முதன்முறையாக தோல் தானம்! - திருவள்ளூர் சித்ரா!


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழர்களுக்கு இயல்பிலேயே ஈகை குணம் உண்டு என்பதற்கு உறுப்பு தானமே சாட்சி. சமீபத்தில் நெல்லையில் இறந்த சிறுவனின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. அவனைக் கௌரவிக்கும்விதமாக நெல்லையில் ஒரு சாலைக்கு ‘அவினாஷ் சாலை’ என்று அவனது பெயர் சூட்டப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில் மீண்டும் ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அரிகியம்பேடு லட்சுமி நகரைச் சேர்ந்த தம்பதி ஏழுமலை - சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சித்ரா அப்பளம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் காயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்பு, மேற்சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்திலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் உறுப்புகளான சிறுநீரகம், இதய வால்வு, கல்லீரல், கண்கள், தோல் ஆகியவற்றை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்ட உறுப்புகளில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகளுக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் பொருத்தப்பட்டது. இன்னொரு சிறுநீரகம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்குப் பொருத்தப்பட்டது. கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது. இதய வால்வு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்குப் பொருத்தப்படவுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது சித்ராவின் தோல், தானமாக பெறப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தோல் தானம் செய்தவர் என்ற பெருமை சித்ராவைச் சேருகிறது.
முதன்முறையாக தோல் தானம்! - திருவள்ளூர் சித்ரா! முதன்முறையாக தோல் தானம்! - திருவள்ளூர் சித்ரா! Reviewed by நமதூர் செய்திகள் on 05:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.