நியூஸ் 18 குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது!
புதுடெல்லி (05 ஜன 2019): நியூஸ் 18 முதன்மை ஆசிரிய குணசேகரனுக்கு ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்பட்டது. அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதை வழங்கினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா நூற்றாண்டையொட்டி, அவரின் நினைவுகளை போற்றும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு ’ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. பத்திரிகையாளர்களின் நேர்மையான, மிகச்சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க நிகழ்வாக கருதப்படும் இந்த விருது வழங்கும் விழாவில், பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கிடையே தங்கள் பணியை துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வரும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், பிராந்திய மொழியில் ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை முழுமையாக ஆராய்ந்து விரிவாகவும், அழுத்தமாகவும், அம்மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிவு செய்யும் அச்சு மற்றும் ஒளிபரப்பு ஊடகவியலாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
2017 ம் ஆண்டுக்கான விருதுகளை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, பேராசிரியை பமீலா பிலிப்போஸ் ஆகியோரைக் கொண்ட நடுவர்குழு தேர்வு செய்தது.
அதன்படி, 2017ம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய ஊடகவியலாளருக்கான விருதுக்கு, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவ்விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். சிறந்த ஊடகவியலாளருக்கான விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
ஓகி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான குமரி கடலோரத்தில் களத்தில் இருந்து செயலாற்றி, பிரச்னைகளின் வேர்களைக் கண்டறிந்து களநிலவரத்தை மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் மு.குணசேகரன். ஒகி புயலின் பாதிப்பையும், மீனவர்கள் சந்தித்த துயரையும் ஒரு மணி நேர ஆவணப்படமாகவும், `களத்தில் இருந்து மக்களின் உணர்வுகளை ’காலத்தின் குரல்’ விவாத நிகழ்வின் மூலமாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தது; மீனவ சமூகத்தில் குறிப்பாக பெண்கள் படும் துயரை தொடர் நேரலைகள் மூலம் உலகறியச் செய்தது ஆகியவற்றுக்காக இவ்விருதுக்கு மு.குணசேகரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
நியூஸ் 18 குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:45:00
Rating:
No comments: