ரஃபேல் ஊழல்: சிஏஜியிடம் காங்கிரஸ் மனு!

ரஃபேல் ஊழல்: சிஏஜியிடம் காங்கிரஸ் மனு!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இன்று (செப்டம்பர் 19) காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு மத்திய தலைமை பொது கணக்காயர் (சிஏஜி) ராஜிவ் மகரிஷியிடம் புகார் மனு அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாகக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தான் மேற்கொள்ளும் அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களிலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் தொடர்பாக பாஜக ஆட்சியை விமர்சித்துவருகிறார்.
நேற்று (செப்டம்பர் 18) முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “காங்கிரஸ் ஆட்சியை விட குறைவான விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறிவரும் பாஜகவினர் ஏன் 36 விமானங்களை மட்டும் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன்.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் புகழைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிவருகிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “தங்களது ஆட்சிக் காலத்தில் மிகச்சிறந்த ஒப்பந்தத்தைப் பேசி முடித்ததாக காங்கிரஸ் உறுதியாக நம்பினால், ஏன் அதை அப்போது நிறைவேற்றவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுபோன்று தினம்தோறும் ரஃபேல் விவகாரம் தொடர்பாக இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து வரும் நிலையில். இன்று காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு மத்திய தலைமை பொது கணக்காயரிடம் புகார் மனு அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா தலைமையிலான இந்தக் குழுவில் ஏ.கே. அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜிவாலா, ராஜிவ் சுக்லா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதுகுறித்து ஆனந்த் ஷர்மா, “ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் தவறு நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய ஆதாரங்களுடன், விரிவான குறிப்பாணை ஒன்றை மத்தியத் தலைமை பொதுக் கணக்காயரிடம் அளித்துள்ளோம்.
அதில், ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறிப்பாக விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான பிரதமர் மோடியின் முடிவு மற்றும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது ஆகியவை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் சாசன ரீதியான அதிகாரம் பெற்றுள்ள மத்திய தலைமை பொது கணக்காயர் இந்த விவகாரத்தினை உடனடியாக கவனிப்பாரென்று நம்புகிறோம். இதுகுறித்து சிஏஜி ஏற்கனவே தணிக்கை செய்துள்ள நிலையில், தற்போது கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளோம். சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
ரஃபேல் ஊழல்: சிஏஜியிடம் காங்கிரஸ் மனு! ரஃபேல் ஊழல்: சிஏஜியிடம் காங்கிரஸ் மனு! Reviewed by நமதூர் செய்திகள் on 03:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.