”இனி நான் அடிமை இல்லை”: குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி!


புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 74 வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். சுவாசப் பிரச்சினையால் அவதியுற்ற அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
1960 களிலிருந்து அமெரிக்க மக்களை  மட்டுமல்ல, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். உலகம் முழுமைக்கும் ரசிகர்களை தன் வயப்படுத்தியவர்.
கிளாசியஸ் கிளே என்ற இயற் பெயர் கொண்ட முகமது அலி, 1960 ஆம் ஆண்டும் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் உலகின் கவனம் பெற்றார்.
“நான் வீரன் மட்டுமல்ல, நான் கவிஞன்; இறை தூதன்; இறப்பிலிருந்து எழுந்தவன். குத்துச்சண்டை உலகத்தை உய்விக்க வந்தவன. நான் மட்டும் இதைச் செய்யவில்லை என்றால், இந்த விளையாட்டு இறந்துபோயிருக்கும்” 18 வயது இளைஞனின் அச்சமற்ற சொற்களைக் கேட்டு ஆச்சரியமடைந்தது உலகு.
அந்த காலத்தில் புகழ்பெற்றிருந்த லிஸ்டன் என்ற குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி பெற்ற வெற்றிக்குப் பிறகு, தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னார் அதுவரை கிளே ஆக இருந்த முகமது அலி.
கறுப்பின பிரிவினைவாத இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என தன்னைப் பற்றி சொன்னவர், இனி தன்னை முகமது அலி என அழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
“இதுதான் என்னுடைய உண்மையான பெயர், கறுப்பினத்தவனின் பெயர். கிளாஸியஸ் கிளே என்பது அடிமையின் பெயர். நான் இனி ஒருபோதும் அடிமை இல்லை”.
தறியுடன், வந்தேறிகள் நாவல்களின் ஆசிரியர்  பாரதி நாதனின்  அஞ்சலி: 
அவர் வெறும் விளையாட்டு வீரர் மட்டுமல்ல, மனிதாபிமானமுள்ள கறுப்பினப் போராளி. வெள்ளை நிற வெறியர்கள் அவருக்கு கொடுத்த தொல்லைகள் ஏராளம். அதற்காக அவர் குத்துச் சண்டை களத்துக்கு வெளியிலும் போராடினார். அது மட்டுமல்ல, அமெரிக்காவில் வசித்தாலும் நாசகார வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவை கண்டித்தார். சென்ற நூற்றாண்டின் ஆக்ரமிப்பு போர்களில் குறிப்பிடத்தக்கது வியட்நாம் போர். ஹோசிமின் தலைமையில் தங்கள் மண்ணை ஏகாதிபத்திய வெறியர்களுக்கு விட்டுத் தர மாட்டோம் என வியட்நாம் தேசபக்த மக்கள் ராணுவம் போரிட்டது. அப்போது முகமது அலியை கட்டாய ராணுவ சேவைக்குப் போக அமெரிக்கா பணித்தது. ஆனால், அவர் மறுத்தார். வியட்நாமியர்கள் தங்கள் மண்ணைக் காக்க போரிடுகிறார்கள். யார் மீதும் கல்லெறியவில்லை. அவதூறு பேசி நிறவெறியைக் கொண்டாடவில்லை. நாயை அவிழ்த்து விட்டு ஓடவில்லை. அந்த மக்களுக்கு எதிரான கட்டாய ராணுவ சேவையில் நான் ஏன் ஈடுபட வேண்டும்? என துணிச்சலாய் குரல் கொடுத்தார். விளையாட்டு வீரன் என்பவன் பணத்திற்காக மட்டும் வாழ்பவன் அல்ல. அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவன் என்பதும் அவரது வாழ்க்கை நெறிமுறையாயிற்று. உலக மக்களின் இதயத்தில் இடம் பிடித்த உண்மையான வீரனே, காலம் என்றும் உன்னை மறக்காது. போய் வா முகமது அலி…
மனித உரிமை செயல்பாட்டாளர் பாலமுருகன்:
குத்துச்சண்டை வீரராய் உலகிற்கு அறிமுகமாகி , நிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்து , அந்த எதிர்ப்பின் வெளிப்பாடாய்தனது பெயரான Cassius Marcellus Clay, Jr.என்பதை புறக்கணித்து ,கருஞ்சிறுத்தை இயக்கத்தில் சேர்ந்தார். அமெரிக்காவின் வியட்னாம் போரை கடுமையாக எதிர்த்தார்.மால்கம் எக்ஸ் உடன் இணைந்து செயல்பட்டார். தன்னை இஸ்லாமியராய் அடையாள படுத்திக்கொண்ட முகமது அலி தனது 74 வது வயதில் மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை தருகின்றது. அவருக்கு வீரவணக்கம்.
”இனி நான் அடிமை இல்லை”: குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி! ”இனி நான் அடிமை இல்லை”: குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி! Reviewed by நமதூர் செய்திகள் on 00:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.