அதிகாரங்களின் கறைபடாத எளிய மனிதர்: மூத்த பத்திரிகையாளர் சோலை - ரெங்கையா முருகன்
பிறப்பு 25.09.1932 - இறப்பு 29.05.2012
(பெரியாருடன் சோலை)
‘கடையேனுக்கும் கடைத் தேற்றம்’ என்ற ரஸ்கினின் வாசகத்தை அடிநாதமாகக் கொண்டு அரசியல் விமர்சனங்களை எழுதி வந்தவர் மூத்த பத்திரிகையாளர் சோலை. காந்தியத் தத்துவத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பை தொடராமல் சர்வோதயா பயிற்சி முகாமில் வந்து சேர்ந்தார். பூதான இயக்கம் விநோபாவுடன் கிராமம்தோறும் கள ஆய்வு சென்று செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். ‘நிலம்’ பற்றி எழுதிய கட்டுரை மூலமாக பொது உடைமை ஆசான் ஜீவாவின் கவனத்துக்கு ஆளானார். இவரது எழுத்து வலிமையை புரிந்துகொண்ட ஜீவா, அன்றைய நாளில் இடதுசாரி அமைப்பில் உறுப்பினராக இல்லாத சோலைஅவர்களை ‘ஜனசக்தி’ பத்திரிகையின் பொறுப்புக்குக் கொண்டு வந்தார். பின்பு மார்க்ஸிய -லெனினிய கோட்பாட்டை எழுப்பும் வண்ணம் ‘தீக்கதிர்’ பத்திரிகையை தொடங்கிய முக்கியஸ்தர்களில் இவரும் ஒருவர். அன்று தொடங்கிய எழுத்துப்பயணம் இறப்பதற்கு முதல் நாள் வரை அதே சிந்தனையுடன் தொடர்ந்தது. ஆம்; இறப்பதற்கு முன்பாக அதாவது கோமா நிலைக்குச் செல்வதற்கு முன்பாக ஆஸ்பத்திரியில் தனக்கு அருகில் இருந்த உதவியாளரிடம் எழுதச் சொல்லி டிக்டேட் செய்த இறுதி வாசகம் இடதுசாரிகளின் இன்றைய பலவீனமான நிலைகுறித்த வருத்தத்தில் தோய்ந்த முற்றுப்பெறாத கட்டுரையுடன் பத்திரிகை பயணத்தை முடித்துக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் 25.09.1932இல் பிறந்தார். ஜனசக்தி,நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த தலைமுறை வார இதழ்கள் ஜூ.வி., நந்தன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ராஜமுத்திரை ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்தார். அண்ணா பத்திரிகை தொடங்கும் முன்பு சோலையின் பெயரை ஆசிரியராக போட்டு விளம்பரம் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். விளம்பரத்தை எடுத்துக்கொண்டு போய் எம்.ஜி.ஆரைப் பார்த்து, “என்னை எப்படி ஆசிரியராகப் போடலாம்? உங்கள் பெயரைப் போடுவதுதானே முறை” என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., “நான் சில பத்திரிகைகள் தொடங்கி பாதியிலேயே நின்று போயிற்று. எனவே முகவர்களுக்கு எம்.ஜி.ஆரைவிட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்” என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் கையில் இருந்த காகிதத்தை வாங்கி ஆசிரியர் எம்.ஜி.ஆர்.,துணையாசிரியர் சோலை என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார் சோலை. ஆனாலும், அடுத்து வந்த விளம்பரத்தில் துணையாசிரியருக்குப் பதிலாக இணையாசிரியர் என்றே வந்தது.
எம்.ஜி.ஆர். உடன் இவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தபோதிலும் ஒரு எளிய காந்தியவாதி தாக்குதலுக்கு உள்ளானபோது கோபக்குமுறலுடன் உரிய நேரத்தில் நீதி கேட்கவும் தவறவில்லை. அப்படியொரு நிகழ்வு எண்பதுகளின் தொடக்கத்தில் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நக்சல் இயக்கம் எழுச்சி பெற்றுள்ளதற்கான விவசாய நிலம் குறித்த பின்னணி பற்றி காந்தியவாதி விநோபா பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் ஆய்வு பாதயாத்திரை மேற்கொண்டார். ஜெகநாதனின் இந்த யாத்திரை நக்சல் குரலுக்கு ஆதரவானது என்று கருதிய ஒரு அதிகாரி ஜெகநாதன் மீது நேரடியான வன்முறை தாக்குதல் நடத்தினார். இச்செய்தியை கேள்விப்பட்டவுடன்சோலை பதற்றமுற்று எம்.ஜி.ஆரைச் சந்திக்க நேரடியாக சென்றுவிட்டார். எம்.ஜி.ஆரின் அழைப்பின்றி தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத சோலை நேரடியாகவே, “அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இது உங்கள் ஆட்சியின் மீதான மக்கள் அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்கும்” என்று தனது உள்ளக்குமுறலை பத்திரிகையாளனுக்குரிய ஆவேசத்துடன் எம்.ஜி.ஆரிடம் வெளிப்படுத்தினார். சோலையை ஒருபோதும் இப்படிக் கண்டிராத எம்.ஜி.ஆர். அன்று முழுவதும் சாப்பிடக்கூட மனமின்றி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அடுத்த நாளே அங்கிருந்த அதிகாரிகள் அனைவரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதனை அடையாளம் காட்டச் சொன்னார். நடவடிக்கை எதுவும் வேண்டாம். மன்னித்து எச்சரிக்கை செய்து அனுப்புங்கள் என்று கூறிவிட்டார் ஜெகநாதன்.
இச்சம்பவம் நடந்த மிகச் சில ஆண்டுகளில் ‘அண்ணா’ பத்திரிகையின் இணையாசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால் இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்க ஆலோசகராகவேதான் இருந்தார். காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்கள் சோலையின் அரசியலுடன் முரண்பாடுகள் கொண்டிருந்தபோதிலும் அவரது நேர்மைக்காகவும் துணிச்சல் மிகுந்த எழுத்துக்காகவும் நட்பும் மரியாதையும் பாராட்டத் தவறியதில்லை. மேலும், பொறுப்பில் இருந்த பல முக்கிய தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் பத்திரிகையாளனுக்குரிய தனித்துவத்தையும், கம்பீரத்தையும் இழக்காமல் இருந்தார். காரணம், அதிகாரத்தை ஒருபோதும் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர் அல்ல சோலை.
‘நவமணி’ பத்திரிகையில் காங்கிரஸ் அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் அதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்களையும் மிகக் கூர்மையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகள் திமுகவுக்குக் கருத்தியல் ஊக்கத்தை அளித்தது. விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற இளம் மாணவர் காமராஜரைத் தோற்கடிக்கும் வாய்ப்பினை உருவாக்கியதில் சோலையின் எழுத்துகளுக்கு முக்கிய பங்குண்டு. ‘உண்மை சுடும்’ என்ற தலைப்பில் காமராஜரைக் கடுமையாக விமர்சித்திருந்ததால் தன் மீது அவருக்கு கோபத்தை உருவாக்கி இருக்கும் என்று நினைத்தார் சோலை. சோவியத் யூனியன் சென்று திரும்பும் வழியில் டெல்லியில் எங்கு தங்குவது என்று நினைத்த சமயத்தில் ‘நவசக்தி’ நிருபர் மூலமாக தனது இல்லத்தில் வந்து தங்கிக்கொள்ளும்படி தகவல் அளித்தார் காமராஜர். அச்சமயம்சோலை வீட்டுக்கு வெளியே மறைவாக சிகரெட் பிடிப்பதை கவனித்த காமராஜர், தனது சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிட்டதால் மீதமிருந்த உயர் ரக சிகரெட்களை உதவியாளர் மூலம் சோலைக்குக் கொடுக்கச் செய்தார்.
இடது சாரி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும் இறுதிவரை சர்வோதயா சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவராகவே இருந்தார். எழுத்தில் அவ்வப்போது திமுக, அதிமுக சார்புத் தன்மை இடம்பெற்றாலும் பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு நிலையைக் கைவிட்டதில்லை. மன்மோகன்சிங்கின் உலகமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளையும், பாஜக மதத்தை அரசியலில் கலப்பதையும் எதிர்த்து சரளமான தமிழ் பழமொழிகளுடனும், தமிழ் வழக்காறுகளுடனும் யாருக்கும் புரியும்விதமாக தீவிரத் தன்மையுடன் முன்வைத்தார். அதிகார மட்டத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை சுய முன்னேற்றத்துக்காக, வாழ்க்கை வசதிகளுக்காக மடை திருப்பியதில்லை. பெரிய குடும்பஸ்தனான சோலை தமது குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக யாரிடத்திலும் போய் நின்றதில்லை என்பது மட்டுமல்லாமல் தனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்ற விதித்த கட்டுப்பாட்டின் மூலம் குடும்பத்தாரின் மனக்கசப்புக்கும் ஆளாகி உள்ளார். வார்டு கவுன்சிலர்கள், ஒன்றியச் செயலாளர்கள்கூட தமது அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு உற்றார் உறவினரை பக்கபலமாக வைத்துக்கொள்ளும் இக்காலச் சூழலில், சோலை பல்வேறு தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தபோதும் குடும்ப வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் தனித்தனியாக பிரித்து வைத்திருந்தார்.
ஒருமுறை சோலையின் மூன்றாவது மகன் திருமணம் கோவையில் நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமண உறுதிச் சான்றிதழ் பதிவு செய்வதற்காக கொடுமையான வெயிலில் மணமக்களுடன் சோலை அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொறுமையுடன் பதிவு செய்து சென்றோம். அச்சமயம் மணமக்களுக்கு வாழ்த்து கூறுவதற்காகசோலை வீட்டுக்கு வந்த அன்றைய அமைச்சர் ஐ. பெரியசாமி மேற்கண்ட விஷயத்தை கேள்வியுற்று, ‘ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருக்கலாமே, விரைவில் முடித்து அனுப்பியிருக்கலாம்’ என்றார். அச்சமயம் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர் இவர். பல்வேறு அரசியல்துறை நண்பர்கள் எம்.பி. பதவி வகித்தபோது சோலை மீது கொண்ட அன்பு காரணமாக ரயில்வே துறையில் அவசர இடவசதி வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளும்படி லெட்டர் பேடு கொடுப்பார்கள். அவசர காலத்துக்குகூட அவரும் பயன்படுத்தமாட்டார், குடும்ப அன்பர்களுக்கும் கொடுக்கமாட்டார். குப்பைக்குத்தான் போய் சேரும். பெரியவர்களுடன் பழகி, தான் கற்ற உயர்ந்த பண்புகளைச் சொந்த வாழ்வில் இறுதிவரை கடைபிடித்தவர். வயதாலும், அனுபவத்தாலும் ஒரு மூத்த பத்திரிகையாளராக இருந்தாலும் வயது பேதமின்றி எல்லோரையும் ‘அண்ணே’ என்று விளிப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தார். பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்காக அரசு அளித்த வீட்டை கல்விக்காகவும், வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு திண்டுக்கல் பகுதியிலிருந்து வரும் அடித்தட்டு தலித் இளைஞர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாகவும் மாற்றியிருந்தார். அவ்வாறு தங்கும் இளைஞர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையை ஏற்பாடு செய்வது,வேலைக்காக முயற்சி செய்து வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை தன் பொறுப்பில் ஏற்றிருந்தார். விருதுகளின் மூலம் வந்த பணமுடிப்பைக்கூட தலித் வகுப்பினரின் கல்வி முன்னேற்ற வளர்ச்சிக்குக் கொடுத்துள்ளார்.
எத்தனை உயரத்துக்குப் போனாலும் நடுத்தர வாழ்க்கை முறைதான் அவருடையது. எதையும் திட்டமிட்டு செய்வது, காலம் தவறாமை, தனக்கான விஷயத்தை யாருடைய உதவியையும் எதிர்பாராது தன்னளவில் முடித்துக்கொள்வது, இறுதிவரை ஆட்டோ, மாநகரப் பேருந்தில் மட்டுமே பயணிப்பது, வீட்டு நிர்வாகத்தில் முதற்கட்டத்தில் முரட்டுத்தன்மை இருந்தாலும், பிற்காலத்தில் அதை உணர்ந்து குடும்ப உறுப்பினர்கள் மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டார். சோலைஇறந்த காலத்தில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்த சாதிக் அவர்கள் முயன்று நினைவஞ்சலி கூட்டம் நடத்த இனமானத் தலைவர் வீரமணி அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அச்சமயம் எங்களிடம் வீரமணி அவர்கள் உரையாடியபோது, “சோலைக்கு இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது என்றே எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது” என்றார். அந்த அளவுக்கு அரசியலையும் குடும்பத்தையும் பிரித்து கையாண்டவர்.
தான் எழுதும் புத்தகங்கள் எல்லோரும் வாங்கும் விலையில் நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி விலைகுறைத்து நஷ்டம் ஏற்படும் என்றால் அதை தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்வதை ஒரு லட்சியமாகவே செய்து வந்தார். சோலை அவர்களின் குடும்பத்தில் ஓரளவுக்கு எழுத்துப் பயிற்சியுடைய நான் பல சமயம் அவரிடம் சென்று, “பெரிய அரசியல் திருப்பங்களுக்கும், காய் நகர்த்தல்களுக்கும் ஆதார சக்தியாக பல பெரிய மனிதர்களுக்கு உதவி இருக்கிறீர்கள். அதுபற்றி நீங்கள் எழுதாவிட்டாலும் பராவயில்லை. நீங்கள் சொல்லுங்கள். நான் வரும் காலத்தில் பதிவு செய்து கொள்கிறேன் தாத்தா” என்று கேட்டதுண்டு. “அதெல்லாம் அந்த நேர பொது நலனை உத்தேசித்து செய்தது. அதை தமக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டவர்கள் உண்டு. எனக்கு அவை இரண்டாம்பட்சம். அப்போது ரகசியமாக மேற்கொள்ளப்பட்டவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் என்னை முக்கியமானவனாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இனிமேல் இது பற்றி பேச வேண்டாம்” என்று திடமாக மறுத்துவிட்டார். ஆனால், நான் குடும்பத்தின் அன்பராக இருந்து கேட்டதால்தான் மறுத்துவிட்டார். வெளியிலிருந்து யாராவது அணுகியிருந்தால் கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விஷயங்கள் இவரிடமிருந்து பெற்று இருக்கலாம். முதுகுளத்தூர் கலவரம் போன்ற பெரிய அரசியல் நிகழ்வில் இவரது பங்கு முக்கியமானது.
அதிகாரம் நிறைந்த பொறுப்பில் இருந்தவர்களிடம் நெருக்கமான உறவு கொண்டிருந்தாலும் அதிகார வெளிச்சத்தின் மத்தியில் உலவிக் கொண்டிருந்தாலும் அதன் கறை ஒருபோதும் தன்மீது பட அனுமதிக்கவில்லை. தான் புரிந்த அனைத்து நன்மைகளிலும் தனது இருப்பை மறுத்ததுபோல கடைசி ஓராண்டில் தன்னை தாக்கியிருந்த கடுமையான நோயின் வலி, தளபதி ஸ்டாலின் மூலமாகவே எங்கள் குடும்ப அன்பர்களுக்கு தெரியவந்தது. ஸ்டாலின் அவர்களுடைய வற்புறுத்தல் மூலமாகவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தான் பட்ட வலியை எங்களுக்கு தராமலே தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.
இவரது பங்களிப்பு தமிழக அரசியலில் முக்கிய தடத்தை பதித்திருந்தபோதிலும் வெளி உலகில் தன்னை எப்பொழுதும் முன்னிறுத்தியதில்லை. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர். பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்தி சத்துணவு திட்டமாக செயல்படுத்திய எம்.ஜி.ஆரின் புகழ் ஐ.நா. சபை வரை பேசப்பட்டது. இதற்கான யோசனையை அளித்தவர் சோலை. எம்.ஜி.ஆருக்கும் இந்திராகாந்திக்கும் இடையே உள்ள இடைவெளியை பி.சி. அலெக்சாண்டர் மூலமாக குறைத்தவர்சோலை. தனது இலட்சிய மனிதர்களாக தமிழ்ச்சூழலில் இருவரை முன்னிறுத்தினார். ‘புரட்சியில் பூத்த சுதந்திர மலர்கள்’ என்ற நூலின் மூலம் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களையும், ‘அமைதியாக ஒரு கங்கை’ என்ற நூலின் மூலம் அசேபா லோகநாதன் அவர்களையும் தன் காலத்து நாயகர்களாக தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஈழப் பிரச்னையை முழுமையாக உள்வாங்கி நடுநிலையுடன் நின்று ‘ஈழம்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். மூத்த பத்திரிகையாளர் பார்வையில் ஸ்டாலின், வீரமணி ஓர் விமர்சனம் போன்ற நூல்களும் அடங்கும். ஷீரடி சாய்பாபா குறித்தும் ஆன்மிக நூலொன்று எழுதியுள்ளார். இவை போக கடந்த அறுபதாண்டு காலமாக பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் அந்தந்த அரசியல் சூழல்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து சோலை நினைவு களஞ்சியப் பெட்டகமாக உருவாக்கினால் அரசியல்துறை சார்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்கலைக்கழக வளாகங்களில் சோலை இருக்கை (Solai Chair) ஒன்றை நிறுவினால் அவரது எழுத்துகளை ஆவணப்படுத்தி வருங்கால ஆய்வாளர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அவரது பெயரும் நிலைத்திருக்கும், எழுத்தும் சாகாவரம் பெற்றுத் திகழும்.
கட்டுரையாளர் குறிப்பு: ரெங்கையா முருகன் – ‘அனுபவங்களின் நிழல் பாதை’ நூலாசிரியர்
அதிகாரங்களின் கறைபடாத எளிய மனிதர்: மூத்த பத்திரிகையாளர் சோலை - ரெங்கையா முருகன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:10:00
Rating:
No comments: