ரயில் கட்டண உயர்வை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது

சென்னை: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத அநியாய ரயில் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அமீர் ஹம்சா, வடசென்னை மாவட்ட தலைவர் ரஷீத், தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் நாஜிம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேக் முகம்மது, காஞ்சிபுரம் மாவட்ட பொது செயலாளர் அபுபக்கர் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டம் குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கூறுகையில், மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஆட்சியை கைப்பற்றி பிறகு கடந்த ஆட்சி செய்ததை விட மிக மோசமான மக்கள் விரோத நடவடிக்கைகளை மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் டீசல் விலையை உயர்த்தியவர்கள், பட்ஜெட் தாக்கல் செய்யாமலேயே ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் அதிகரித்திருப்பதன் மூலம் சாதாரண, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் சரக்கு ரயில் கட்டணத்தை 6.5 சதவீதம் அதிகரித்திருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் விரோத செயல்களால் காங்கிரஸ் அரசு மீது பெரிதும் நம்பிக்கை இழந்து பாஜக அரசை தேர்ந்தெடுத்த மக்களுக்கு முதல் பரிசாக இந்த கட்டண உயர்வை மோடி அரசு அளித்துள்ளது. செலவுகளை சமாளிக்கவே இந்த கட்டண உயர்வு என்று ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா அறிவித்திருப்பது பாஜக அரசின் திறமையற்ற நிர்வாகத்தினை காட்டுகிறது மக்கள் விரோத திட்டங்களை பெரிதும் அமல்படுத்திய கடந்த காங்கிரஸ் அரசு கூட இப்படி ஒரு கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி ஆட்சி பொறுப்பேற்ற பின், பாஜக இவ்வாறு கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ரயில்வே துறையை பொறுத்தவரை அதன் மக்கள் சேவையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ரயில்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது, ரயில் விபத்துக்களை தடுக்க இயலாதது, போதிய ரயில்கள், இருப்புப் பாதைகள் இல்லாமை, தரமான ரயில் பெட்டிகள், பிளாட்பாரங்கள் வசதிகள் ஏற்படுத்தி தராதது, தங்கும் விடுதிகள் போதிய பராமரிப்புடன் இல்லாதது இதுபோன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன இவற்றை சரி செய்யாமல் ரயில் கட்டணத்தை உயர்த்தி இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே பாஜக அரசு ரயில்வே துறையை லாபம் ஈட்டும் நிறுவனமாக கருதாமல், நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பொருளாதார இழப்பை வேறு வழிகளில் சரி செய்யும் முயற்சியை அரசு மேற்க்கொள்ள வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அநியாய இரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த ரயில் மறியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்றார். ரயில் மறியல் போராட்டத்தில் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.




ரயில் கட்டண உயர்வை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது ரயில் கட்டண உயர்வை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது Reviewed by நமதூர் செய்திகள் on 21:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.