இனயம் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கடலில் பேரணி!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இனயத்தில், ரூபாய் 27 ஆயிரத்து 500 கோடியில் பன்னாட்டு வர்த்தகத் துறைமுகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, பன்னாட்டு துறைமுகத்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இனயம் துறைமுகம் அமைக்கப்படும் இடத்தை சுற்றி 6 கி.மீ. தூரத்துக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால், அந்தப் பகுதியில் வாழும் மீனவர்கள், தங்கள் மீன்பிடித் தொழிலை இழக்கக்கூடிய சூழல் ஏற்படும் என்று அந்தப் பகுதி மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இனயம் துறைமுக நிர்வாக அலுவலகம் திறப்பு விழா, கருங்கல் அருகே உள்ள தொலையா வட்டத்தில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கடலுக்குள் மணலை நிரப்பி இந்தத் துறைமுகம் அமைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இனயம் துறைமுகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குமரி மாவட்ட மீனவர்கள், நேற்று கடல் வழியாக பேரணியை நடத்தினர். இந்தப் பேரணி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை 500 படகில் மீனவர்கள் பேரணியாகச் சென்றனர். படகுகளில், கறுப்புக்கொடிகளை கட்டியபடி, இனயத்துக்குத் துறைமுகம் வேண்டாம் என்ற கோஷங்களை எழுப்பியாறு பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் சுமார் 1500 மீனவர்கள் கலந்து கொண்டனர். பேரணி செல்லும் வழியில், மீனவர்களுக்கு ஆலயமணி அடித்து கடற்கரை கிராம மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இனயம் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கடலில் பேரணி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:33:00
Rating:
No comments: