கன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பொறுப்பாளர்களாக இருந்த கன்னையா குமார், உமர் காலித் ஆகியோர் மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜே.என்.யு. வளாகத்தில் 2016 பிப்ரவரியில் நடந்த நிகழ்ச்சியில் ’தேச விரோத முழக்கங்கள்’ எழுப்பியதாகக் கூறி கன்னையா குமார், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா உள்ளிட்ட பத்து மாணவர்கள் மீது பதியப்பட்ட தேச விரோத வழக்கில் டெல்லி போலீசு 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை திங்கள் கிழமை தாக்கல் செய்துள்ளது.
உமர் காலித் மற்றும் கன்னையா குமார்.
உமர் காலித் மற்றும் கன்னையா குமார்.
மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி சுமித் ஆனந்த் செவ்வாய்கிழமை இதை விசாரிப்பார். இந்தக் குற்றப்பத்திரிகையில் அகூப் உசைன், முஜீப் உசைன், முனீப் உசைன், உமர் கல், ராயியா ரசூல், பசீர் பட், பஷ்ராத் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. தேச விரோத வழக்கு உள்பட பல வழக்குகள் இவர்கள் மீது பதியப்பட்டுள்ளன.
குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், மக்களவை தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்கிறார். முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக அனைத்தும் அரங்கேறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதற்காக டெல்லி காவலர்களுக்கும் மோடிக்கும் நான் நன்றி சொல்கிறேன். அரசியல் நோக்கத்திற்காக மூன்று ஆண்டுகள் கழித்து குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகியிருக்கிறது. நான் என்னுடைய நாட்டின் நீதித்துறையை நம்புகிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார் கன்னையா.
சி.பி.ஐ. தலைவர் டி. ராஜாவின் மகள் அபராஜிதா, அப்போதைய மாணவர் சங்க துணைத் தலைவர் ஷீலா ரஷீத், ராமா நாக, அசுதோஷ் குமார், பனோஜோத்சனா லஹிரி ஆகியோர் மீது போதிய ஆதாரம் இல்லை என்ற காரணம் கூறி பத்தி 12 (column 12) கீழ் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி. ராஜா, தேசத்திற்கு எதிரான எந்தவித நடவடிக்கையிலும் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தோர் ஈடுபடவில்லை என்றும் அரசியல் நோக்கத்துக்காக குற்றப் பத்திரிகை தாக்கலாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தேர்தல் நெருங்க நெருங்க காவிக் கும்பல் ‘பாரத் மாதாகி ஜெய்’ என உரக்க கத்தும். கோரஸ் பாடாதவர்களை ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தும். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘மோடியை வீழ்த்த காங்கிரஸ் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்கிறது’ என பேசியிருந்ததைக் கேட்டு, சமூக ஊடகங்கள் இரண்டு நாட்களாக சிரிப்பாய் சிரித்தன. வளர்ச்சி என்கிற பெயரில் ஓட்டுப்பிச்சை வாங்கிய காவி கும்பல், ஐந்தாண்டு கால ஆட்சியில் தம்மை நடுத்தெருவில் நிறுத்தியதை மக்கள் மறக்கவில்லை; மறக்கவும் கூடாது!
நன்றி : வினவு
கன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:52:00
Rating:
No comments: