கச்சநத்தம், சாதியத்தின் வெற்றியா?
தேவிபாரதி
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போராட்டங்களால் கொந்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. திருச்செங்கோட்டில் தலித் இளைஞரான கோகுல்ராஜ் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட பிறகு தலித்துகள் மீதான வன்முறை சற்று தணிந்திருந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தது. அப்படி நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது கச்சநத்தம் சம்பவம். சாதி ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், தலித்துகள் மீதான போலி மோதல் சாவுகள், காவல் துறை மரணங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களால் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கும் தலித் வாழ்வு, சாதிப் பண்பாட்டின் மற்றொரு கோர முகத்தைச் சந்தித்திருக்கிறது.
பொது வெளியில் ஏற்பட்ட மாற்றங்கள்
கடந்த சில பத்தாண்டுகளாகத் தலித்துகள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் வாழ்வுரிமையை மீட்டெடுத்துக் கொள்வதற்காகவும் ஜனநாயக அமைப்பில் தமக்குரிய கௌரவத்தை நிலைநாட்டுவதற்காகவும் அமைப்பு ரீதியாகத் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். தீண்டாமையின் வடிவங்களில் சில பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் தலித்துகளின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளில் சில நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி, மருத்துவம், பொறியியல், காவல் துறை, ராணுவம், சட்டம், நீதி முதலான துறைகளில் தலித்துகள் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஊடகம், இலக்கியம் சார்ந்த அறிவுத் துறைகளில் இடம்பெற்றிருக்கும் தலித்துகள், தலித்துகள் மீதான வன்முறைகளையும் அத்துமீறல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தலித் அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் தலித் வாழ்வின் துயரங்களைத் தங்கள் படைப்புகள் மூலம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பொதுச் சமூகத்தின் மனசாட்சி குறித்த கேள்விகளை எழுப்புகிறார்கள். திரிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமான தலித் வரலாற்றை ஆராய்கிறார்கள், தங்கள் மரபையும் பண்பாட்டுக் கூறுகளையும் மீட்டெடுக்க முயல்கிறார்கள், அவை சார்ந்து நிலவிவரும் அவதூறுகளையும் பொய்களையும் மறுக்கிறார்கள். தம் கௌரவத்தையும் வாழ்வுரிமையையும் காப்பாற்றிக்கொள்ளும் முனைப்போடு சாதி அமைப்புகளோடும், மத நம்பிக்கைகளோடும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில பத்தாண்டுகளில் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் கவனம் பெற்றிருக்கும் தலித் இலக்கியம், புழக்கத்திலிருந்து வந்த படைப்பு மொழியை அடியோடு மாற்றியமைத்திருக்கிறது. ராஜ் கௌதமன், ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம் முதலான தலித் ஆய்வாளர்களும் பூமணி, இமையம், சோ.தர்மன், சுகிர்தராணி உள்ளிட்ட தலித் படைப்பாளிகள் தலித் வாழ்வை அதன் பன்முகக் கூறுகளோடு படைப்புகளாக முன்வைத்து தமிழ் நவீன இலக்கியத்தின் புறக்கணிக்கப்பட முடியாத பகுதியாக தமிழ் தலித் இலக்கியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எண்பதுகளில் வெளிவந்த நிறப்பிரிகை, தற்போது ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருக்கும் மணற்கேணி போன்ற இதழ்கள் இவ்வகையில் பெரும் பங்காற்றியவை. எண்பதுகளில் வெளியிடப்பட்ட தலித் அரசியல் என்னும் அறிக்கைக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.
இந்தத் தாக்கம் தலித் அல்லாத அறிவுத் துறையினரின் பார்வையை அடியோடு மாற்றியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாட்டு அடையாளங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் மரபின் பெருமிதங்கள் பலவற்றைக் கேள்விக்குள்ளாக்கித் திணறச் செய்திருக்கின்றன.
தலித் அமைப்புகள் பெற்ற வெற்றிகள்
எண்பதுகளில் உருவான விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் முதலான அரசியல் இயக்கங்கள் தலித்துகளின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கு இடையறாது போராடிக் கொண்டிருக்கின்றன. சாதி அதிகார மையங்களால் தலைமை தாங்கப்படும் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளுக்கு அவற்றோடு இணைந்தும் விலகியும் பல அழுத்தங்களைத் தந்திருக்கின்றன. தலித்துகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பல போராட்டங்கள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் துணையோடு சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் கொலைக் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிடாமல் பார்த்துக்கொண்ட எவிடென்ஸ் அமைப்பு ஓர் உதாரணம். தர்மபுரி இளவரசன் படுகொலை, திருச்செங்கோடு கோகுல்ராஜ் படுகொலைகளில் தலித் அமைப்புகள் அரசுக்கும் காவல் துறைக்கும் பல அழுத்தங்களைத் தந்திருக்கின்றன.
தலித் எழுச்சி என அழைக்கப்படும் இத்தகைய போக்கைக் கண்டு ஆதிக்கச் சாதியினர் பதற்றமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் தலித்துகளின் மீதான வன்முறைக்கெதிரான தலித் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உருவான தலித் அமைப்புகளின் கிளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. மகாராஷ்டிரம், கேரளா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உருவான எதிர்ப்பு அலை தேசிய அளவில் கவனம் பெற்றது. தலித் மக்களின் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மனித உரிமைப் பேராளிகளும் சமூக ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் களத்தில் நின்றதன் விளைவாக மத்திய அரசு தனது முந்தைய ஆணையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.
ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற ஓர் எழுச்சி உருவாகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
பொதுப் போராட்டங்களில் தலித்துகள்
தலித் அமைப்புகள் தமிழகத்தின் பொதுப் பிரச்சினைகளின் மீது அக்கறை செலுத்திவருவதையும் பொதுச் சமூகத்துடன் இணைந்து போராடிவருவதையும் கவனியுங்கள்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் தலித்துகளும் சிறுபான்மையினரும் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ ஆய்வகத் திட்டம், காவிரி நதிநீர்ப் பங்கீடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆகியவை சார்ந்த எதிர்ப்பு இயக்கங்களில் தலித்துகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துவருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டு துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசாகப் பெற்றவர்களில் பலர் தலித்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலித் அரசியல் தலைவர்கள் இந்தப் போராட்டங்களில் செயல்பூர்வமான பங்களிப்புக்களைச் செய்தார்கள். பல நூற்றாண்டுகளாகப் புறக்கணிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிப் பொதுச் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த தலித் மக்களைப் பொதுச் சமூகத்தின் நலன்களுக்கானவையும் உரிமைகளுக்கானவையுமான போராட்டங்களில் பங்கெடுக்கச் செய்தது முக்கியமான, ஆரோக்கியமான மாற்றம்.
தலித்துக்களின் சமூக, அரசியல், பண்பாட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களுக்கு நெடிய வரலாற்றுப் பின்னணி உண்டு. எம்.சி. ராஜா, அயோத்திதாசர், பெரியார், காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களோடு இடதுசாரிகளும் தலித்துகள் மீதான தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகத் தீரமுடன் போராடி வந்திருக்கிறார்கள். எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள், மதிப்புமிக்க தியாகங்கள் பலவற்றைப் புரிந்திருக்கிறார்கள், குறிப்பிடத்தக்க சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற அத்தகைய போராட்டங்கள் சாதியற்ற சமூகம் ஒன்றைப் பற்றிய அவர்களது கனவின் வெளிப்பாடு. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளும் அரசியல் கட்சிகளும் அந்தக் கனவை அருவருக்கத்தக்க முறையில் சிதைத்தன. தலித்துக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற விளிம்புநிலைச் சமூகங்கள் ஓட்டுவங்கி அரசியலின் பலிகடாக்களாக மாற்றப்பட்டார்கள். தாழ்த்தப்பட்டோர் விடுதலை, வெறும் இட ஒதுக்கீடு சார்ந்த நடவடிக்கையாகச் சுருங்கிப் போனது.
சுதந்திர இந்தியாவின் தோல்வி
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகளில் பெரும்பாலானவை தலித்துகளுக்கு எதிரானவை. இளவரசனுக்கும் கோகுல் ராஜுக்கும் உடுமலைப்பேட்டை சங்கருக்கும் முன்னால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாதி ஆணவக் கொலைகளில் பல வெளிவராமல் மறைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சமூக நீதியை வலியுறுத்தும் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கடந்த அறுபதாண்டு கால அதிகாரத்தைக் கொண்டு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் சாதிய வன்முறைகளுக்கெதிராகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவும் கண்துடைப்பு நடவடிக்கைகளாக அம்பலப்பட்டிருக்கின்றன.
பல வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய பல வழக்குகள் சாதாரணப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதாகத் தப்பிச் சென்றுவிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. காவல் நிலைய மரணங்கள், பாலியல் வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்.
