இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத உச்சநீதிமன்றம்!


இரண்டு இஸ்லாமிய நீதிபதிகள் இந்த வருடம் ஓய்வு பெற்றதிலிருந்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இல்லாமல் உச்சநீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இஸ்லாமிய நீதிபதி இல்லாமல் செயல்படுவது பதினோரு வருடங்களில் முதன்முறையும், கடந்த முப்பது வருடங்களில் இரண்டாம் முறையும் ஆகும். கடைசியாக, இஸ்லாமியர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட வருடம், 2012. 2012ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நீதிபதி எம்.ஒய்.இக்பாலும், ஏப்ரல் மாதம் நீதிபதி ஃபக்கீர் முகம்மது கலிஃபுல்லாவும் பதவியேற்றனர். இந்த வருடம் பிப்ரவரி 2-ஆம் தேதியன்று நீதிபதி இக்பால் ஓய்வுபெற்றார்.
ஜூலை 22ஆம் தேதி காலிஃபுல்லா ஓய்வுபெற்றார். நீதிபதிகளை நியமிக்கும் முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் அரசுக்கும் இடையே மோதல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நீதிபதிகளை நியமிப்பதில் கால தாமதம் ஏற்படலாம். தற்போது, இரண்டு உயர்நீதிமன்றங்களில் இஸ்லாமிய தலைமை நீதிபதிகள் இருக்கின்றனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவரான இக்பால் அஹமது அன்சாரி பீஹார் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். அதுபோல, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மன்சூர் அஹமது மிர் ஆகிய இவர்கள் முறையே, 2016 அக்டோபர் மற்றும் 2017 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற இருக்கின்றனர்.
ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி 62 வயதில் ஓய்வுபெறுவார். உச்சநீதிமன்ற நீதிபதி 65 வயதில் ஓய்வுபெறுவார். உச்சநீதிமன்றத்தில் மொத்தமாக 31 நீதிபதிகளுக்கான இடங்களில் இப்போதிருப்பது 28 நீதிபதிகள்தான். வருகிற அக்டோபர் மாதத்தில் நீதிபதி வி.கோபால கௌடாவும், நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பனும் ஓய்வுபெறுகின்றனர். அதுபோல, வருகிற நவம்பர் மாதத்தில் நீதிபதி ஷிவ கிர்தி சிங், அனில் தாவேன் என நான்கு நீதிபதிகள் ஓய்வுபெறுகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய நீதிபதிகள் இல்லை என்ற தன் கவலையைப் பதிவு செய்துள்ளார்.
"விரைவில் ஒரு இஸ்லாமிய நீதிபதி நியமிக்கப்படுவார் என நம்புவோம். இது, உரிமைகள் மறுக்கப்படுவதால் எழும் கேள்வி கிடையாது. உச்சநீதிமன்றத்தில் அனைத்து மதங்களும், சாதிகளும், பிராந்தியங்களும் முறையாக பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிக்கும் கேள்வி. பல நாடுகளில், அனைத்துப் பிராந்தியங்களும், மதங்களும், இனங்களும் நீதித்துறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. அதை உறுதிசெய்வதற்கான சிறப்பு விதிகளும் இருக்கின்றன" என்கிறார் அவர்.
இதுவரையிலான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் 196 பேர். இப்போது இருப்பவர்கள் 28 பேர். இதில், மொத்தமாக 17 இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். அதாவது, 7.5% இஸ்லாமிய நீதிபதிகள்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்களில், எம்.ஹிதாயத்துல்லா, எம்.ஹமீதுல்லா பேக், ஏ.எம்.அஹ்மாதி மற்றும் அல்டாமஸ் கபீர் ஆகிய நால்வர் மட்டுமே இந்திய தலைமை நிதிபதியாக உயர்ந்திருக்கின்றனர். ஆனால் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியே இஸ்லாமியர்தான் நீதிபதி எம்.ஃபாத்திமா பீவி. இவர், அக்டோபர் 6, 1989 முதல் ஏப்ரல் 29, 1992 வரை பணியாற்றினார். இவர்தான் பின்னர், தமிழக ஆளுநராகப் பணிசெய்தார். இறுதியாக, உச்சநீதிமன்றம் இஸ்லாமிய நீதிபதிகள் இல்லாமல் செயல்பட்ட காலம் ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2005 வரை இரண்டரை ஆண்டுகாலம் நீண்டது. ஏப்ரல் 4, 2003இல் நீதிபதி எஸ்.எஸ்.கதாரி ஓய்வு பெற்றபிறகு, 2005ஆம் ஆண்டு நீதிபதி அல்டாமஸ் கபீர் நியமிக்கப்பட்டார். ஆனால் டிசம்பர் 2012 முதல் 2013 ஏப்ரல் வரை, இந்திய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபதி அஃப்டாப் ஆலம், நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி காலிஃபுல்லா என நான்கு இஸ்லாமிய நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினர். அதன்பின்னர், இப்போது ஒரு இஸ்லாமிய நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் இல்லை. நீதிபதிகள் நியமனம், கொலோஜியம் முறைப்படி நடை பெற வேண்டும் என்பதும், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்றும் நீதித்துறைக்குள் விவாதங்கள் வலுவடைந்திருக்கும்நிலையில், இஸ்லாமிய நீதிபதிகள் தொடர்பான கருத்தும் இந்த விவாதங்களை வலுப்படுத்தியிருக்கிறது.
இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத உச்சநீதிமன்றம்! இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத உச்சநீதிமன்றம்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.