ரமலான் நோன்பு எதற்காக?- சிராஜுல்ஹஸன்
“ஒரு மாதம் உண்ணாமல், பருகாமல், எச்சிலைக்கூட விழுங்காமல் நோன்பு இருக்கிறீர்களே, அது எதற்காக? வெறுமனே இதுவொரு ஆன்மிகரீதியிலான விரதமா அல்லது நோன்பு நோற்பதற்கு ஏதேனும் நோக்கங்கள் உண்டா?” எனும் கேள்வி பலருக்கும் இருக்கலாம்.
ரமலான் நோன்பு வெறும் ஆன்மிக விரதம் அல்ல. அதற்கு நோக்கங்கள் உள்ளன.
உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம்தான் குர்ஆன். நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்கக்கூடிய, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஒரு வாழ்வியலைக் குர்ஆன் வழங்குகிறது.
இத்தகைய உன்னத வேதம் அருளப்பட்ட மாதம்தான் ரமலான். ஆகவே, இறைவனுக்கு நன்றி செலுத்தும்வகையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள்.
குர்ஆன் கூறுகிறது:
“ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுக்க நோன்பு நோற்க வேண்டும்.” (குர்ஆன் 2: 185)
இறைவனின் இந்தக் கட்டளைக்கு ஏற்பவே முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுக்க நோன்பு நோற்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான நோக்கமும் உண்டு. அதுதான் இறையச்சம். நோன்பு என்பது நபிகள் நாயகத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்ல, நபிகளாருக்கு முந்தைய இறைத் தூதர்களின் சமுதாயங்கள்மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டிருந்தது. குர்ஆன் கூறுகிறது:
“இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்குமுன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள்மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் இறையச்சமுள்ளவர்களாய் நீங்கள் திகழக்கூடும்.” (குர்ஆன் 2:183)
நோன்பின் நோக்கம், இறைவனுக்கு அஞ்சி வாழ்வதற்கான பயிற்சியை அளிப்பதுதான்.
சூரியன் உதிப்பதற்கு முன்னால் அதிகாலை நாலரை மணிக்கு நோன்பு தொடங்கி, மாலை ஆறரை மணிக்கு முடிகிறது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் தண்ணீர்கூட அருந்தாமல் நோன்பு நோற்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் மறைவாகச் சாப்பிட்டாலோ, நீர் அருந்தினாலோ யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி மறைவாகச் சாப்பிட்டுவிட்டு நோன்பாளிபோல் வெளியில் காட்டிக் கொள்ளலாம். ஆனால், எந்த நோன்பாளியும் அப்படிச் செய்வதில்லை. ஏனெனில், இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்னும் நம்பிக்கையும் பயபக்தியும்தான் காரணம். இத்தகைய பயிற்சி தொடர்ந்து ஒரு மாதம் அளிக்கப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.
“உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் விலகியிருந்தால் மட்டும் போதாது. பொய் பேசுதல், சண்டையிடுதல் போன்ற தவறான வழிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்; இல்லையேல் நோன்பு எந்தப் பயனையும் தராது” என்று இறைத்தூதர் எச்சரித்துள்ளார்.
இறைவனுக்கு நன்றி செலுத்துதல், இறைவனை அஞ்சி வாழ்தல் ஆகியவையே ரமலான் மாத நோன்பின் முதன்மையான நோக்கமும் குறிக்கோளும் ஆகும்
ரமலான் நோன்பு எதற்காக?- சிராஜுல்ஹஸன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:49:00
Rating:
No comments: