”நாட்டை ஆளும் தார்மீகத்தை நீங்கள் இழக்கிறீர்கள் திரு. மோடி”: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.
முதலில், இந்த விவகாரத்தைப் பொதுவெளிக்கு கொண்டு வருகையில், நமது இராணுவ ரகசியங்கள் கசிந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? அதன் வழியாக நமது தேச நலனுக்கு ஆபத்து வந்துவிடுமா? எனும் இரண்டு முக்கியமான கேள்விகள் வருகின்றன.
இந்த விவாதம் பாராளுமன்றத்தில் கேள்வியாக வைக்கப்படுவதற்கு முன்பு, பத்திரிகைகளில் அங்கும் இங்குமாக எழுதப்பட்ட போதே, நிர்மலா சீதாராமன் முதல் பிஜேபியின் மற்ற உறுப்பினர்கள் வரை, “இந்த ஒப்பந்தத்தின் முக்கியத் தகவல்களை வெளியிடுவது நமது இராணுவத்துக்கு ஆபத்தாக முடியும்”, “இதை பொதுப் பரப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் காங்கிரஸ் தேசநலனுக்கு ஊறு விளைவிக்க முயல்கிறது” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள்.
அது அப்படித்தானா என்று பார்க்க வேண்டுமானால் அதற்கு இதைப் போன்ற ஒப்பந்தங்களில் பின்பற்றப்படும் சில பொதுவான நடைமுறைகள் குறித்து நாம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும். எல்லா ஒப்பந்தங்களும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சில பிரத்யேக காரணிகளையும் சில அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கும்.
ஆனால் ஒப்பந்தங்கள் என்ற வகையில் எல்லாவற்றிக்கும் ஒரு பொதுத் தன்மை உண்டு. அந்த அடிப்படையில் மட்டும் நாம் இப்போதைக்கு இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். இந்த விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலையும் அத்துமீறலையும் புரிந்துகொள்ள அதுவே போதுமானது.
எந்த இராணுவமும், அதன் தாக்குகிற மற்றும் தற்காத்துக்கொள்கிற திறனைப் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசீலித்து, எத்தகைய ஆயுதங்களை, தளவாடங்களை செறிவூட்டிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும். எதன் அடிப்படையில் இந்த செறிவூட்டல் முடிவு எடுக்கப்படுகிறது?
நமது potential எதிரிகளின் பலம். இங்கு பலம் என்பது அவர்களிடம் இருக்கிற ஆயுதங்களின் பலம். அதை ஒப்பிட்டுதான் நமது குறைபாடுகளை நாம் பட்டியலிட்டுக் கொள்வோம். இப்போது இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் கூட, நமது potential எதிரியாக நாம் கருதும் சீனாவின் திறனை ஒப்பிட்டும், களத்தில் நிலவும் சீதோஷ்ண நிலைமைகள் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கியுமே நமக்கு என்ன மாதிரியான போர் விமானங்கள் தேவை என்கிற முடிவுக்கு வந்திருப்போம்.
இதன் முதல் கட்டம் என்னவென்றால், உதாரணத்துக்கு, நாங்கள் இத்தனை அடி உயரத்தில் பறக்கவேண்டும், இவ்வளவு ஆயுதங்களை அதில் கொண்டு செல்லவேண்டும், இவ்வளவு எரிபொருள் திறன் இருக்கவேண்டும் என்பது போன்ற சில அடிப்படையான தேவைகளை மட்டுமே இராணுவம் சொல்லும். இந்த தகவல்களின் அடிப்படையில்தான் முதல் கட்ட வரைவு தொடங்கும். இந்த நடைமுறை இராணுவத்துக்கு மாத்திரமல்ல எல்லா ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும்.
குறிப்பாக நாம் (அரசு) ஒரு எட்டு வழிச்சாலை திட்டமிடுகிறோம் என்றால், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு சாலை வேண்டும் என்பதை மட்டுமே சொல்வோம். அதற்கென்று இருக்கின்ற பிரத்யேக நிறுவனங்கள் அடுத்த கட்ட survey மற்றும் feasibility study போன்றவற்றை செய்து ஒரு ஆரம்ப கட்ட வரைவை எட்டுவார்கள். பிறகு அடுத்த கட்ட தொழில் நுட்ப விவாதங்களுக்குப் பிறகு திட்ட வரைவு முடிவடையும். எத்தனை பாலங்கள், எவ்வளவு நிலம் கையகப்படுத்துவது, இடப்பெயர்வு, திட்டம் முடிவடையும் காலம் போன்றவை தெளிவாகத் திட்டமிடப்படும்.
பிறகுதான் construction companies களத்துக்கு வருவார்கள். அவர்களது வேலை இறுதி செய்யப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையில் பணியை செய்து முடிப்பது.
ஆனால் இராணுவத் தளவாடங்கள் என்று வருகிறபோது திட்ட வரையறை, உற்பத்தி, செயல்பாட்டை கண்காணிப்பது மற்றும் களத்தில் (களம் என்றால் போர்க்களம் என்று மட்டும் அல்ல, சாதாரண காலங்களிலும் கூட) அவற்றைப் பராமரிப்பது போன்றவற்றை ஒரே நிறுவனம் தானாகவோ அல்லது தனது கண்காணிப்பின் கீழ் மற்ற கம்பெனிகளை வைத்தோ செய்வார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் கூட எங்களுக்கு என்ன மாதிரியான திறனுள்ள விமானங்கள் தேவை என்பதை மட்டுமே இராணுவம் சொல்லியிருக்கக்கூடும். அது இராணுவ ரகசியம். ஏனெனில் இராணுவத்தின் தாக்கும் திறனுடன் அது தொடர்புடையது. உங்களுடைய தேவைக்கு, எங்களது இந்தத் திறனுள்ள விமானங்களே பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லும். அந்த technical specification ரகசியம். ஏனெனில் அந்த தகவல் தாக்கும் திறனுடன் தொடர்புடையது.
ஆக, ஒரு இராணுவத் தளவாட கொள்முதல் ஒப்பந்தத்தில் அந்தத் தளவாடம் குறித்த technical specification ரகசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் ஒரு இராணுவ விமானத்தின் விலை என்பது, அதன் தாக்கும் திறனுக்கு ஏற்றாற்போல விலை கூடக் கூடியது. தாக்கும் திறன் என்பது அது சுமந்து செல்லக் கூடிய ஆயுதங்களின் எடை, வேகம், fuel Efficiency மற்றும் சில பிரத்யேக தன்மைகளால் முடிவு செய்யப்படுகிறது. ஆக இந்த அடிப்படையில்தான் negotiate செய்யப்படும் இறுதி விலை குறித்த தகவல்களில் குறிப்பிட்ட அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. திமிங்கிலங்கள் புகுந்து விளையாடும் அட்டாகாசமான ஏரியா இது.
வரிகட்டும் குடிமக்கள் ஆகிய நாம் இந்த விவகாரங்களில் கதவுக்கு வெளியேதான் நிற்கமுடியும். நிற்கவும் செய்கிறோம் அதில் கூட எந்த புகாரும் இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் நமது புகாரே வேறு. அதற்கும் இராணுவ ரகசியதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு விமானத்தின் விலையை நாங்கள் 600 கோடி ரூபாய் என்று பேசியிருந்தோம் ஆனால் இந்த அரசாங்கம் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறது என்கிற காங்கிரசின் குற்றச்சாட்டு எளிதில் நிரூபிக்கப்பட முடியாதது. இதில் பிஜேபி தவறிழைத்திருகிறது என்று சொல்வதும் சிரமம். ஏனெனில் நீங்கள் தீர்மானித்திருந்த விலை வெறும் விமானத்துக்கு மட்டும் உரியது. ஆனால் நாங்கள் ஒத்துக்கொண்டிருக்கும் இந்த கூடுதல் விலை என்பது அதனுடன் பொருத்தப்படக் கூடிய ஆயுதங்களையும் உள்ளடக்கியது என்று நிர்மலா சீத்தாராமன் சொல்வதில் உண்மையிருக்கிறது.
கூடுதலாக சொல்லப்படும் விலையில் விலையில் உண்மை இருக்கிறது என்று நாம் ஏற்றுக்கொண்டால் பிறகு பொய் எங்கிருக்கிறது, ஊழல் குற்றச்சாட்டு எங்கு வருகிறது என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. அதுதான் அடுத்த கட்டம்.
இந்த ஒப்பந்தத்தில் ஆரம்ப கட்ட வரைவுகள் முடிவடைகின்றன. ஒப்பந்தம் கோரப்படுகிறது. ரஃபேல் எனும் போர் விமானங்களைத் தயாரிக்கும் Dassault Aviation எனும் நிறுவனம் ஒப்பந்தத்தை வெல்கிறது. எந்த ஒப்பந்தமும், அந்த ஒப்பந்தத்துக்கு உரிய பிரத்யேகத் தன்மையைக் கொண்டவையாக வடிவமைக்கப்படும் என்று மேலே சொல்லியிருக்கிறேன்.
