துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி
‘கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்…’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம்.கடந்த ஏப்ரல் 5ம் திகதி புதுக்கோட்டை சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தினால் அவர் எழுதுவதன் பொருட்டான வரையறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆதிக்க சாதி ஒடுக்குமுறை பற்றிய அவரது கருத்துகளின் பொருட்டு குடும்பத்தோடு வருடக்கணக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் துரைகுணா தற்போது பொய்க்குற்றச்சாட்டின் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவிக்கிறார்.
தொடர்ச்சியாகத் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரளித்து வருபவர். அரசியற் கருத்துகளை முன் வைப்பவர். ஒடுக்கப்படுபவர்களுக்கான அவரது செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான வழிவகைகளை அதிகாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. 36 பக்கங்களைக் கொண்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல். சங்கரனின் மகன் அப்படி என்ன மிகப்பெரும் தவறை அந்த ஊரில் செய்துவிட்டான்?
நாளைக்கு கூடிப்பேசி தீர்ப்பை வழங்குவதாக ஆதிக்கசாதியினர் சொல்வதும் அதைத் தொடர்ந்து கட்சிக்காரனை அழைத்து வரவேண்டாம் இது ஊர்ப்பிரச்சனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்ளுவோம் என்பதாக அவர்களைத் தொடர்ந்து தம் தீர்ப்பைக்கேட்கும் குடிகளாகவே வைத்திருக்க அந்தரப்படுவதுமாக ஒரு பக்கம் அடுத்த நாள் விசாரணை பற்றி சொல்லப்படுகிறது. கட்சியினர் இளைஞர்களை விழிப்படையச் செய்வதும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது.
‘ என்னைக்கி காட்டுவிடுதியான் இந்த ஊருக்குள்ளே இந்தக் கமிணாட்டிக்கட்சியை கொண்டு வந்தானோ அன்னையிலேர்ந்து இந்த ஊரு குட்டிச் சுவராப் போச்சி, பேண்டு சட்டையலப் பொட்டுக்கிட்டு போனு ஒயற காதுல மாட்டிக்கிட்டு இவனுக பண்ற அட்டகாசம் இருக்கே சே..சே…தாங்க முடியலே.நம்மக்கிட்டே காவைத்து கஞ்சிக்கி கம்முகட்டுல துணிய வைச்சிக்கிட்டு கால் கடுக்க நின்னப்பயலுவ இன்னைக்கி காரூலப் போனா எப்புர்றா ஊருல மழை பேயும்’ என்றும் ஆதிக்கசாதியினர் பேசுவதை துரைகுணா எழுதியது இற்றைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னான கதையில் தான். இது எப்பவோ நடந்த பழைய கதையில்லை.
இந்நாவலில் அதிகமும் ஆளுக்காள் உரையாடல்களைச் செய்வதைக் கொண்டு தான் கதை செல்கிறது. மனிதர்கள் தம் ஆற்றாமைகளை, பயத்தை, ஒடுக்குமுறைகளை அவர்களது கதைகளால் தம் மொழியில் வெளிப்படுத்துகின்றனர்.
மறுபுறமாக, அடுத்த நாள் என்ன நடக்கப் போகிறது?அப்படி என்ன தவறைச் சங்கரன் மகன் செய்து விட்டான்? இவர்கள் கூடிக்கூடிப் பேசுமளவு என்ன தான் அவன் செய்த பிழை? என்ற கேள்வி படிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்துவதோடு அம்மனிதர்களின் வார்த்தைகள் அந்த ஊரைப்பற்றிய சித்திரத்தை நமக்குத் தந்தும் விடுகின்றன.
‘மதியம் நேரம் மடிந்து மாலை நேரம் வந்தது. அம்பலப்புளி மரத்தடியில்…சரம்மாறியான கேள்விகளுக்கு முன் சங்கரன் கொதிக்கிற எண்ணெயில தடுக்கி விழுந்த குழந்தை மாதிரி துடிதுடித்து மனம் அனத்தி நின்னான்? தான் பெற்றப் பிள்ளை செய்த பெரும் தவறை நினைத்து’
‘எங்கே வந்து முடிய வேண்டியப் பெரச்சன? என் ஊட்டுல வந்து விடிஞ்சிருச்சி. நாளைக்கி என்ன நடக்கப் போகுதோ? என்று கிட்டிப்போட்டு உதைக்கென உதைத்துக் கொண்டு இருந்தது சங்கரன் மனசுல…’ என எழுதியதைப் படிக்கும் நமக்கும் அப்படியென்ன பாதகத்தை அந்தப் பிள்ளை செய்தான் என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.
இந்நூலின் மனிதர்கள் தங்களது இயலாத்தனங்களை காலாதிகாலமாக வழக்கமெனச் சொல்லப்பட்டுப் பழக்கமானவைகளைச் சுமந்து வாழும் நிலையின் பொருட்டு, குமுறிப் பேசுபவற்றை இயல்பான மொழியில், சிலேடைப்பேச்சுகளில் இயலாமைகளோடும் போராட்டங்களோடும் முன்வைப்பதாயிருக்கிறது.
தொடர்ந்து ஆற்றாமையோடு அதை வாசித்தபடி போனால் கதையின் முடிவில் தகப்பனும் தாயுமாக அவன் செய்த செயலையிட்டு அவனை ஊரை விட்டே தப்பிப்போகுமாறு பொதுகாப்பாய் அனுப்பிவிட்டு தாயும் தகப்பனும் நஞ்சருந்திச் சாகுமளவு ஆதிக்கசாதியினரின் ஒடுக்குதல்கள் இருப்பதும் பெரும் மன அவசத்தைத் தருகின்றது.
தாம்பாளத்தைத் தொட்டு திருநீறு பூசியதற்காகச் சங்கரனின் மகனைப் பூசாரி அடித்ததும் அதை விட தாம்பாளத்தை அவன் எப்படித் தொடலாம் என்ற பிரச்சனை ஊரையே கலவரப்படுத்தவதுமாக எழுதப்பட்ட கதையில் நடந்த மற்றுமொரு உரையாடல் துரைகுணாவையே ஊரைவிட்டு விலத்தி வெளியேற்றக் காரணமாகியதொன்றாய் அவரது குடும்பத்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என ஊரார் வரைந்த ஓவியம் தொடர்பாகப் படித்தவற்றிலிருந்து அறியமுடிகிறது.
இந்நூலுக்காக 2015ம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கியதன் பொருட்டு துரை.குணா ’என்னை அடித்து ஊரை விட்டு ஒதுக்கி விரட்டியடித்த என் ஊர் மக்களுக்கே, இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன்’ என்றவாறாக எழுதிய வரிகள், அவர் தன் சனங்களிடமிருந்தும் புறக்கணிக்கப்பட்ட வலியை வேதனையைக்காட்டுகிறது.
இப்போது இரு நாட்களாகப் பொய்க்குற்றச்சாட்டில் புதுக்கோட்டைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் துரை குணா.
அதிகாரங் கொண்ட காவற்துறையினரின் நியாயம் சொல்ல முடியாத கைது துரை.குணாவுடைய எழுத்துகள் செயற்பாடுகளின் பொருட்டான அதிகாரவர்க்கத்தின் அநீதியும் மனிதவுரிமை மீறலுமாகும்.
ஊரார் வரைந்த ஓவியம்
கீழாண்ட வீடு வெளியீட்டகம்
விநியோக உரிமம் : கருப்புப் பிரதிகள் – தலித்முரசு
விலை ரூ.40
தர்மினி எழுத்தாளர்.
துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:37:00
Rating:
No comments: