காற்றாலை மின்சார ஊழல்: தங்கமணி பதவி விலக வேண்டும்!

காற்றாலை மின்சார ஊழல்: தங்கமணி பதவி விலக வேண்டும்!

உற்பத்தியே இல்லாத காற்றாலையிலிருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் ஊழல் செய்த மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நடைபெறும் ஊழல்களையும், தமிழகத்தில் இருக்கும் மின் வெட்டையும் சுட்டிக்காட்டி கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார் ஸ்டாலின். இதற்கு மறுப்பு தெரிவித்த தங்கமணி, ‘காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்ததால் சில இடங்களில் அரைமணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது’ என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி, மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று வரும் மிகப்பெரிய ஊழல் அதிர்ச்சியடைய வைக்கிறது” என்று கூறியுள்ளவர், மின்சாரத் துறை முழுவதுமாக ஊழல் மயமாகி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வின்போது, இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெறாத மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டதாக, தூத்துக்குடி மேற்பார்வைப் பொறியாளரே 29.11.2016 அன்று கடிதம் அனுப்பி, அதனடிப்படையில் அரசுப் பணம் சூறையாடப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2016 ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட காற்றாலை மின்சாரத்துக்கு இப்படி ‘போலியான - பொய்யான கணக்கு’ தயார் செய்யப்பட்டு 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது” என்றவர், தூத்துக்குடியில் போலி கணக்கு மூலம் மின்சாரம் சப்ளை செய்யாத நிறுவனத்துக்கு, 9 கோடி ரூபாய் ஏன் வழங்கப்பட்டது? மின்துறையில் என்ன தவறு நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்தக் காற்றாலை மின்சார ஊழல் பற்றி இதுவரை வாய் மூடி இருப்பது ஏன்? ஊழல் செய்வதற்குத் துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தடையாக நிற்பது ஏன்? வராத மின்சாரம் வந்ததாக கணக்குக் காட்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மேற்பார்வை பொறியாளரே கடிதம் எழுதியது யாருடைய தூண்டுதலால் என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தூத்துக்குடி வட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நடக்கும் ‘காற்றாலை மின்சார’ ஊழல் குறித்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின், “மாநிலமே மின்வெட்டு அச்சத்திலும் நெருக்கடியிலும் இருக்கும்போது, இப்படியொரு முறைகேட்டுக்கும், ஊழலுக்கும் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் துணைபோயிருக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி பொறுப்பேற்று பதவி விலகி, ‘போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல்’ குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
காற்றாலை மின்சார ஊழல்: தங்கமணி பதவி விலக வேண்டும்! காற்றாலை மின்சார ஊழல்: தங்கமணி பதவி விலக வேண்டும்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.