மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும்: மன்மோகன்

மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும்: மன்மோகன்

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே நீதித் துறையின் பிரதான பணி என குறிப்பிட்ட மன்மோகன் சிங், ராணுவத்தில் மதவாதமோ அரசியலோ கலந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ சிறுபான்மையினருக்கு, குறிப்பாக மத சிறுபான்மையினருக்கு வழங்கும் விதிமுறைகளை கொண்டே நாகரீக சமூகம் அறியப்படுகிறது மற்றும் வரையறுக்கப்படுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவுக்கு புதிதாக அரசியல் சாசனம் எழுதும்போது இது தொடர்பான பிரச்சினைகளை நமது தலைவர்கள் எதிர்கொண்டனர்.

‘எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இந்தியருக்கும் இந்நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. இந்தியாவை தனது தாய்நாடாகக் கருதும் இஸ்லாமியர்களை இந்நாடு வரவேற்கிறது. அவர்களுக்கு அரசு நிச்சயம் பாதுகாப்பு வழங்கும்’ என்று நேரு கூறியிருந்தார். தான் தலைமை பொறுப்பில் இருக்கும்வரை இந்தியா இந்து நாடாக மாறாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது மறைவுக்கு பின் பல்வேறு பிரச்சினைகளை நமது மதச்சார்பின்மை கொள்கை சந்தித்து வந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு நமது மதச்சார்பின்மைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.
சுயநலமும், பொறுப்பற்றத் தன்மையும் கொண்ட அரசியல்வாதிகள் சிலர், நமது அரசியல் நடைமுறையில் மதவாதம் எனும் கிருமியைப் பரப்பி வருகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியாக இருப்பது மதச்சார்பின்மையே. அதனை பாதுகாக்க வேண்டிய இத்தகைய முதன்மையான பணியில் இருந்து நீதித்துறையின் கவனம் திரும்பிவிடக் கூடாது.

மதச்சார்பின்மைக்கு நமது ராணுவம் அற்புதமான எடுத்துக்காட்டு. அரசியல், மதவாதம் கலப்பு இல்லாத மிகச் சிறப்பான வரலாறு, நமது ராணுவத்துக்கு இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் ராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்காமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதில் ஊடகங்களுக்கும் சம பங்கு உள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டு மக்களுக்கு கல்வியளித்தல், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதும், மதச்சார்பின்மை மாண்புகளையும் நடைமுறைகளையும் காப்பதும் அரசியல் கட்சிகளின் பணியாகும் ” என்று அவர் கூறினார்.
மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும்: மன்மோகன் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும்: மன்மோகன் Reviewed by நமதூர் செய்திகள் on 06:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.