ஷா ஆலம்: புரட்சியாளர்களின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்


காற்றிலும், மழையிலும் சைக்கிளில் பயணிக்கும் இவர், மறக்கப்பட்ட பல முக்கிய மனிதர்களின் வாழ்க்கையைச் சுமந்துசெல்கிறார். ஆவணப்பட இயக்குநரும், சமூக ஆர்வலராகவும் உள்ள ஷா ஆலம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஸ்டி என்ற பகுதியிலிருந்து வந்து, ஃபசிதாபாத் மற்றும் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் கல்வியை முடித்தார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, 1920ஆம் ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் இருந்த அஷ்பாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில், ஜெண்டாலால் தீக்‌ஷித் உள்ளிட்ட புரட்சியாளர்களின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.
2006ஆம் ஆண்டு முதல் 'ஆவம் கா சினிமா' என்ற அமைப்பின்மூலம் சிறு நகரங்களிலும், முக்கிய ஆவணப்படங்களைத் திரையிட்டு வருகிறார். "எங்களுக்கென்று அமைப்பின் பொறுப்பாளர்களோ, எந்த வடிவமோ கிடையாது. மக்கள் தங்களால் இயன்றளவு உதவுவதன்மூலம் இது சாத்தியமாகிறது" என்கிறார். ஆனால், யாரும் எதிர்பார்க்காதளவு இந்தத் திரையிடல் ஜெய்ப்பூர், டெல்லி, வர்தா, வாரணாசி என பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.
ஆவணப்படங்கள் மட்டுமின்றி புகைப்படப் போட்டிகளையும், நாடகங்களையும் இக்குழுவினர் நடத்துகின்றனர். இக்குழுவுடன் இணைந்து அனுஷா ரிஸ்வி, அச்சார்யா சதேந்திர தாஸ், சீமா பரிகர், அன்வர் ஜமால் என பலரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்த ஆவணப்பட திரையிடல் கிராமத்தில் திறந்தவெளிகளிலும், சாலை சந்திப்புகளிலும் நடப்பவை. சாதாரண மக்களைக் கவரும்வகையிலான ஆவணமாக இவை அமையாமல், பெரும்பாலும் உண்மைநிலையை வெளிப்படுத்தும்வகையில் அமைபவை எனும்போதிலும், ஒருமுறைகூட மக்களின் கவனத்தை ஈர்க்காமல் அமைந்தது இல்லை. "2008-2011களில் ஃபசீதாபாத்தில் வாழ்ந்தபோது, ஆவம் கா சினிமா மூலமாக வார் அண்ட் பீஸ், த மேன் ஹூ மூவுட் மவுண்டைன், இந்தியா அன்டச்சுடு உள்ளிட்ட ஆவணங்களைப் பார்த்துள்ளேன்”.
கண்டுபிடிப்புகளும், ஆதாரங்களும்:
ஆவம் கா சினிமா உருவாக்கியுள்ள போஸ்டரில், கான் மற்றும் பிற புரட்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஃபைசாபாத் சிறையில், கான் உயிர்நீத்த நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 19ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் கான் கொல்லப்பட்ட அதேநாளில் அவரின் நண்பரான பிஸ்மில் கோரக்பூரில் உயிர்த்தியாகம் செய்தார். தனது ஆரம்ப காலத்தில் கான்குறித்து ஆலம் தெரிந்துகொண்டபோது, மேலும் அதிக தகவல்களை அறிய அவரைத் தூண்டியது. இருவருமே ஷாஜகான்பூரில் இருந்து வந்தவர்கள். இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஆலம் பல புதிய தகவல்களை அறிந்தார்.
"ககோரியின் புரட்சிகரமான செயல்களும், ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பின் எழுச்சியையும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் நேர்த்தியின்மூலமே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே 1923-24ஆம் ஆண்டுகளை அதிகப்படியான வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் அப்போதைய உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 17 கலவரங்கள் நடந்துள்ளன. இத்தனை கலவரங்கள் நடக்கும் சூழலிலும், பல தரப்புகளிலிருந்து வந்த புரட்சியாளர்கள் நாட்டின்மீது கொண்ட அன்பால் ஒன்றிணைந்து போரிட்டதே இதுகுறித்து தெரிந்துகொள்ள என்னை அதிகம் தூண்டியது. இதுவே என்னை சம்பலுக்கும் அழைத்துச் சென்றது”.
மேலும், ககோரி வழக்கின் பிரவி கவுன்சிலின் கோப்புகள் மற்றும் பல்வேறு புரட்சியாளர்கள் எழுதிய கடிதங்களையும் ஆலம் சேகரித்துள்ளார். இவையனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
சம்பலுடனான தொடர்பு:
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதியில் படர்ந்துள்ள சம்பல் பகுதியில், திக்‌ஷித் குறித்து அறிந்துகொள்ள ஆலம் பயணிக்கிறார். பல புரட்சியாளர்களின் வாழ்க்கையை அறிந்து ஆர்வம்கொண்ட தீக்‌ஷித்துக்கு நகரத்தில் உள்ள மக்கள், புரட்சியாளர்களின் வாழ்க்கைமீது கொண்டுள்ள அக்கறையின்மை வருத்தமளிப்பதாகத் தெரிவிக்கிறார்.
இதுவே அவரை, வட இந்தியாவில் மாதருதேவி என்ற புரட்சியாளர்களுக்கான அமைப்பை தொடங்கச் செய்தது. சம்பலில் பல இளைஞர்களின் மனதில் விடுதலைப் போராட்டத்தை விதைத்தார். ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளால் காட்டிக்கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், தன்னுடைய இந்த முயற்சியில் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பார். இந்த கைக்கூலிகளின் துரோகம் 35 போராளிகளின் உயிரைக் குடித்தது. ஹிந்த் வனப்பகுதியில் ஆங்கிலேயர்களால் 35 போராளிகளும் கொல்லப்பட்டனர்.
"தனது சொந்தக் கிராமத்தினரே அறியாதவகையில் அவர்கள் உயிர்நீத்துள்ளனர். ஆகஸ்டு 12, 2015ஆம் ஆண்டு, சம்பலில் உள்ள நண்பர்களின் உதவியோடு, ஜெந்தன்லால் தீக்‌ஷித் குறித்து ஆவணம் திரையிடப்பட்டது. இந்த வருடம் மாத்ருவேதியின் 100ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களும் இளைஞர்களும் சேர்ந்து உதவுகின்றனர். மாத்ருவேதி ஆண்டு விழா இதற்கு முன்பே ஃபாசிதாபாத், ஷாஜகான்பூர் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்பட்டது. இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்கிறார் ஆலம்.
இந்த ஆண்டு மே மாதம் இறுதிவரையில் ஆலம், சம்பல் பகுதியில் சைக்கிளிலேயே பயணம் மேற்கொள்கிறார். தற்போது, பந்தல்காந்தின் நிலை மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் கூறுகிறார். "பசியால் வாடி பசுக்கள் திரிந்து கொண்டிருக்கும்நிலையில், அங்குள்ள மனிதர்களும் உணவில்லாமலேயே வாழ்கின்றனர். பூலான்தேவியின் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்றபோதிலும்கூட, அவரின் குடும்பம் இன்னும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதற்கான அடையாள அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. மிகவும் குறைவான உணவுப் பொருட்களுடனேயே அவர்கள் வாழ்கின்றனர்".
தங்களிடம் பிரச்னை குறித்து தெரிவிக்கவும், தங்களுக்கான நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் கிராமத்தினர் ஆலமைச் சூழ்ந்தனர். அவர்களின் பிரச்னையை அங்குள்ள ஆணையர் மற்றும் காவல்துறையினரிடம் அவர் கொண்டுசென்றார்.
"நான் கடந்த மூன்று வாரங்களில் 550 கிலோமீட்டர் பயணித்துள்ளேன். ஆனால், எனது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் யாரையும் நான் சந்திக்கவில்லை. வெறுமையான கண்களையும், வறட்சியால் கடந்த 6-7 வருடங்களாக விவசாயம் செய்யமுடியாத மனிதர்கள் மட்டுமே கண்ணில்படுகின்றனர்" என்கிறார் ஆலம். "இங்குள்ள குடிசைகளைப் பார்த்தால்தான் அவர்களுக்கு, ஏன் அந்த விவசாயி ஊரைவிட்டுச் சென்றான் என்பது தெரியும். விடுதலையடைந்த இத்தனை ஆண்டுகள் கழித்தும், இவ்வளவு வறுமையில் நமது கிராமங்கள் இருப்பது மிகுந்த அவமானத்துக்குரிய விஷயம். சமீபத்தில், அலகாபாத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் இதுகுறித்து ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. மக்களின் பிரச்னையை எப்போது நாம் கவனிக்கத் தொடங்குவோம்?"
ஆலம் மற்றும் அவரின் நண்பர் குதீப் இணைந்து, பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ள 3,165 விவசாயிகளின் விவரங்களை ஜலாகுன் மாவட்ட அதிகாரிகளிடமும், 1,175 விவசாயிகளின் விவரங்களை மஹோபா மாவட்ட அதிகாரிகளிடமும் அளித்துள்ளனர்.
"இவர்கள் மனிதர்கள் இல்லையா? இவர்கள் இந்தியப் பிரஜைகள் இல்லையா? வரும் உத்தரப்பிரதேசத் தேர்தலில் இவர்கள் வாக்களிக்க உரிமை இல்லையா? பிறகு ஏன், எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு உதவ முன்வருவது இல்லை?" என்ற கேள்விகளை எழுப்புகிறார் ஆலம்.
ஆலமின் இந்தத் தேடல் பெரும் தியாகங்களை உள்ளடக்கியது. பல மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது ஆலமின் பல புத்தகங்கள் கரையானுக்கு இரையாகியிருந்தன. அவர் இல்லாத நேரத்தில் சாதாரண விஷயங்களுக்காகக்கூட அவரின் குடும்பம் தாக்கப்பட்டிருந்தது. வருவாய்ரீதியாக அதிக பலமில்லாத ஆலம், கிராமத்தினரின் உதவியுடன் வாழ்கிறார். பெரும்பாலும் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவுடனேயே நாளைக் கழிக்கிறார். எனினும் அவரைச் சந்திக்கும்போது, போராளிகளின் வாழ்க்கையைப் பாதுகாத்து மக்களிடம் எடுத்துச்செல்ல நினைக்கும் அவரின் எண்ணம் திடமாக வெளிப்படுகிறது.
thanks : https://minnambalam.com/k/1466899221
ஷா ஆலம்: புரட்சியாளர்களின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் ஷா ஆலம்: புரட்சியாளர்களின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர் Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.