதான் நிகழ்ச்சியை நடத்துவோம்’என்று கறாராக சொல்லிவிட்டோம். நேற்று முன் தினம் இரவு 11.30 வரை வாதாடி போராடி காவல்துறையிடம் இருந்து அனுமதி பெற்றோம்” என்று அனுமதி பெறும் போராட்டத்தைச் சொல்லி முடித்தார்.
இதையடுத்து நேற்று (ஜூன் 26) காலை உத்திரமேரூர் வந்த அன்புமணி அங்கே பசுமை எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களை நேரடியாக சந்திக்க 11 மணிக்குத் தயாரானார். அவருடன் துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
குருமஞ்சேரி, தாத்தனஞ்சேரி, மலையாங்குளம், அழிச்சூர், பினாயூர் அரும்புலியூர், பழவேரி, படூர் என்று எட்டுவழிச் சாலை போகும் சுமார் 30 கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
முதலில் அவர்களிடம் பேசிய அன்புமணி, “நீங்க எட்டுவழிச் சாலையை எதிர்த்து போராடிக்கிட்டு இருக்கீங்க. உங்களை சந்திக்க வர்றதே எனக்கு பெரும் போராட்டமாயிடுச்சு’’என்று சொல்லி விட்டு அவர்களின் கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்துகொண்டார்.
“எங்க பாட்டன் முப்பாட்டன் சம்பாதிச்ச சொத்து. இதைக் கொடுத்துட்டு நாங்க எங்க போறது? எங்க ஊர் மண்ணை ஒரு பிடி கூட தரமாட்டோம். எல்லாரும் ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர், மூணு ஏக்கர்னுதான் வச்சிருக்கோம். இந்த நிலம்தான் எங்களுக்கு சோறு போடுது. அரசாங்கம் இந்த நெலத்தை எடுத்துக்கிட்டு பேருக்கு கொஞ்சூண்டு பணத்தைக் கொடுத்துச்சுனு வையுங்க. அதையும் ஆம்பளைங்க குடிச்சே ஒழிச்சிடுவாங்க. இந்த ரோடே எங்களுக்கு வேணாம்யா போய் சொல்லுங்க” என்று பெண்கள் அன்புமணியிடம் கதறினார்கள்.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அன்புமணியிடம் முக்கியமான ஒரு வேண்டுகோளை முன் வைத்தனர்.
“எட்டுவழிச் சாலை என்பது உத்திரமேரூர் பகுதி கிராமங்களை ஒரு மின்னல் போல வெட்டிக்கிட்டு போகுது. இதனால பல கிராமங்கள் வெட்டுப்பட்டு தீவாயிடும். குறுக்கே யாரும் ; போய்வர முடியாது. தவிர இப்படி ஒரு சாலை வந்துச்சுன்னா அதுக்கு பக்கத்துல விளை நிலங்களோட விலை குறையுமே தவிர ஏறாது. ஏன்னா...எட்டு வழி பைபாஸ் போட்டா ஆள் நடமாட்டமே அத்துப் போயிடும்’’ என்றனர். இதையெல்லாம் அன்புமணி குறித்துக் கொண்டார்.
அதன் பின் மக்களிடம் பேசிய அன்புமணி,
“இது தமிழ்நாடா வடகொரியாவான்னு தெரியலை. வடகொரியாலவுலதான் சர்வாதிகாரி ஆட்சி செய்யுறான். அவனை விட மோசமான சர்வாதிகார ஆட்சியை எடப்பாடி நடத்திக்கிட்டு இருக்காரு. நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதி. இங்கதான் போகணும், அங்கதான் போகணும்னு எனக்குக் கட்டுப்பாடுகள் விதிக்குறாங்க. ஒரு மாவட்டத்தில் ஒரு கூட்டம்தான் போடணுமாம்.
ஜெயலலிதாவே இப்படி இல்லையே? மக்கள் ஜெயலலிதாவுக்குதான் ஓட்டு போட்டார்கள். ஆனா எடப்பாடி தனக்குதான் ஓட்டு போட்டதா நினைச்சுக்கிட்டிருக்காரு. இன்னும் கொஞ்ச நாள்தான் ஆட்டம் அடங்கிடும்., ஆட்டத்தை அடக்கிடுவீர்கள். உங்களோட போராட்டத்தை எல்லாம் கோரிக்கைய எல்லாம் பிரதமர் வரைக்கும் கொண்டு போவேன்’’ என்று மக்களிடம் உறுதியளித்தார்.
அன்புமணியின் டீம் ஒன்று மக்களிடம் சென்று பெயர், ஊர், எட்டுவழி சாலைக்காக இழப்பீடு கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா,ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்பீர்களா என்றெல்லாம் கேட்டு புள்ளி விவரங்களோடு அன்புமணியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எட்டுவழிச் சாலையால் பாதிக்கப்படும் மக்களின் கருத்தைக் கேட்டுத் தொகுத்து அதை பிரதமர், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரிடம் ஒப்படைக்க இருக்கிறார் அன்புமணி.
தங்களைத் தேடிவந்து ஓர் தலைவர் மனக் குமுறல்களுக்குக் காதுகொடுத்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு. திட்டத்தை செயல்படுத்த துடிக்கிற அரசாங்கம் மக்களுக்கு செவிசாய்க்காத நிலையில் இதுபோன்ற தலைவர்களின் மக்கள் சந்திப்புகள் நடத்தவும் பல தடங்கல்கள் விதிக்கப்படுகின்றன. அதையும் தாண்டி அடுத்த கட்டமாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கே நேரடியாக செல்ல இருக்கிறாராம் அன்புமணி.
-ஆரா
“எட்டு வழிச் சாலையால் தீவாய் போகும் கிராமங்கள்”
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:24:00
Rating:
No comments: