இந்து முஸ்லிம் ஒற்றுமை இந்துத்துவா சக்திகளுக்கு ஆகாது: ஆளூர் ஷா நவாஸ்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ். தனது முகநூல் பக்கத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், மர்ம நபர்கள் சிலரால் வியாழக்கிழமை இரவு வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார். இதையடுத்து கோவையில் பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் அடித்து உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. வணிக நிறுவனங்கள், பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்டன. இந்நிலையில் ஆளூர் ஷா நவாஸ் தனது முகநூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“கோவையில் மீண்டும் 1997 போன்ற நிலையை உருவாக்க இந்துத்துவ சக்திகள் களமிறங்கியது ஏன்? இதை புரிந்துகொள்வது மிகவும் எளிது. இந்துத்துவா கும்பல் வன்முறை செய்ததற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் கோவையில் ஒரு இந்து பெரியவரின் இறப்பை முஸ்லிம்கள் பள்ளிவாசல் அறிவிப்புப் பலகையில் வெளியிட்டு, இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கு வலு சேர்த்தனர். அது மிகப்பெரும் செய்தியாகவும் மாறியது. ஆர்.எஸ்.எஸ். கும்பல் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வார்கள். ஆனால், இந்து முஸ்லிம் ஒற்றுமை என்றால் சகிக்கவே மாட்டார்கள். கோவையில் மத முரண்பாடுகள் நீடித்தால்தான் அவர்களின் இருப்பை தக்கவைக்க முடியும். மத நல்லிணக்கம் ஓங்கினால், அதுவே ஆர்.எஸ்.எஸ்ஸின் சவக் குழியாகிவிடும். எனவே, சாமி ஐயர் எனும் இந்து பெரியவரின் மரணத்தை கண்டு முஸ்லிம்கள் துயரமடைவது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆகவே ஆகாது. அதனால்தான் இந்த வன்முறைகள். காந்தி கொலை, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு… இவை அனைத்திலும் கைது செய்யப்பட்டவர்கள் இந்துத்துவ கும்பலே. ஏனெனில் காந்தி, இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர். அஜ்மீர் தர்கா என்பது இந்துகளும், முஸ்லிம்களும் சங்கமிக்கும் இடம். சம்ஜவ்தா ரயில் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவின் குறியீடாக ஓடும் ரதம். இப்போது சொல்லுங்கள்… ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமா? இந்திய நாட்டுக்கு எதிரான இயக்கமா?” என்று அவர் கூறியுள்ளார்.
இந்து முஸ்லிம் ஒற்றுமை இந்துத்துவா சக்திகளுக்கு ஆகாது: ஆளூர் ஷா நவாஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:06:00
Rating:
No comments: