“தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்
இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் மனுவாத திட்டங்களுக்கு தலித்துகள் முடிவு கட்ட வேண்டுமென பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பிஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், தசராவின் போது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் எதை சுட்டுகின்றன என்றால்…முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும் தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன என்றார். ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யார் உங்கள் எதிரி? விஜயதசமியிலும் தசராவிலும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் பூஜைகளில் ஆயுதங்களை வைத்து பூஜிக்கிறீர்கள். அது போன்ற வழிபாடுகள் மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் தங்களுடைய ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்வகையில் ஏற்பட்டவை. ஆனால், இப்போது நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம். யாரும் நம்மை ஆட்சி செய்யவில்லை. நாம்தாம் நம்மை ஆள்கிறோம். பிறகு, ஏன் இந்த ஒடுக்கும் மனநிலைக்கான தேவை? நமக்கு அமைதியும் முன்னேற்றமும் சகோதரத்துவமுமே தேவை” என்றவர்,
“தலித்துகள், உயர்சாதியினருக்கு தாழ்ந்திருந்த ஒரு சமூக அமைப்பில், தன்னுடைய மனுவாத திட்டத்தை செயல்படுத்த முடியும் என நினைத்திருந்தது இந்த காவி அமைப்பு.ஒடுக்குமுறை அமைப்பை நிறுவ முடியாத ஆர் எஸ் எஸ்ஸிடன் இந்தக் கேள்வியைக் கேட்போம்…யாருக்கு எதிராக இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப்போகிறீர்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் சில சக்திகள், குண்டு வெடிப்புகளை நிகழ்த்திவிட்டு திரும்பிச் சென்றுவிடுகின்றன. ஆனால், ஆர் எஸ் எஸ், விஷ்வஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், கவ் ரக்ஷக் தள் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் சென்று குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக எவரேனும் கேள்விப்பட்டதுண்டா? அங்கே போய் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு திரும்பியிருந்தால், இவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் என புரிந்துகொள்ளலாம். உண்மையில் பாகிஸ்தானைப் பார்த்துதான் இவர்கள் பயந்துகொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்:ஆந்திராவில் செத்த மாட்டின்தோலை உரித்த தலித்துகளை
அடல் பிஹாரி வாஜ்பாயி அங்கே ராணுவத்தை அழைத்துச் சென்று போரிட்டார். ஆனால் அவர் தன் கத்தியை சுழற்ற முடியாமல், ஓடி வந்தார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் சேஷாதிரி சாரி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அதற்கு அடுத்த வருடம் பேட்டியளித்தார், “பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. பயிற்சியளிக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் ராணுவம் அங்கே அனுப்பப்பட்டு போரிட வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். இது வேறொன்றுமில்லை பாசாங்குத்தனம்தான். அவர்கள் பாகிஸ்தானை எச்சரிப்பார்கள், ஆனால் வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிடுவார்கள். எனவே தான் நான் கேட்கிறேன்.. உங்களுடைய ஆயுதங்கள் யாருக்கு எதிராக? தலித்துகளுக்கு எதிராகவா? நீங்கள் ஏற்கனவே முஸ்லீம்களை ஓரங்கட்டி விட்டீர்கள். இப்போது தலித்துகளுக்கு எதிராக நிற்கிறீர்கள்” என்று பிரகாஷ் அம்பேத்கர் நிறுத்தியபோது பலத்த கைத்தட்டல் ஒலித்தது. இந்த மாநாட்டில் பெருந்திரளான தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடியினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலித் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தலித்துகளை ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு எதிராக போரிடும்படி கேட்டுக்கொண்டார் பிரகாஷ் அம்பேத்கர்…
“நாட்டில் உள்ள சிறு கோயில்கள் மூலம் மட்டும் வருடத்துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்துதான் சங் பரிவார் அமைப்புகள் இயங்கவும் ஆயுதங்கள் வாங்கவும் செய்கின்றன. தலித்துகள் கோயிலுக்குப் போவதையும் மத அமைப்புகளுக்கு நன்கொடைகள் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும். இதை நிறுத்தினாலே ஆர் எஸ் எஸ்ஸின் பாதி கிளைகள் முடப்பட்டுவிடும்.
தலித்துகள், ஹிந்துத்துவ வலதுசாரி அமைப்புகளில் சேரும் முன் அவற்றைப் பற்றி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். தலித்துகளுக்கு எதிராக நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. கிராமங்களில் நடப்பவை வேறுபட்டவை. ஆனால் இது அமைப்பு ரீதியாக ஒடுக்குமுறையை ஏவும் திட்டம். அவர்கள், பயத்தை உருவாக்கி, சூழ்நிலையை கலவரத்துடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய நோக்கம்தான் என்ன? தலித்துகள் மீதும் அம்பேத்கரியவாதிகள் மீதும் அவர்கள் ஒடுக்குமுறை கட்டவிழ்க்க நினைத்தால் தலித்துகளால் போராட முடியும் என அவர்களுக்குத் தெரியும். அவர்களைத் தவிர வேறு ஒருவராலும் எதிர்த்து நிற்க முடியாது. அப்போது அவர்களுக்கு சுதந்திரமாக செயல்பட்டு மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்த முடியும். பாபாசாகேப் அம்பேத்கரின் முழு போராட்டமும் இந்த மனுஸ்மிருதியை எதிர்த்துதான்” என்றவர் தலித்துகள், தங்களுக்கிடையே உள்ள உள் சாதி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இறுதியாக பேசிய அவர், “பிரதமர் மோடி தன்னை சுடச் சொன்னார். ஆனால் அவர் வாழ நாம் விரும்புகிறோம். எப்படியிருப்பினும், இந்த வார்த்தைகள் யாருடையவை என பொதுவெளியில் சொல்ல வேண்டும். யாரிடமிருந்து அதைத் திருடினீர்கள்? இதைத் தெரிவிக்க வேண்டும் அல்லது செப்டம்பர் 16-ஆம் தேதி நாங்கள் அதை தெரிவிப்போம்”.
தலித் உரிமைகளைக் கேட்டு, தலித் ஸ்வாபிமான் சங்கர்ஷ் சமிதி தேசிய அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கிறது. இதனுடைய முதல் பொதுக்கூட்டம் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
“தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:38:00
Rating:
No comments: