நியூட்ரினோ ஆய்வகத்தை தேனி மாவட்டத்தில் அமைக்க அனுமதிக்க கூடாது: வைகோ


சென்னை: நியூட்ரினோ ஆய்வகத்தை தேனி மாவட்டத்தில் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டபோது, இந்திய அணுசக்திக் கழகமும் முழு வீச்சில் இறங்கி, இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. முதலில் நீலகிரி மாவட்டம் சிங்காராவில் அமைப்பதாக இருந்தது. ஆனால் 2009 இல், இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், வன சரணாலயம் அமைந்திருப்பதைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது. 

நியூட்ரினோவை ஆய்வு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் ஒரு கிலோ மீட்டர் மலைப்பகுதி தேவை என்பதால், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை மத்திய அரசு தேர்வு செய்தது. இதன்படி மலை உச்சியில் இருந்து 1500 அடி ஆழத்திலும், 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும், 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு, ஐந்தாயிரம் டன் எடையுள்ள உலகத்திலேயே மிகப் பெரிய காந்தமய உணர்வு (ICAL) கருவியை நிறுவி, மின்தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடு ஒன்று இடைவெளியில் வைக்கப்படும். 

இந்த ஆய்வுக் கருவியை நிறுவ 1000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்கச் செய்து, 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைப் பெயர்த்து குகை அமைக்கும் திட்டமாகும். பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கும்போது இம்மலையில் உள்ள நீர் அடுக்கு பகுதிகள் நிலைகுலைந்து, நீரியல் நிலநடுக்கம் நிகழும் ஆபத்துக்கும் வாய்ப்பு உள்ளது. காந்தத்தின் செயல்பாடுகளையும், மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து, அதற்கிடையே நியூட்ரினோ துகளை ஆய்வு செய்வார்கள். 

காஸ்மிக் கதிர்களைத் தடுக்கும் அரணாக 1500 மீட்டர் நீளமுள்ள மலைப்பகுதி செயல்படும். 2.1 கிலோ மீட்டர் தூரம் 7 மீட்டர் அகலத்தில் சுரங்கம் அமைக்கப்படும். இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோ தனித்து வருவதில்லை. இதைவிட பல கோடி மடங்கு அளவில் பொழியும் காஸ்மிக் கதிர்கள் ஊடேதான் சேர்ந்து வருகிறது. இதனை தனியே வடிகட்டி பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். 

இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்கு இமயமலை தொடங்கி, வடநாட்டின் பல பகுதிகளை ஆய்வு செய்தபோது, அங்கெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதால், இளித்தவாயர்கள் தமிழர்கள் என்று கருதி பொட்டிப்புரத்தைத் தேர்வு செய்துள்ளனர். இத்தாலி நாட்டு அறிவியலாளர்கள் பலரும், உழவர்களும், பொதுமக்களும் எதிர்த்ததன் விளைவாக 2011 ஆம் ஆண்டில் கிரான் காசோ நியூட்ரினோ ஆய்வகம் மூடப்பட்டது. ஆயினும் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அறிவியலாளர்கள் பலர் இந்த ஆய்வகத்தை மூட வலியுறுத்தி தொடுத்த வழக்கு இத்தாலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நியூட்ரினோ ஆய்வில் வெளிப்படும் வெப்பத்தைத் தணிக்க பெருமளவு தண்ணீர் தேவைப்படும். இதற்காக பொட்டிப்புரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் குழாய் பதித்து, சுருளி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஏறத்தாள 16 இலட்சம் லிட்டர் தண்ணீர் (1.574D) இடைவிடாது எடுத்து வர இருக்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் இன்றியும், வேளாண்மைச் சாகுபடிக்கு நீரின்றியும் பாதிக்கப்படும் அவலம் ஏற்படும். இந்த ஆய்வகத்தில் முதல் பத்தாண்டுகள் நிகழ உள்ள முதல்கட்ட ஆய்வுப்பணிதான் விண்வெளியில் இருந்து வரும் நியூட்ரினோ துகள் பற்றிய ஆய்வாகும். 

இதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட உள்ள இரண்டாம் கட்ட ஆய்வு மிக மிக ஆபத்தான பேரழிவை ஏற்படுத்தக்கூடியது. இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் நியூட்ரினோ தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் நியூட்ரினோ கற்றைகள் பொட்டிப்புரம் ஆய்வகத்திற்கு அனுப்பி நடைபெற உள்ள ஆய்வே மிக ஆபத்தான அடுத்தகட்ட ஆய்வாகும். 

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, பொட்டிப்புரத்தில் இந்த ஆய்வகம் நிறுவ 2015 ஜனவரி 5 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இந்த ஆய்வகத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்த நிலை தகடுகள் உணர்வு நிலை- தற்போது முன்மொழியப்பட்ட ஆய்வு மட்டுமின்றி, உலகின் வேறு பகுதிகளில் நடக்கும் நியூட்ரினோ ஆய்வுகளோடு இணைந்து வேறு ஆய்வுகளையும் ஆய்வு செய்யும் என்று அறிவித்தது. ஜப்பானின் டோக்கியோ நியூட்ரினோ ஆய்வகம், தேனியில் இருந்து 6900 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெனிவாவில் உள்ள் நியூட்ரினோ ஆய்வகம் 7200 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்காவின் பெர்மிலேப் நியூட்ரினோ ஆய்வகம் வான்வெளியில் 8600 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் நேர்கோடு வரைந்தால் 7400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன. 

நியூட்ரினோ ஆய்வுலகில் அனைவராலும் மேற்கோள் காட்டப்படும் தலைசிறந்த அறிவியலாளரான ஜெ.ஜெ.பெலக்கா தந்த ஒரு அறிக்கையில், "ஆய்வகத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மிகக் கடுமையான கதிரியக்கத் தாக்கம் இருக்கும்" என்கிறார். இந்தக் கதிரியக்கம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தீங்கு விளைவிக்கக்கூடியது. ஒரு வேளை சிறிய அளவு கசிவு ஏற்பட்டால் கூட கணித்திட முடியாத தீய தொடர் விளைவுகளை ஏற்படுத்திவிடும். 

50 GEV ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளைப் பெற்று, ஆய்வு செய்யும் ஆய்வகத்தைச் சுற்றி குறைந்தது 340 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த உயிரின நடமாட்டமும் இருக்கக்கூடாது என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கின்றன. பொட்டிப்புரம் ஆய்வகத்திலோ இதைவிட பன்மடங்கு ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகள் பெறப்பட உள்ளன. திட்டமிடப்பட உள்ள பொட்டிப்புரம் ஆய்வகத்தைவிட 600 அடி ஆழம், அதாவது 2100 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் இயங்கி வந்த (Exo200) என்ற செறிñட்டப்பட்ட செனான் (Xenon) ஆய்வகம் நியூட்ரினோ குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு இருந்த போது, 2014 பிப்ரவரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியைச் சுற்றி கடுமையான கதிரியக்கம் வெளிப்பட்டு, அந்த ஆய்வகம் மூடப்பட்டது.

இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது. "நியூட்ரினோ கற்றைகளை எதிரி நாட்டு அணு ஆயுதங்களை அழிப்பதற்கான எதிர் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம்" என முதன் முதலில் அறிவித்தவர் ஜப்பானிய அறிவியலாளரான ஹிரோடக்கா சுகவாரா என்பவர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் இவரும், இவரது ஆய்வுக் குழுவினரும் இணைந்து அளித்த ஆய்வு அறிக்கையில், "மிகை உயர் ஆற்றல் உள்ள நியூட்ரினோ கற்றைகளை எதிரிநாட்டு அணுகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சந்தடி இல்லாமல் அனுப்பி உருக்கவோ, வெடிக்கவோ செய்ய முடியும்" எனக் கூறினர். நிலநடுக் கோட்டிற்கு ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்குக்கூட பூமிக்கு அடியில் நியூட்ரினோ கற்றைகளை அனுப்பி, யாருக்கும் தெரியாமல் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறினர். (Hirotaka Sugawara et al-destruction of nuclear boms using ultra high energy Neutrino Beam, June 2003) அதன் தொடர்ச்சியாக அண்மையில் ஆல்பிரட் டோனி என்ற ஆய்வியலாளர், "அணு ஆயுதத்திற்கு எதிராக அதைவிட வலுவான ஆயுதமாக நியூட்ரினோ ஆயுதத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம்" என அறிக்கை தந்தார். (Neutrino Counter Nuclear Weapon Alfred Tony, 26 June 2013) உலகில் முதன் முதல் தோன்றிய மலை இமயமலை அல்ல, ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையும் அல்ல, விந்திய மலையும் அல்ல, மேற்கு தொடர்ச்சி மலைகள்தாம்! 

இந்த உண்மை ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டதால்தான் ஐ.நா.வின் யுனொஸ்கோ நிறுவனம், மேற்குத் தொடர்ச்சி மலைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு துரும்பைக்கூட அசைக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது. அதற்கான ஜெனிவா ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்துப் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக எப்படி மலையை உடைக்கலாம்? என உயர்நீதிமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் பதில் கூற இயலவில்லை.

கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையும், காட்கில் கமிட்டி அறிக்கையும் இந்த அடிப்படையில் உலகில் புராதனமான மலை என தெரிவித்தன. ஆய்வகம் அமைக்கத் தேர்ந்தெடுத்த அம்பரப்பர் மலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநில எல்லை தொடங்குகிறது. 2.3 கிலோ மீட்டர் தொலைவில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருக்கிறது. "ஒரு தேசியப் பூங்காவுக்கு பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எந்த உடைப்பையும் செய்ய முடியாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கின்றது. அப்படி என்றால், ‘இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி' என்று சொல்லப்படுகின்ற இந்தத் திட்டத்தில் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா இருக்கின்ற உண்மையை மறைத்துவிட்டார்கள். இது மிகப்பெரிய மோசடி. 

ஆகவே இங்கு ஆராய்ச்சி செய்ய முனைவது சட்ட விரோதம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், ஜெனிவா ஒப்பந்தத்துக்கும் எதிரானது. இங்கே நிலநடுக்கம் அதிகம் இருக்காது. நில நடுக்கம் ஏற்படும் இரண்டாம் மண்டல அளவிற்குத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அம்பரப்பர் மலை இருக்கின்ற இடம் மூன்றாம் மண்டலம் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடம் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் ஒவ்வொரு நாளும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 40 இலட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தப்போகிறார்கள். அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாயத்தை அழிக்கும். 

இந்த நியூட்ரினோ ஆய்வு மய்யம் விஞ்ஞான உலகத்திற்கு தேவையான பல ஆராய்ச்சி முடிவுளைத் தரலாம். அதற்காக தமிழகம் பலிபீடம் ஆகவேண்டுமா? தேனி மாவட்ட மக்கள் பலி ஆடுகளா? நாங்கள் வெளிநாடுகளுக்காகச் செய்யவில்லை என்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு விஞ்ஞானிகளை வைத்துக்கொண்டு செய்யப் போகின்றோம் என ஆவணங்களில் பதிவு செய்து இருக்கின்றார்கள். 7500 கிலோ மீட்டரைத் தாண்டி நியூட்ரினோ கற்றைகள் வரும் என்கிறார்கள். எதிர்காலத்தில் அணுகுண்டுகள் வெடிக்க வைக்க முடியும். செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதோடு, அணுக் கழிவுகளை கொண்டு வந்து இங்கே கொட்டவும் போகிறோம் என்று எழுதியதை, தெரியாமல் எழுதி விட்டோம். இது எழுத்துப் பிழை என்று இப்போது சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தென்பாண்டி மண்டலத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, நியூட்ரினோ ஆய்வகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கேரளத்தின் இடுக்கி அணை 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வளையத்திற்குள் 12 தடுப்பு அணைகள் உள்ளன. இதன் காரணமாகத்தான் கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நான் வழக்குத் தொடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி இரண்டரை மணி நேரம் வாதங்களை முன் வைத்தேன். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி அரசர் தமிழ்வாணன், நீதி அரசர் இரவி அவர்கள் அமர்வு 2015 மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், "நியூட்ரினோ திட்டத்திற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது" எனக் குறிப்பிட்டது. எனது பிரதான மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டி அன்றைய கேரளா முதல்வர் உம்மன்சாண்டி அவர்களை 2015 பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து விளக்கக் கடிதத்தைத் தந்தேன். பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் கேரளத்திற்குச் சென்று, கேரளா முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் முழு அளவில் எதிர்ப்போம் என்றார். பிப்ரவரி 20 ஆம் தேதி பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதிக்குச் சென்றபோது, ஆங்காங்கே ஒவ்வொரு ஊரிலும் திரண்டிருந்த பொதுமக்கள் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்று ஏமாற்றிவிட்டார்கள். இதன் ஆபத்தை உணர்வதால் உங்கள் போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார்கள். அதன்பின்னர், ‘நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க'த்தை நானும் தோழர்கள் லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, பொன்னையன், முகிலன், இளையரசு, சந்திரன் ஆகியோரைக் கொண்டு அமைத்து, சுற்றுச் சூழல் போராளியான மேதா பட்கர் அம்மையாரை அழைத்துவந்து ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். பிற பகுதிகளிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகத்தை தமிழ்நாட்டில் நிறுவ மோடி அரசு முனைந்துள்ளது. தேனி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள கேரளா மாநிலச் சுற்றுச் சூழலுக்கும், நீராதாரத்திற்கும் கேடு விளைவிப்பது மட்டுமின்றி, மிகக் கடுமையான கதிரியக்க ஆபத்தையும் விளைவிக்கக்கூடியதாகும். பொட்டிப்புரம் இந்தியா நியூட்ரினோ ஆய்வகத்தை இந்திய அரசு அமைக்க முயல்வது தமிழ்நாட்டுக்கும் கேடு செய்யும் நடவடிக்கை ஆகும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை அனுமதி அளிக்காதது மனதிற்கு நிம்மதியைத் தந்தது. ஆனால், தேனி மாவட்டத்திலிருந்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம் என்று சென்னையில் உள்ள அவ்வாரிய தலைமை நிர்வாகத்திற்கு கோப்பினை அனுப்பி உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த முனையும் இந்திய அரசின் அதிகாரிகள் இதுபற்றிய விளம்பரத்திற்கும், பரப்புரை செய்வதற்கும் இதுவரை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார்கள். இத்திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் அபாயத்தின் உண்மையை மறைத்து, அதிகாரிகள் அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையையும், தேனி மாவட்டத்தையும் பாதுகாப்பதற்காக, மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தரக்கூடாது என்று நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக தமிழக மக்கள் நலனைக் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறினார்.
நியூட்ரினோ ஆய்வகத்தை தேனி மாவட்டத்தில் அமைக்க அனுமதிக்க கூடாது: வைகோ நியூட்ரினோ ஆய்வகத்தை தேனி மாவட்டத்தில் அமைக்க அனுமதிக்க கூடாது: வைகோ Reviewed by நமதூர் செய்திகள் on 01:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.