‘கொலை மாநிலமா தமிழகம்’? - கண்டிக்கும் தலைவர்கள்
மென்பொருள் நிறுவனப் பொறியாளர் சுவாதி படுகொலையும், சேலம் ஆசிரியை வினுப்ரியா தற்கொலையும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. இந்நிலையில், இந்த சம்பவங்களையொட்டி தமிழக அரசின் செயல்பாடுகள்மீது கடும் கண்டனங்களைத் தொடுக்கின்றனர் தலைவர்கள்.
திமுக தலைவர் கருணாநிதி :
தமிழகத்தில் பட்டப் பகலில் நடைபெற்றுவரும் படுகொலைகளில் ஒன்றாக, கடந்த 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண், பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில் நடைபெற்ற இந்தப் படுகொலைகுறித்து தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் போலீசுக்கு எதிராக வந்துள்ளன.
சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.கிருபாகரன், தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு, சுவாதி கொலைகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் 10 கேள்விகள் கேட்க வேண்டுமெனக் கூறி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தைப் படித்த தலைமை நீதிபதி கவுல், இந்தக் கடிதத்தையே ஒரு மனுவாகக் கருதி, தாமாக முன்வந்து, வழக்கு பதிவுசெய்து உத்தரவிட்டிருக்கிறார். அந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன் தனது கடிதத்தில் எழுப்பியுள்ள பத்துக் கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
நீதிபதி கிருபாகரன் தலைமை நீதிபதிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், சுவாதியைப் பாதுகாக்கத் தவறியதற்காக சுவாதியின் பெற்றோருக்கு ரெயில்வே அமைச்சகம் ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது? என்றும் கேட்டிருக்கிறார்.
சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்டதைப்போல, சேலத்தில் வினுப்ரியா என்ற 22 வயது ஆசிரியையின் படத்தை யாரோ மாற்றி, ஆபாசமாக வெளியிட்டதால், அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெற்றோர் கலெக்டரைச் சந்தித்து கதறியிருக்கிறார்கள்.
பத்திரிகைகளில் எல்லாம் தமிழகத்தில் பட்டப் பகலில் நடைபெறும் இப்படிப்பட்ட வன்முறைகள்பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. இப்படிப்பட்ட சம்பவங்களின் காரணமாக மறைந்தவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, போலீசார் ஆட்சியிலே இருப்போருக்கு பாதுகாப்புப் பணியிலே ஈடுபடுவதும், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதும் மட்டுமே தங்கள் பணி என்று நினைக்காமல், சாதாரண பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிற பணியிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அப்படி ஈடுபடாமல் இருந்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
சுவாதி கொலை செய்யப்பட்டபின், கொலையாளியை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, இந்தக் கொலையே நடக்காமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் தமிழக அரசு காட்டும் அக்கறையை நிரூபிப்பதாக அமைந்திருக்கும்.
பொது இடங்களில் மக்களைப் பாதுகாக்க போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வெளிப்படுத்தும்வகையில்தான், மக்களின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் 10 வினாக்களை எழுப்பியிருக்கிறது. இவற்றுக்கு தமிழக அரசால் பதிலளிக்க முடியாது. காரணம், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2012ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்குப்பின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்புக்காக 13 அம்ச திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அதில், 12ஆவது திட்டத்தில், ''14.12.2012 அன்று நகராட்சி நிர்வாகத் துறையினால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பொதுக் கட்டடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் (CCTV) நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பெண்களுக்கு இன்னல்தரும் நபர்கள் அல்லது அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
மேலும், 13ஆவது திட்டமாக, ''பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்குத் தொல்லைகொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தை சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணித்து, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது. இந்த இரு அறிவிப்புகளை செயல்படுத்தியிருந்தாலே சுவாதிக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு செயல்படுத்தாத அரசாக தமிழக அரசு இருப்பதால்தான் பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. மக்களைப் பாதுகாப்பதில் அனைத்து வழிகளிலும் அதிமுக அரசு தோற்றுவிட்டதற்கு இதுவே உதாரணம்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி:
சென்னையில் ஆள் நடமாட்டம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் பொறியாளர் ஸ்வாதி அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பல ஆயிரம் கோடிகளை செலவு செய்யும் அரசு, பொது இடங்களில் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
அதேநேரத்தில், இந்தக் கொலை சம்பவத்தை திசை திருப்பி, மதச்சாயம் பூசி சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும்நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகள்மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்வகையில் சமூக வலைதளத்தில் பதிவிடும் அத்தகைய நபர்களை சைஃபர் கிரைம் போலீசார் கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால், சமீபகாலங்களில் அத்தகையவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதில் சைஃபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. இதற்கு, சேலத்தில் நடைபெற்ற வினுப்ரியாவின் தற்கொலை சம்பவம் ஒரு உதாரணமாகும். தமிழக அரசும், காவல்துறையும் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற சமூக விரோதிகளை அடக்கி ஒடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் :
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் கூறுகிறார். அவர் பொறுப்புவகிக்கும் காவல்துறையின் செயல்பாடுகள் கவலை தரத்தக்கதாக உள்ளது . காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது, மீண்டும்மீண்டும் தான் அவமானப்படுத்தப்படுவது போன்ற காரணங்களால், இச்சமூகம் தன்னை வாழ வைக்காது என்று கருதி வினுப்ரியா தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இக்கொடிய சம்பவம் நடைபெற்றிருக்காது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. வேலூர் சிறையில் காவலராகப் பணிபுரியும் மூர்த்தி, தனது உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம், பத்து தினங்கள் விடுப்புக் கோரியுள்ளார். தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனவும் கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர், விடுப்பு அனுமதிக்கு ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். காவல் துறையில் பணிபுரிபவர்களே தங்கள் மேல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் எனில், பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு லஞ்சம் இல்லாமல் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
‘கொலை மாநிலமா தமிழகம்’? - கண்டிக்கும் தலைவர்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:27:00
Rating:
No comments: