காணாமல் போன இஷ்ரத் ஜஹான் ஆவணங்கள்:வழக்குப்பதிவு!


இஷ்ரத் ஜஹான் கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட அனைவரும் அப்பாவிகள் என்றும் போலியாக திட்டமிட்டு கொல்லப்பட்டதாக ஊடகங்களும், எதிர்கட்சிகளும் குற்றம் சுமத்தின. இதனிடையே, இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பராமரிப்பிலிருந்து மாயமாகின. இது கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், ஆவணங்கள் மாயமானது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை பாஜக அரசு அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் அப்போதைய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை உட்பட பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற 11 அதிகாரிகளை விசாரித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆவணங்கள் தெரிந்தோ, தெரியாமலோ நீக்கப்பட்டுள்ளது அல்லது காணாமல் போனது என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போன ஐந்து முக்கிய ஆவணங்களில் ஒரு ஆவணத்தை மட்டும் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் சார்புச் செயலாளர், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். இந்த ஆவணங்கள் ஏன் காணாமல் போயின? எந்த சூழ்நிலையில், எப்படி காணாமல் போயின? என்பது குறித்து விசாரிக்கும்படி அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது.
காணாமல் போன இஷ்ரத் ஜஹான் ஆவணங்கள்:வழக்குப்பதிவு! காணாமல் போன இஷ்ரத் ஜஹான் ஆவணங்கள்:வழக்குப்பதிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.