மதுவிலக்கு: குற்றங்கள் குறைந்துவரும் பீகார்!


தமிழ்நாட்டு தேர்தல்களத்தைப் போலவே பீகாரின் தேர்தல்களத்திலும் ஒரு மையப் பொருளாக இருந்தது மதுவிலக்கு. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று வாக்குறுதி வழங்கி தேர்தலைச் சந்தித்தார் நிதிஷ்குமார். அதை பீகார் மக்களும் ஏற்றுக்கொண்டதன் பலன் மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார். அவர் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெறத் தொடங்கியதும், படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வந்தார்.
கடந்த ஏப்ரலில் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஜனநாயக சக்திகள், பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. எனினும், சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு, விஷச் சாராயம் குடித்த சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க, காவல்துறையில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையொட்டி, மதுவிலக்கு விதிமுறைகளை மீறியதாக கடந்த ஐந்து மாதங்களில் 13,839 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13,805 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று கலால் பிரிவு கமிஷனர் ஆதித்யா குமார் நேற்று தெரிவித்தார். மேலும் ஐந்து மாதங்களில் 90,000 லிட்டர் கள்ளச்சாராயம், 11,000 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது, ‘வீட்டில் மது வைத்திருந்தாலே குற்றம்’ என தண்டிக்கும்வகையில் புதிய கடுமையான சட்டம் கொண்டுவர அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் கொலை, கொள்ளை, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சாலை விபத்து போன்றவை கடந்த ஐந்து மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளன. கொலைகளின் சராசரி 21 விழுக்காடும், கொள்ளைச் சம்பவங்களின் சராசரி 18 விழுக்காடும், குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகள் 24 விழுக்காடும், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவது 26 விழுக்காடும் குறைந்துள்ளன என காவல்துறை தெரிவிக்கிறது.
மதுவிலக்கு: குற்றங்கள் குறைந்துவரும் பீகார்! மதுவிலக்கு: குற்றங்கள் குறைந்துவரும் பீகார்! Reviewed by நமதூர் செய்திகள் on 05:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.