தண்ணீர்! தண்ணீர்!! (சிறுகதை) - மு. உமர் முக்தார்




போர் போடுவதற்கு லாரிகள் தெருவெங்கும் நிற்கின்றன. தினமும் ஏதாவது ஒரு வீட்டில் போர் போடும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. லாரியின் சப்தம் காலை ஆரம்பித்தால் இரவு வரை நீடிக்கிறது. அருகில் வீடு உள்ளவர்கள் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே வந்து போர் போடும் லாரியை வெறித்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். தெருவில் அல்லது கடைவீதியில் நான்குபேர் சேர்ந்து பேசினால் அதில் தண்ணீர் பிரச்சனையையே பிரதானமாக இருக்கிறது. இன்று எங்கு போர் போட்டார்கள் தண்ணீர் வந்ததா எத்தனை அடி போட்டாங்க இதுவே கேள்வி பகிர்வுகள்.

ஊரின் பெரும்பான்மையினர்களிடம் கவலை தோய்ந்திருந்தது. தண்ணீர் பிரச்சனை உச்சநிலையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. குடிப்பதற்கு மட்டுமல்ல புழங்குவதற்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. பெண்கள் குடங்களை தூக்கிக்கொண்டு தண்ணீர் வரும் இடங்களை நோக்கி விரைந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். தண்ணீர் பிடிக்கும் இடத்தில நீண்டு செல்கிறது பல வண்ணங்களில் குடங்கள் வரிசையாக நிற்கின்றன. குழாயடி சண்டையும் அனுதினமும் அரங்கேறுகிறது. அதிகமான குடங்களில் தண்ணீர் பிடிப்பவர்களை பார்த்து சில பெண்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனன்ர். நான்தான் முதலில் வந்தேன் நீ எப்படி முதலில் பிடிக்கலாம் என்ற குரல் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது.

இதற்கு எப்போதுதான் விடிவு பிறக்குமோ ஏக்கம் பலரது தூக்கத்தை தொலைத்தது. காலை மாலை இரவு எந்நேரமும் தண்ணீர் பிடிப்பதிலேயே பெண்களில் பொழுது நகருகிறது. ஒருமாதமாக சரிவர தண்ணீர் வரவில்லை. ஊராட்சி நிர்வாகம் என்ன செய்கிறது இளைஞர்கள் கோபம் கொண்டனர். போராட வேண்டும் என்றும் தங்களுக்குள் பேசிவந்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஊராட்சி நிர்வாகமும் பல இடங்களில் போர் போட்டு தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முடிந்தளவு முயன்றது. இருந்தும் பிரச்சனை தீரவில்லை. மோட்டரும் அடிக்கடி ரிப்பேர் ஆகிக்கொண்டிருந்தது. நிலத்தடியில் தண்ணீர் இருந்தால்தானே வெளியே வரும். வேறு வழி இல்லாததால் இருக்கும் நீரையும் உபயோகப்படுத்துவதற்கு போர் போட்டு உறிஞ்ச தள்ளப்பட்டனர்.  இதில் போர் போடுபவர்கள் நிலைதான் பெரும் திண்டாட்டமாக இருந்தது. பலரது இடத்தில் பல அடி ஆழத்திற்கு போர் போட்டும் தண்ணீர் ஊற்று கிட்டவில்லை. பணம் விரையமாகியதான் மிச்சம். இது கூடுதல் சோகத்தை அவர்களுக்கு அளித்தது.

பெரியோர்களின் முகங்கள் கவலைகளில் மூழ்கின. தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு வறட்சியான காலகட்டத்தை அவர்கள் பார்த்திருக்கவில்லை. "அப்போவெல்லாம் ஆத்துல கையாலே தோண்டி ஊற்றில் தண்ணீ எடுத்து வருவோம் இப்ப என்னடான்னா பெரிய பெரிய பைப் போட்டும் தண்ணீ வரமாட்டேங்குது" சலித்துக்கொண்டு பேசினார் முத்துராமன். "யாரு செஞ்ச தப்போ தெரில்ல. இறைவன் இப்படி சோதிக்கிறான்" தொடர்ந்தார். "எங்கு பார்த்தாலும் பசுமையா காட்சியளித்த ஊர்யா இது. தெற்கே இயற்கை கொஞ்சும் நீண்ட ஏரி. வடக்கே பறந்து விரிந்து செல்கிற அழகிய ஆறு. இன்னைக்கு எப்படி இருக்கு. தண்ணீ இல்லாம தூர்ந்துபோச்சு. ஆத்துல தண்ணீ வந்து பல மாசம் ஆச்சு. வீடுகட்டுவதற்கு மணல் அள்ளியே ஆறு சோர்ந்துபோச்சு. என்ன பண்றது எல்லாம் விதி" என்றார். அங்கு குழுமிருந்த பலருக்கும் அந்த பெரியவர்கள் பேசியது ஆச்சரியம் கலந்த வேதனையாக இருந்தது. 

இது போதாது என்று மழையும் தன்பங்கிற்கு தொடர்ந்து வஞ்சித்து வந்தது. மழை பெய்து பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. ஊரை சுற்றி பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கிய மழைக்காலங்களில்கூட ஊரில் மழை பொழிவதில்லை. சிறு தூரல்கள்; ஒரு அரைமணி நேரம் பூவை தூக்கி போடுவதுபோல மழை தூவியது. அவ்வளவுதான்.  மழை காலம் அது. பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இங்கு மட்டும் சூரியன் அனலை கக்கியது. வெயில் கடுமை காட்டியது. இருக்கும் கொஞ்சநஞ்ச நிலத்தடி நீரையும் தனதாக்கிக்கொண்டிருந்தது சூரியன். 

மழை இல்லாதது பலருக்கு வருத்தத்தை மேலோங்கச் செய்தது. "ஊரின் மீது ஏதேனும் சாபம் இருக்குமோ" என்று சின்னமுத்து கேட்டான். "அது உண்மையாக இருக்கலாம்" கண்ணையா பதிலுரைத்தார். அதை ஊர் வாசிகளும் நம்பத் தலைப்பட்டனர். அதற்காக பெரியோர்கள் ஏற்பாடு செய்து இறைவனிடம் கையேந்தவும், மழைவேண்டி வழிபடவும் செய்தனர். ஆறுகளில் மணல் குறைந்து சல்லிப்பாறைகள் தெரிய துவங்கின. ஏரி கருவேல மரத்தினால் சூழ்ந்து நின்றது. ஏரிக்கு தண்ணீர் வரும் பாதைகளையும் ஆக்கிரமித்து நின்றன செடிகொடிகள். கடல்போல் காட்சியளித்த ஏரி பாலைவனம்போல் காட்சியளித்தது. ஏரியை மீட்டுவதில் யாரும் அக்கறை கொள்ளவில்லை. அது தேவையற்றதாகவே பலரும் கருதினர். அதன் விளைவைதான் மக்கள் சந்தித்து வந்தனர்.

எந்நேரமும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்த ஏரி, மீன் வளர்த்த ஏரி, பரிசலில் சவாரி செய்த ஏரி, விவசாயம் செழிக்க வைத்த ஏரி காய்ந்து கிடப்பதை பெரியோர்கள் வந்து பார்ப்பதும் செல்வதுமாக இருந்தனர். "என்ன செயறது எல்லாம் அவன் செயல்" என்று மேலே பார்த்தார் கண்ணய்யா. "தம்பி இங்க வாங்க" சென்றான் அகிலேஷ். "உங்க வீட்ல நேத்து போர் போட்டிங்களே தண்ணீ வந்துச்சா; எத்தனை அடி" கண்ணையா கேட்க. "300 அடி" என்றான். "அப்படியா" வாயடைத்து நின்றார். "உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுலதான் அப்போ கிணறு ஒண்ணு இருக்கும். வற்றாத கிணறு. கடும் கோடை காலமாக இருந்தாலும் தண்ணீர் நிரம்பி நிற்கும். அதைத்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்துவோம். அங்கேயே தண்ணீ இல்லையா சோதனைப்பா" என்றார் கண்ணையா.

எப்படியாவது ஒரு மழை பொழியாதா எல்லோரும் வானத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். இடி இடித்தது. மின்னல் ஜொலித்தது. மேகக் கூட்டங்கள் அணிதிரண்டு நின்றன. "இன்னைக்கு பெரிய மழை பெய்யப்போகுது" என்றான் மாதவன். அதற்கு ஏற்றார் போல் கரண்ட் கட்டாகிவிட்டது. சிறுதுளிகளை தூவிக்கொண்டு இருந்தது மேகம். மகிழ்ச்சி கொள்ளலாமா என்று எண்ணிகொண்டு இருந்தனர் மக்கள். அந்த மகிழ்ச்சி நீண்டு நிலைக்கவில்லை. மீண்டும் ஏமாற்றத்தில் தள்ளியது. வழமைபோல் வரவேண்டிய மழையை காற்று வேறுபக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டது. நல்ல மழையை எதிர்பார்த்தவர்களுக்கு சுற்று சுழற்றிய காற்றே பரிசாக கிடைத்தது.

அந்த இரவு நிலவின் பிரகாசத்தில் ஒளிர்ந்து நின்றது. வழக்கம்போல் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்வதைப்போல் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் பிடிக்க நடையாய் நடந்தனர் பெண்கள். அருகில் போர் படும் சப்தம் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

- மு. உமர் முக்தார்
தண்ணீர்! தண்ணீர்!! (சிறுகதை) - மு. உமர் முக்தார் தண்ணீர்! தண்ணீர்!! (சிறுகதை) - மு. உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 06:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.