இது நிச்சயமாக சுதந்திர இந்தியாவின் அரசியல் ரீதியான தோல்வி. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல்களை எதிர்கொள்வதில் சாதியக் கணக்கீட்டைக் கைவிடத் துணிவு இல்லாத கட்சிகளாக அவை சுருங்கிவிட்டிருக்கின்றன. கடந்த பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தலித்துகள் மீது வட மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு, பாமக பொறுப்பேற்க வேண்டும். பாமக தலைவர்கள் நேரடியாகவே தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். நாடகக் காதல் போன்ற சொற்பிரயோகங்கள் மூலம் தலித்துகளுக்கு எதிராக கொங்கு வேளாளர்கள், மறவர்கள், தேவர்கள் முதலான ஆதிக்க சாதித் தலைவர்களை ஒன்றிணைத்தது பாமக. சில வருடங்களுக்கு முன்னால் கொங்கு வேளாளர் சமூகத்தின் பெயரால் நிறுவப்பட்ட சாதியமைப்பின் தலைவரான மணிகண்டன் என்பவரால் தலித்துகளுக்கு எதிரான மாநாடு நடத்தப்பட்டு அதில் தலித்துகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
அரசியல் களத்தில் சாதிக் கணக்கு
பிரதான அரசியல் கட்சிகள் தம் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பிட்ட தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிக்கச் சாதியினரே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்படுகிறார்கள். தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்கள், நாடார்கள் என அரசியல் சாசனத்திற்கு எதிராகச் சாதிய அடிப்படையில் நமது ஜனநாயக அமைப்பின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் வட்ட, மாவட்டப் பொறுப்பாளர்களும் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சாதி எல்லா வகையிலும் வலுவான அதிகார மையமாக மாற்றப்பட்டிருக்கிறது. தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் இந்த அதிகார மையங்களால் தொடர்ந்து நசுக்கப்பட்டுவரும் அவலம் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பதை அரசியல் தோல்வி என்றுதான் அழைக்க முடியும். வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக் கணிப்புகளில் சாதியப் பின்புலம் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதைக் கவனியுங்கள். சாதியமைப்பை மூர்க்கமாக எதிர்த்துவரும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகளும் சாதிக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே யதார்த்தம்.
தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள சாதியமைப்புகள் வெளிப்படையாகவே சாதிப் பாகுபாட்டை ஆதரிக்கின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய வன்முறைகளைத் தூண்டுகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தின் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதால் பதவிகளில் நீடிக்க அனுமதிக்கப்படவில்லை.
நமது ஜனநாயக அமைப்பைக் கேலிக்கூத்தாக மாற்றிய அவமானகரமான அந்த நிகழ்வுகளைப் பொதுச் சமூகம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழ் பொதுச் சமூகம் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் போன்ற ஒன்று பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்காக நடந்திருக்குமானால் நமது ஜனநாயக அமைப்புக்கு அது தமிழ்ச் சமூகத்தின் கௌரவமான பங்களிப்பாக இருந்திருக்க முடியும். கடைசியில் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியரான உதயச்சந்திரனின் தனிப்பட்ட முயற்சிகளின் விளைவாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சி மன்றங்களில் தலித்துகளின் அரசியல் சாசன ரீதியான ஜனநாயக உரிமை ஓரளவுக்கேனும் மீட்டெடுக்கப்பட்டது.
ஊராட்சித் தலைவர் போன்ற கௌரவமான பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெறுவது சாதியமைப்பை வலுவிழக்கச் செய்யும் என ஆதிக்கச் சாதியினர் நம்புகிறார்கள். அதைத் தமக்கிழைக்கப்பட்ட அவமானமாகக் கருதுகிறார்கள். அது போன்ற நடவடிக்கைகள் தீண்டாமை என்னும் அதிகாரத்தைப் பறித்துக்கொண்டுவிடும் எனக் கருதுகிறது சாதியச் சமூகம். அரசியல் சாசனப்படி குறிப்பிட்ட ஒரு தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும்போது ஆதிக்கச் சாதி தந்திரமான வழிகளில் அரசியல் சாசனத்தை ஏமாற்றுகிறது. தலித்துகள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவரது அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த துணைத் தலைவரோ, வேறு யாரோ அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள். சாதி அடையாளமாக இருக்கிறது, கௌரவமாக இருக்கிறது.
ஆதிக்கச் சாதியில் பிறந்த ஒருவர் பிறப்பிலேயே அதிகாரம் பெற்றவராக இருக்க முடிகிறது. தலித்துக்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மனிதர்களிடமிருந்து பணிவும் அடிபணிதலும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை மீறப்படும்போது படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. கச்சநத்தத்தில் நடந்திருப்பதும் இதுதான்.
தலித்துகள் தங்களைப் பொதுச் சமூகத்தோடு இணைத்துக்கொண்டு பொதுச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆரோக்கியமான சூழல் உருவாகிக்கொண்டிருக்கும்போது ஆதிக்கச் சாதியினரின் இது போன்ற செயல்கள் பொதுச் சமூகத்தைப் பிளவுபடுத்தும்.
நம் ஜனநாயகத்திற்கு இதைவிட மோசமான நெருக்கடி இருக்க முடியாது.
கச்சநத்தம், சாதியத்தின் வெற்றியா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:31:00
Rating:
No comments: