உமா பாரதியின் கர்நாடக பாசம்: தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழகம்!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் எத்தனை முறை உத்தரவிட்டாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.
மாநிலத்தில் அரசியல் செய்ய தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மத்திய அமைச்சர் உமா பாரதியும் தன்னுடைய கர்நாடக பாசத்தை வெளிப்படுத்தி தமிழக மக்களின் கண்ணீரை சம்பாதித்துள்ளார்.
காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவான முடிவை அறிவித்தார் உமா பாரதி.
உமா பாரதி கர்நாடக மாநிலத்துடன் நெருக்கமாக இருப்பவர். இவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே உமா பாரதி கர்நாடகத்துக்கு ஆதராவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உமா பாரதி இரு மாநில நீர் இருப்பை அறிய நிபுணர் குழுவை அமைக்கப்போவதாக கூறினார்.
இது எவ்வளவு அபத்தமான முடிவு, இதன் மூலம் இந்த பிரச்சனை இன்னும் தீவிரமாகும். இதைத்தான் கர்நாடக அரசும் எதிர்பார்த்த முடிவாகும். இந்த குழுவை அமைப்பதன் மூலம், கர்நாடகத்தின் குடிநீர் தேவை தான் முக்கியம் என அந்த குழு பரிந்துரைக்கும். இதன் மூலம் கர்நாடகா அணையை திறந்தேவிடாது.
மேலும், இந்த குழு ஆராய்ந்து முடிவை தெரிவிக்கும் வரை கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறக்காது. தாங்கள் இப்பொழுது கடைபிடித்து வரும் காலத்தை இழுத்தடிக்கும் செயலை தொடர்ந்து செய்யும். கடைசியில் தமிழகத்தின் சம்பா கனவு கனவாகவே போய்விடும்.
கர்நாடகத்தின் குடிநீர் தேவை தான் முக்கியம் என சிலர் நினைக்கலாம். காவிரியில் இருந்து பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 10 டி.எம்.சி தண்ணீர் எடுத்து வருகிறது கர்நாடகா. பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு காவிரி பலிகாடா கிடையாது. காவிரியில் உள்ள நமக்கான உரிமையான தண்ணீரைத்தான் நாம் கேட்கிறோம். அதனால் தான் உமா பாரதியின் இந்த முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
உங்களுக்கு உரிமையுள்ள தண்ணீரில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்குங்கள். மேலும் பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அங்கு காவிரி மட்டும் இல்லை. பெங்களூருக்கு எத்தினஹொலே போன்ற பிற குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அம்மாநில அரசியலால் அந்த திட்டங்களை கர்நாடக அரசுகள் கிடப்பில் போட்டுள்ளன.
கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லையென்றால் அங்கு விவசாயம் என்பது தற்போது முற்றிலும் அழிந்து விட்டதா. அப்படியென்றால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் என்று செய்திகளில் வருகிறதே அவர்கள் யார்?. கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கு காவிரியையும் சேர்த்து தமிழக காவிரி பாசன விவசாயிகளையும் பலிகடா ஆக்கவேண்டாம்.
அதுமட்டுமல்லாமல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூட பெங்களூரை காவிரி பாசன பகுதி என குறிப்பிடவில்லை. இவையெல்லாம் மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு தெரியாதா?. இல்லை கர்நாடக பாசம் கண்ணை மறைத்து விட்டதா? உங்கள் பாசத்துக்கு தமிழகமா பலிகடா?.
மத்திய அமைச்சர் என்பவர் அனைத்து மாநிலத்துக்கு பொதுவானவராக செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுங்கள் என கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் மத்திய அமைச்சர், அவர்களுக்கே சாதகமாக சட்டத்தை மதிக்காத அவர்களுக்கு சாதகமாக செயல்படுவது தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
உமா பாரதியின் கர்நாடக பாசம்: தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழகம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:24:00
Rating:
No comments: