சிந்தனையாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை!

சிந்தனையாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை!

நாட்டில் சிந்தனையாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (செப்டம்பர் 26) கூறியுள்ளார்.
தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து மறைந்த திலீபனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகத்தில் திலீபனின் உருவப்படத்திற்கு வைகோ மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் சிந்தனையாளர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. மதச்சார்பின்மை கொள்கையை வலியுறுத்திய கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கல்பூர்கி ஆகியோர் இந்துத்துவா சக்திகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மதச்சார்பின்மையைச் சிதைத்து, நல்லிணக்கத்தைக் குலைக்க சதி நடக்கிறது. இந்துத்துவா சக்திகளின் பின்னணியில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு வருகிறது.
சென்னை, திருச்சி எனப் பல இடங்களில் பெரியார் சிலை அவமதிக்கப்படுகிறது. இதற்கு முழு காரணம் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆவார். கருணாஸ் பொது அமைதிக்கு விரோதமாகப் பேசினார் என்று கூறி அவரைக் கைது செய்த காவல்துறையும், அரசும் ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய வைகோ, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை ராஜ் பவனில் சென்று ஹெச்.ராஜா சந்திக்கிறார். காவல் துறை உதவியுடன் மேடையில் பேசுகிறார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகில் எங்கே மனித உரிமை மீறல் நடந்தாலும் அதைச் சுட்டிக்காட்டுகிற உரிமை, அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. அந்த வகையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கருத்துகளைச் சொல்லிவிட்டு வந்த வேளையில், அவர் மீது 30வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரை இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கட்டிடத்தில் சிறை வைத்துள்ளனர். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை யாரையும் சந்திக்க விடுவதில்லை. அவருக்கு உணவும் வழங்குவதில்லை. ஏதோ ஒரு நோக்கத்தோடு திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார் வைகோ.
சிந்தனையாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை! சிந்தனையாளர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 06:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.