விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல! : சீத்தாராம் யெச்சூரி!


உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு கடந்த 4ஆம் தேதி காஷ்மீருக்குச் சென்று வந்தது. காஷ்மீர் சென்றுவந்த அனைத்துக் கட்சி தூதுக்குழு குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் செய்தியாளர் சௌபத்ரா சட்டர்ஜி, சீத்தாராம் யெச்சூரியை பேட்டி கண்டார். அது, 6.9.2016 இதழில் வெளிவந்திருக்கிறது. அதன் விவரங்கள் வருமாறு:
கேள்வி: அனைத்துக் கட்சி தூதுக்குழுவின் முக்கியமான சாதனைகள் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: இரண்டு மாதங்களுக்குமுன் நாங்கள் போகவில்லை. அதன்மூலம் பொன்னான நேரம் மற்றும் உயிர்களை நாம் பலிகொடுத்துள்ளோம். இதற்குமுன் நடைபெற்ற கூட்டங்களின் அறிக்கைகளின் அடிப்படையிலும், அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்க்கக்கூடியவிதத்தில் உண்மையான தயாரிப்புப் பணிகளை அரசாங்கம் செய்திடவில்லை. முக்கியமான பிரச்னைகளைத் தெரிவு செய்திருந்தோமானால், மேலும் அர்த்தமுள்ளவகையில் மத்தியஸ்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தர்கள் எவரும் இல்லை.
கேள்வி: ஹரியத் தலைவர் எஸ்ஏஎஸ் கிலானி தூதுக் குழுவினரை சந்திக்க மறுத்தது தோல்விதான், இல்லையா?
சீத்தாராம் யெச்சூரி: இல்லவே இல்லை. ஹரியத் தலைவர்கள் ஐவரில் நான்கு பேரை நாங்கள் சந்தித்திருக்கிறோம். காஷ்மீர் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, அரசியல் பிரச்னைகளை விவாதிப்பதற்கு எதிராகத் தீர்மானித்திருப்பதாக எங்கள் கூட்டத்தின்போது ஹரியத் தலைவர்களில் ஒருவரான மீர்வாயிஸ் உமர் பரூக் எங்களிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், "உங்களுடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று கூறினேன். கிலானி எங்களைச் சந்திக்கவில்லை. ஆனாலும் காஷ்மீர் மக்களிடம், "இந்தியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளில் ஒரு பிரிவினர் உங்கள் வலியை நன்கு உணர்கிறோம்" என்றும், "உங்களுடன் பேச விரும்புகிறோம்" என்றும் எங்கள் செய்தியை தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.
கேள்வி: காஷ்மீர் பிரச்னையைக் கையாள்வதில் என்னவிதமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிறீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: காஷ்மீர் பிரச்னையை ஒட்டுமொத்தமாக மறு ஆய்வு செய்திட வேண்டும். இந்தியாவில் எவ்வளவோ விஷயங்கள் மாறியிருக்கின்றன. காஷ்மீர் பிரச்னையை ஆய்வுக்கு உட்படுத்தும் சமயத்தில் இவை அனைத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொது வாக்கெடுப்பு போன்ற விஷயங்கள் கைவிடப்பட வேண்டும். முக்கியமாக, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அளிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதை, மீளவும் சரி செய்திட வேண்டும். நம் பிரதமர் காஷ்மீர் மக்களிடையே விசுவாசத்தை உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல. அதை காஷ்மீர் மக்களிடையே பேசுவதன்மூலமாகத்தான் உருவாக்க முடியும். அதேபோன்று, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல! : சீத்தாராம் யெச்சூரி! விசுவாசம் என்பது வானத்திலிருந்து வருவது அல்ல! : சீத்தாராம் யெச்சூரி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.