இதில் உள்ள பிரத்யேகத் தன்மையே, இந்த ஒப்பந்தத்தின் வழியாக, வெறும் போர்த் தளவாடத்தை வாங்குவது மட்டும் அல்லாது வேறு வகையில் நாம் சில பலன்களை அடையவேண்டும் என்று சென்ற மன்மோகன் அரசாங்கம் திட்டமிட்டிருந்ததே.
அவைதான் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்தாக இருக்கும் “இந்த ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அளவு தளவாடங்களை டெண்டரில் வெற்றியடையும் கம்பெனி இந்தியாவில் தயாரிக்கவேண்டும், அதை இந்திய நிறுவனத்தின் கூட்டுடன் செய்யவேண்டும், மேலும் குறிப்பிட்ட தொழில்நுட்பத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும்” என்கிற நிபந்தனைகள்.
இந்த இடத்தில் நாம் கவனிக்க ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்ன?
அவ்வாறு கூட்டு நிறுவனமாக தெரிவு செய்யப்படும் இந்திய நிறுவனத்துக்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்கிற நிபந்தனைகள். நூறு சதவீதம் உறுதியாக இந்த நிபந்தனைகள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கும். இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் சென்ற UPA அரசாங்கம் வேண்டுமென்றே அதை இறுதி செய்யாமல் விட்டிருக்கிறது என்று பொருள். இது திமிங்கிலங்கள் புகுந்து விளையாடக் கூடிய மற்றொரு இடம்.
ஒரு ஒப்பந்தத்தில் இத்தகைய நிபந்தனைகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஏன் முக்கியம்?
என்னதான் ஒப்பந்தம் Dassault Aviation க்கு வழங்கப்பட்டாலும், அவர்கள் தெரிவு செய்யக்கூடிய இந்தியக் கம்பெனி, தகுதியுடையதாகவும், குறித்த காலத்திற்குள் வேலையை செய்து முடிக்கும் திறனுள்ளதாகவும், அதற்கு வேண்டிய உள் கட்டமைப்பு வசதிகள் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஆர்டர் வழங்கிய நிறுவனத்துக்கு உண்டு. இந்த இடத்தில் ஆர்டர் வழங்கிய நிறுவனம் இந்திய அரசு.
உதாரணத்துக்கு, Dassault Aviation ஒரு தரமற்ற நிறுவனத்துக்கு subcontract அல்லது joint venture (துணை ஒப்பந்தம்; இப்போது Reliance பெற்றிருக்கிறதே அதுதான்) வழங்கி விட்டால் அந்த இந்திய நிறுவனம் தோல்வியடைந்துவிட்டால் அந்தத் தோல்வி Dassault Aviation ஐ மாத்திரம் அல்ல இந்தியாவையும் பாதிக்கும் என்பதே அதற்குக் காரணம்.
மேலும் விமானப்படை விமான உற்பத்தி என்று வருகிறபோது, அனுபவமற்ற கம்பெனி செய்யும் சிறு கூட தவறு களத்தில் மிகப்பெரிய பின்னடவை உண்டாக்கும் வல்லமையுடையது. அதனால்தான் ஒரு subcontract கம்பெனி தரமுடையதாக, அனுபவமுடையதாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை உறுதி செய்யவேண்டிய கடமை மக்களின் வரிப்பணத்தில் இத்தனைப் பெரிய தொகையைச் செலவிடும் அரசுக்கு இருக்கிறது.
இந்த சூழலில்தான், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி Reliance க்கு இந்திய ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்தார் என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. எந்த எடிப்படையில் reliacne இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்வி வருகிறபோதுதான், “இராணுவ ரகசியம்”, “தேச பாதுகாப்பு” என்று ஆளும் பிஜேபி அரசு அலறுகிறது. இது மிகப்பெரிய பொய்.
ஏனெனில், மேலே சொல்லியிருப்பது போல இந்த விமான ஒப்பந்த விவகாரத்தில் அதன் technical specification தவிர மீதி எதுவுமே ரகசியம் கிடையாது. ஒரு subcontract கம்பெனிக்கான தகுதியாக அந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த அளவுகோல்கள் என்ன வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை மக்களிடம் சொல்வதில் எந்த பாதுகாப்பு ஆபத்தும் இல்லை. ஏனெனில் அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி நாம் வாங்கப் போகும் போர் விமானங்களின் செயல்திறனை யாரும் அனுமானிக்க இயலாது. ஆக, அது மறைக்கப்பட வேண்டிய தகவல்கள் எனும் பட்டியலிலேயே வரவேண்டியதில்லை.
பிறகு ஏன் அதை வெளிப்படையாக சொல்வதற்கு இந்த அரசு மறுக்கிறது? ஏனெனில் அவ்வாறு சொன்னால், முதற்கட்டத்திலேயே இதில் நடந்திருக்கிற favorism, அதாவது Relianceக்கு மோடி வழங்கிய சலுகை அம்பலப்பட்டுவிடும்.
மேலும் இந்தெந்த தகுதிகள் அந்த இந்தியன் கம்பெனிக்கு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தால், அந்தத் தகுதியை வைத்திருக்கும் மற்ற இந்தியக் கம்பெனிகளை Dassault Aviation அணுகியதா என்ற கேள்வி வரும்? மேலும் அப்படி அது அணுகாமல் நேரடியாக Reliance ஐ அது தேர்ந்தெடுத்திருந்தால், Dassault Aviation ன் அந்த முடிவில் குறுக்கீடு செய்வதற்கும் அந்த suncontract தகுதியுள்ள ஒரு கம்பெனிக்கு செல்வதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசிற்கு முழு அதிகாரம் உண்டு. அதை இந்திய அரசு செய்ததா என்கிற முக்கியமான கேள்வி வருகிறது? அதனால்தான் எல்லா வகைகளிலும் மோடி இதில் சிக்குகிறார் என்று சொன்னேன்.
மட்டுமல்லாது இந்தியாவை ஒப்பிட பிரான்ஸின் சட்டதிட்டங்கள் இந்த விஷயங்களில் மேம்பட்டவை. வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் தருபவை. நீங்கள் எந்த அடிப்படையில் Reliance ஐ உங்களது இந்தியப் பங்குதாரராக தேர்ந்தெடுத்தீர்கள் என்று Dassault Aviation டம் கேட்கப்பட்டால், அவர்கள் “இந்தெந்த தொழில்நுட்ப வழிகாட்டு நெறிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தோம்” என்று மட்டுமே சொல்ல முடியும்.
அந்த நெறிமுறைகள் என்ன அவை எங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்?
இரண்டு இடங்களில் அவை இருக்கும் சாத்தியங்கள் உண்டு. ஒன்று Dassault Aviation ஒரு நிறுவனமாக, தான் பின்பற்றுகிற பிரான்ஸ் சட்ட அடிப்படையிலான வழிகாட்டு நெறிமுறைகள். இரண்டாவது இந்த ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியா வரையறுத்திருக்கிற இந்திய சட்ட அடிப்படையிலான வழிகாட்டு நெறிமுறைகள். இந்த இரண்டு நெறிமுறைகளுக்கும் இடையில் முரண்பாடு எதாவது வந்திருந்தால், அவை விவாதிக்கப்பட்டு பொதுக் கருத்து எட்டப்பட்டிருக்கவேண்டும். அவை ஆவணமாக்கப்பட்டிருக்கவேண்டும்.
இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லாது தம்மிடம் விமானத்தை வாங்குகிற ஒரு நாட்டின் பிரதமர் கைகாட்டுகிற நிறுவனத்துடன் Dassault Aviation ஒப்பந்தம் செய்துகொள்ளகொள்ள முடியாது. ஏனெனில் அது சட்ட மீறல். ஒப்பந்தம் இந்தியாவுடன் தானே தவிர மோடியுடன் அல்ல. இங்குதான் தவறு நடந்திருக்கிறது. விசாரணை என்று வருகிறபோது பிரான்ஸின் முன்னால் அதிபர் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அதற்கான பதிலைத்தான் அவர் இப்போது சொல்கிறார்.
“இந்தியா எங்களுக்கு வேறு யாரையும் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கவில்லை, Relianceஐ தேர்ந்தெடுத்தது அவர்கள்தான்” என்கிறார். இங்கு அவர்கள் என்றால் யார்? இந்தியப் பிரதமர் மோடியைத்தான் அவர் நேரடியாக சொல்கிறார்.
இன்னொன்றும் இங்கு கவனிக்கத் தக்கது. அதை ஏன் அவர் இப்போது வெளிப்படையாக சொல்கிறார்?
இந்திய பிரதமர் சொன்னார் என்பதற்காக Dassault Aviation நிறுவனம் அதை இறுதி முடிவாக ஏற்று தனது இந்திய நிறுவனத்தை தேர்வு செய்துகொள்ள முடியாது. காரணம் பிரதமர் கைகாட்டும் இந்திய நிறுவனம் ஏதாவது காரணத்தின் பொருட்டு தோல்வியடைந்தால், அந்த நிறுவனத்தின் தோல்வி என்பது Dassault Aviation தோல்வி, Dassault Aviationன் தோல்வி என்பது பிரான்ஸின் ஆயுத தளவாட உற்பத்தித் திறனின் மீதான தோல்வியாக மாறும் சாத்தியம் கொண்டது.
அதனால் பிரான்ஸ் அவ்வளவு எளிதாக தனது இந்தியப் பங்காளியாக relaince ஐ ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் மோடி நேரடியாக அங்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவரது அழுத்தம் இல்லாமல் இந்த ஒப்பந்தம் relainceக்கு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், அதன் மூலம் மோடி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் நாம் முடிவுக்கு வருவது அங்ஙனம்தான்.
மோடியின் இந்த அத்துமீறலால் விளையும் நேரடியான பாதிப்புகளை நேற்றைய பதிவில் பார்த்தோம். இதன் மறைமுகமான பாதகங்கள் என்ன?
இந்தத் துறையில் அனுபவமே இல்லாத ஒரு நிறுவனத்தை இந்தியப் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மோடி கேட்டுக்கொண்டபோது, அதற்கு பிரதிபலனாக என்ன சலுகையை Dassault Aviation க்கு அவர் விட்டுத் தந்தார் என்பது விசாரணைக்கு உரியது.
Dassault Aviatio எந்த அனுபவமும் இல்லாத reliance உடன் கூட்டு சேர்வதன் வழியாக தனது நம்பகத்தன்மை விஷயத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறது என்றால், அதற்கு பிரதிபலனாக அந்த ஒப்பந்தத்தில் சில தளர்வுகளை – compromises – அது சாதித்துக்கொண்டதா எனும் கேள்வி வருகிறது?
அந்த தளர்வுகள் நாம் வாங்கும் விமானங்களின் தரத்தில் பாதிப்பு செலுத்தும் அளவுக்கு இருந்திருக்கும் வாய்ப்பு உண்டா என்பது போன்ற கேள்விகள் கவனிக்கத்தக்கவை. இவை எல்லாம் மதிப்பு வாய்ந்த குற்றச்சாட்டுகள்.
இப்படியான கேள்விகள் எழுவதைத் தவிர்ப்பதன் பொருட்டுதான் ஒரேயடியாக ‘’இராணுவ ரகசியம், தேச பாதுகாப்பு’’ என்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் மறைக்கப் பார்க்கிறார்கள்.
அதனால் ஒரு பொது சமூகமாக நாம் இந்த அரசை நோக்கி, குறிப்பாக மோடியை நோக்கி எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன என்பதை இவ்வாறு தொகுத்துக் கொள்வோம்.
நீங்கள் வாங்கும் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் – technical specification – எங்களுக்குத் தேவையில்லை. அதை ரகசியம் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அந்த ஆர்டரைப் பெறும் இந்தியக் கம்பெனிக்கு என்னென்னத் தகுதிகள் இருக்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் வரையறுத்தீர்கள்?
அந்த வரையறைகளின் அடிப்படையில் relaince தகுதி பெறுகிறதா?
Relaince தகுதி பெறுகிறது எனில் அவ்வாறு தகுதி பெரும் மற்ற இந்தியக் கம்பெனிகள் எவை எவை? பரிசீலனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட கம்பெனிகள் எவையெவை?
வேறு தகுதி வாய்ந்த கம்பெனிகள் இருப்பின் அவற்றிற்கு இந்த ஒப்பந்தம் போகாமல் ரிலையன்சுக்குப் போனது ஏன் ?
Relaince ஐ தேர்ந்தெடுத்ததில் இந்திய அரசின் குறுக்கீடு இல்லை, அது முழுக்க முழுக்க Dassault Aviation ன் உரிமை என்றால், அவர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் சொல்கிறதா?
ஆமாம் அந்த ஒப்பந்தம் அவ்வாறுதான் சொல்கிறது என்றால் தேச நலம் குறித்து சிந்திக்கும் ஒரு அரசு மிகப்பெரிய நிர்வாகத் தவறை இழைத்திருக்கிறது என்கிற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அந்த அடிப்படையில் நீங்கள் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டிருக்கிறீர்கள் என்றுதானே பொருள். அப்படியென்றால் இந்த நாட்டை ஆளும் தார்மீகத்தை நீங்கள் இழக்கிறீர்கள் என்று தானே ஆகிறது?
”நாட்டை ஆளும் தார்மீகத்தை நீங்கள் இழக்கிறீர்கள் திரு. மோடி”: ஜி. கார்ல் மார்க்ஸ் ”நாட்டை ஆளும் தார்மீகத்தை நீங்கள் இழக்கிறீர்கள் திரு. மோடி”: ஜி. கார்ல் மார்க்ஸ் Reviewed by நமதூர் செய்திகள் on 06:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.