பெரியார்-மணியம்மை திருமணம்! - ராஜாஜி ஆதரித்தாரா? - ப்ரியன்


தந்தை பெரியாரின் 138ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சென்ற வாரம் தமிழகத்தில் வழக்கம் போலவே சிறப்பாக நடந்து முடிந்தன. தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் அழுத்தமான தடங்களைப் படைத்தவர் பெரியார். அவரது துணிச்சலான செயல்பாடுகள் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, அரசியல் திருப்பங்களை உருவாக்கி இருக்கின்றன. பெரியார் தனது வாழ்க்கை குறித்து எடுத்த ஒரு முக்கிய முடிவு, அவர் தலைமை தாங்கி நடத்தி வந்த திராவிடர் கழகத்தில் பிளவை உருவாக்கி விட்டதாக வரலாற்று செய்திகள் சொல்லுகின்றன. 72 வயதான பெரியார், 26 வயதான மணியம்மையைத் திருமணம் செய்தபோது பெரியாருக்குத் தளபதியாக இருந்த பேரறிஞர் அண்ணா உட்பட ஏராளமான பிரமுகர்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தார்கள்.
1949ஆம் வருடம் ஜுன் மாதம் 9ஆம் தேதி பெரியார் - மணியம்மை திருமணம் நடைபெற்றது. “பெரியாரை இயக்கத்தின் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. குடும்ப தலைவரென, வாழ்வுக்கு வழிகாட்டியென, மானத்தை மீட்டுத்தரும் மகான் என, அடிமை ஒழிக்கும் வீரரென மரியாதையுடனும் அன்புடனும் பேணி வந்தோம். ‘பொருந்தாத் திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு’ என அவர் ஆயிரமாயிரம் மேடைகளில் முழங்கினார். இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், 26 வயதுள்ள பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைக் காணிக்கையாக தருவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று அறிக்கை விட்டார் அண்ணா. தொடர்ந்து ‘திராவிட நாடு’ இதழில் பெரியாரின் செயலுக்கு வருந்துவோர் பட்டியலை ‘கண்ணீர் துளிகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டார் அண்ணா. “என் ஆயுள் வரையும், கூடுமானவரை என் ஆயுளுக்கு பின்பும் ஒழுங்காக இயக்கத்தை நடத்தும் தகுதி மணியம்மைக்கு உண்டு” என்று பெரியார் சொன்னது, அண்ணா உள்ளிட்ட பிரமுகர்களுக்கு கடும் எரிச்சலை உருவாக்கியிருந்தது. இப்படி தொடர்ந்த கருத்து மோதல்களின் முடிவாக 1949ஆம் வருடம் செப்டம்பர் 17ஆம் நாள் அண்ணா தலைமையில் திமுக உருவானது. பெரியார் பிறந்த நாளில் உருவானதுதான் திமுக. “ஆலமரத்துக்கு விழுது போல திராவிடக் கழகத்துக்கு திமுக விளங்கும்” என்றார் அண்ணா.
மணியம்மையாரை திருமணம் செய்வது குறித்து ஒரு வருடத்துக்கும் மேலாக தீவிரமாக யோசித்து வந்தார் பெரியார். “இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திட தமக்கு நம்பிக்கையுள்ள ஒரு வாரிசு வேண்டுமென்றும், சொத்து பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும் தொடர்ந்து கூறி வந்தார். இந்த அடிப்படையில் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டாலும், இயக்கத்தில் அது ஒரு பெரிய புகைச்சலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார். எனவே, திருமணம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் முன்னர் தனது ஆத்ம நண்பரான ராஜாஜியுடன் கலந்து பேச முடிவு செய்தார். அரசியல்ரீதியாக இருவரும் பிரிந்திருந்த காலம் அது. அப்போது ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தார். திருவண்ணாமலையில் ரமணாசிரமத்தில் பாதாள லிங்க குகை திறப்பு விழாவுக்கு ராஜாஜி அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக வந்த ராஜாஜியை 1949ஆம் வருடம் மே மாதம் 14ஆம் தேதி திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் பெட்டியில் சந்தித்தார் பெரியார். மணியம்மையைத் திருமணம் செய்வது குறித்து ராஜாஜியுடன் பெரியார் விவாதித்ததாகவும், திருமணத்தை ராஜாஜியும் வரவேற்றக் காரணத்தால் பெரியாருக்கு முடிவெடுப்பது சுலபமாயிற்று என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள். அடுத்த ஒரு மாதத்தில் பெரியார் - மணியம்மை திருமணம் நடந்தது. “இயக்கம் பிளவுபட ஒரு காரணமாக இருந்த திருமணத்தை ராஜாஜி ஆதரித்ததால்தான் தனக்கிருந்த மிச்சம் மீதி தயக்கத்தையும் விட்டொழித்தார் பெரியார்” என்பது பொதுவாக நிலவிய கருத்து. “பெரியார் இந்த விஷயத்தில் ராஜாஜியிடம் ஆலோசனைப் பெற்றதாக ஒரு எண்ணம் கழகத் தோழர்களிடம் நிலவிற்று. அது உண்மையன்று” என்று தனது ‘தந்தை பெரியார்’ நூலில் பதிவு செய்கிறார் கவிஞர் கருணானந்தம். இவர் பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். மணியம்மையைத் திருமணம் முடித்த பின் மயிலாடுதுறையில் இருக்கும் கவிஞரின் வீட்டில் சில நாட்கள் தங்கினார் பெரியார்.
ஆனால், ராஜ்மோகன் காந்தியின் ‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’ புத்தகத்தில் திருமணம் குறித்து வேறுவிதமான பதிவு இருக்கிறது. “ஈ.வே.ரா. ராஜாஜியைச் சந்தித்து அவருடைய ஆலோசனையைப் பெற விரும்பினார். எது பற்றி? தம்மை விட நாற்பது வயது சிறியவரான ஒரு பெண்மணியை தாம் மணந்து கொள்வதா, வேண்டாமா? என்பது பற்றித்தான். திருமணம் நடந்தது. இதுவே திராவிடர் கழகம் உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகக் காரணமும் ஆயிற்று. கல்யாணத்துக்கு ஆதரவு தந்து ஊக்குவித்ததால், ஸி.ஆர். (ராஜாஜி) தான் திராவிடர் கழகம் உடைய காரணமானார் என்று கூட சில திராவிட தோழர்கள் ஸி.ஆர். மீது குற்றம் சுமத்தினார்கள்” என்று சொல்கிறார் ராஜ்மோகன் காந்தி.
Philip sprott என்ற ஆங்கிலேய எழுத்தாளர், “DMK IN POWER” என்ற நூலை எழுதியிருக்கிறார். “அரசியல் வெவ்வேறாக இருந்தாலும் பெரியாருக்கும் ராஜாஜிக்கும் அந்தரங்க நட்பு என்றும் மாறியதில்லை. இந்த விஷயத்தில் ராஜாஜியைத் தவிர வேறு யாரையும் ஆலோசனை கேட்க முடியவில்லை. சிறந்த பண்பாடுகளை உடைய ராஜாஜி, எப்போது அம்மையாரின் பெயர் ஈ.வே.ரா.,வுடன் இணைக்கப்பட்டு பேச்சுக்கிடமாகி விட்டதோ, இனி யோசிப்பதற்கே இடமில்லை; அவரைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது பெரியாரின் கடமை” என்று சொன்னதாக பதிவு செய்திருக்கிறார் Philip Sprott. இந்த புத்தகம் வெளிவந்தபோது பெரியார், ராஜாஜி இருவரும் உயிருடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த முக்கிய சந்திப்பு குறித்து இருவருமே வெளிப்படையாக எங்குமே பேசியதில்லை. ராஜாஜி இறந்தபோது பெரியார் அடைந்த துக்கத்துக்கு அளவேயில்லை என்பது அவர் சக்கர நாற்காலியில் மயானத்துக்கே வந்ததிலிருந்து தெரிந்தது.
சரி, இந்த விவகாரத்தை இப்போது எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்த கட்டுரையை படித்து முடிக்கும்போது, அந்த அவசியத்தை நீங்களும் புரிந்து கொள்வீர்கள். சமீபத்தில் கரிசல்காட்டு கதை சக்கரவர்த்தி கி.ராஜநாராயணனுக்கு 95ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ‘கி.ரா’ என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த ‘எழுத்து பீஷ்மர்’ புதுவையில் வசிக்கிறார். அவரை வணங்கி ஆசி பெறுவதற்காக ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உட்பட மூவரும் சென்றிருந்தோம். தனது முதுமையால் ஏற்பட்டிருக்கும் அசதியையும் பொருட்படுத்தாது, உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார் கி.ரா. கரிசல்காட்டு பழக்கவழக்கங்கள், எழுத்தாளர்கள், லா.ச.ரா., மௌனி என்று தொடர்ந்த பேச்சு சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் வந்து நின்றது. அங்கு கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை குறித்தும் அதனால் கொதித்தெழுந்த பெரியார் காங்கிரஸை விட்டு பிரிந்து வந்ததையும் வருத்தத்துடன் சொன்னார் கி.ரா.
பின்னர் பேச்சு பெரியார் - மணியம்மை திருமணத்தைப் பற்றி திரும்பியது. “பெரியார், மணியம்மையைத் திருமணம் செய்து கொள்வதை ராஜாஜியும் ஆதரித்தார் என்று சொல்கிறார்கள். அது தவறு. அன்று அந்த ரயிலில் ராஜாஜியுடன் ரசிகமணி டி.கே.சி.யும் இருந்தார். பெரியார் தனியாக பேச வேண்டும் என்றதும், டி.கே.சி. எழுந்து கிளம்பினார். ஆனால், ராஜாஜி அவரை அமரச் சொன்னார். பின்னர் திருமண விவகாரம் பேசப்பட்டது. மனசாட்சியின் உந்துதலால்தான், மணியம்மையை மணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னார் பெரியார். ‘இந்த திருமணம் வேண்டாம்’ என்றார் ராஜாஜி. இருவரும் டி.கே.சி.யைப் பார்த்தனர். ‘நீங்கள் கண்டிப்பாக மணியம்மையைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்றார் டி.கே.சி. பெரியாருக்கும் ரசிகமணியை நன்றாகத் தெரியும். ரசிகமணி 1927இல் சென்னை ராஜதானியில் நீதிக்கட்சியின் சார்பாக மேல்சபை உறுப்பினராக இருந்தபோது பாரதியின் பாடல்களுக்கு ஆங்கிலேய அரசு வித்திருந்த தடையை நீக்க வேண்டுமென்று உரக்கக்குரல் கொடுத்தவர்” என்றார் கி.ரா. ரசிகமணியின் குடும்பத்தோடு - குறிப்பாக அவரது மகன் தீப.நடராஜனோடு - மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கி.ரா. அன்று திருவண்ணாமலை ரயிலில் பெரியார் - ராஜாஜி பேச்சு வார்த்தையின்போது ரசிகமணியும் இருந்தார் என்பது புது தகவல். இந்த தகவலை சொல்லிவிட்டு கி.ரா. “இறக்கும் முன் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன். அதனால் சொல்கிறேன்” என்றபோது அதிர்ச்சியடைந்த நாங்கள் “இப்படி பேச வேண்டாமே” என்று கேட்டுக் கொண்டோம்.
“ராஜாஜி - பெரியார் சந்திப்பின்போது ரசிகமணி டி.கே.சி.யும் இருந்தார். என்ற தகவல் சரியான தகவலாக இருக்க வாய்ப்பில்லை” என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் கா.திருநாவுக்கரசு. “பெரியார் - மணியம்மை திருமணத்தை ராஜாஜி ஆதரிக்கவில்லை என்பது பெரியாருக்கு ராஜாஜி எழுதிய ஒரு கடிதத்தில் இருந்து தெரிகிறது. இந்தக் கடிதத்தை பெரியார், ராஜாஜி மறைவுக்குப் பின்னர்தான் திராவிடர் கழகம் வெளியிட்டது. இச்சந்திப்பின் போது ரசிகமணி இருந்திருந்தால் பெரியாரே ஏதாவது ஒரு சமயம் கட்டாயம் அதை சொல்லியிருப்பார். தவிர, கி.ரா. இதுகுறித்து இவ்வளவு வருடம் கழித்து இப்போது சொல்லியிருப்பதை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் சொல்கிறார் திருநாவுக்கரசு.
ராஜாஜியும் ஆதரித்ததால்தான் மணியம்மையை திருமணம் செய்து கொள்ள பெரியார் முழு மனதுடன் இறங்கினார் என்பது பொது வெளியில் இதுவரை நிலவி வந்த கருத்து. அதை மாற்றுவது போல கி.ரா. சொன்னது இருந்தபடியால்தான், இந்த விவகாரத்தை பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்தது என்பது இப்போது புரிந்திருக்குமே! கி.ரா. சொன்ன ருசிகரமான வேறு செய்திகள் குறித்து மற்றொரு தருணத்தில் பார்ப்போம்.
பெரியார்-மணியம்மை திருமணம்! - ராஜாஜி ஆதரித்தாரா? - ப்ரியன் பெரியார்-மணியம்மை திருமணம்! - ராஜாஜி ஆதரித்தாரா? - ப்ரியன் Reviewed by நமதூர் செய்திகள் on 04:34:00 Rating: 5

1 comment:

  1. மணியம்மையை பெரியாரிடம் அழைத்து வந்தது மணியம்மையின் தந்தைதான். அப்போதே அவர் உயர்கல்வி படிப்பை முடித்து மேடைகளில் பேசிவந்த அரசியல்மணி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அது தத்து கொடுக்கும் வயதல்ல. மணியம்மை பிறந்தது 1917 ம் வருடம். திருமணம் நடந்தது 1949. அப்போது அவருக்கு வயது 32. நீங்கள் சொல்வது போல 26 கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.