ISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள் - அபூ சித்திக்
முஸ்லிம்களைக் கைது செய்வதற்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் முன்பெல்லாம் உருவாக்கப்படும். ஜெய்ஷ்- இ-முகம்மது, லஷ்கரே தொய்பா என்று பல்வேறு பெயரில் கைதுகள் தொடரும். ஆனால் பாஜக ஆட்சி தொடர்ந்த பிறகு, ஒரு புது அமைப்பின் பெயரில் கைது செய்யப்பட்டு அது ISIS எனும் சர்வதேச பயங்கரவாதத்துடன் இணைந்தது என்று கூறி கொத்து கொத்தாக முஸ்லிம்கள் வேட்டையாடப் படுகிறார்கள். வேட்டையாடப்படும் வேலையை NIA துரிதமாகவே செயல்படுத்தி வருகிறது.
சமீப வருடங்களாக இந்தியா முழுவதும் ISIS உடன் தொடர்பு என்று கூறி முஸ்லிம்கள் மீதான NIA கைது நடவடிக்கைகள் அதிகமாக உள்ளது. இந்த கைது நடவடிக்கைகளுக்கு தமிழகமும் விடுபடாமல் பெரும் விளம்பரத்துடன் 2016ல் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று நாம் அப்போதே பல்வேறு ஆதாரங்களுடன் எழுதியிருந்தோம்.
மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் NIA அதிகாரிகள் எப்படியான கைது நடவடிக்கைகளையும், போலி சாட்சியங்களையும் உருவாக்கினார்களோ, அதையே தற்போது தலைநகர் டெல்லியிலும் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
ISIS பெயரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள்
திசம்பர், 26ம் தேதி தலைநகர் டெல்லி மற்றும் உத்திரப் பிரதேசத்தின் அரோஹா என்ற கிராமத்திலும் NIA அதிகாரிகளால் 12 முஸ்லிம்கள் ISIS உடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் இருவர் விடுவிக்கப்பட்டு மீதம் 10 பேர் NIAவின் விசாரணைக்கு இழுத்து செல்லப்பட்டனர்.
NIA அதிகாரிகள் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த தகவலின் படி, ISIS அமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் 'ஹர்கத்-உல்-ஹ்ர்ப்-இ-இஸ்லாம்' (இஸ்லாத்தின் படைவீரர்கள்) எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல அரசியல் தலைவர்களையும், டெல்லியின் காவல் தலைமையகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஷாகா நடைபெறும் இடங்களையும் தாக்க திட்டம் போட்டிருக்கிறார்கள்.
NIA தலைமை அதிகாரி அலோக் மிட்டால் பத்திரிக்கை சந்திப்பில், எங்கள் முதற்கட்ட விசாரணையில் அவர்களிடமிருந்து நிறைய வெடிபொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். அவர்கள் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டுகள் செய்வதிலும், தற்கொலை தாக்குதல் நடத்துவதிலும் தீவிரமாக இருந்துள்ளனர். அவர்களிடம் 150 வெடிபொருட்கள், 112 அலாரம் கடிகாரங்கள், செல்போன்களின் எலக்டிரிகல் பாகங்கள், 21 பைப்புகள், 91 மொபைல் போன்கள், 134 சிம்கார்டுகள், 3 லேப்டாப், ஒரு கத்தி, ஒரு வாள், ISIS சம்பந்தமான புத்தகங்கள், 7 லட்சம் பணம், 25 கிலோ வெடிமருந்து, ராக்கெட் லாஞ்சர் உட்பட மற்றும் இன்னும் சிலவற்றைப் பறிமுதல் செய்திருப்பதாக பெரிய பட்டியலைச் சொன்னார்.
அதன் படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. காரணம், அவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட படத்தில் தீபாவளிப் பண்டிகையின் போது கேளிக்கைக்கு உபயோகப்படுத்தும் சாதாரண வெடி வகைகளும், ராக்கெட் லாஞ்சர் என்று கூறி டிராக்டர் பாகம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
இந்த அமைப்பின் தலைவர் என்று கூறி மதரஸாவில் படித்து வந்த மாணவர் முப்தி முகம்மது சுஹைல் (29) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் உள்ள ஜாஃபரபாத் பகுதியில் தங்கி வாட்சாப் மற்றும் டெலிகிராம் வலைத்தளங்கள் மூலமாக தீவிரவாதிகளிடம் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் உதவியோடு இதை செய்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
24 வயதான அனஸ் யூஸுப் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பிரிவில் பயின்று வருகிறார். இவர் குண்டுவெடிப்புக்கான பேட்டரி, கடிகாரம் போன்றவற்றை வாங்க உதவினார் என கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ராஷித் ஜாபர் ராக்(23) துணி வியாபாரம் செய்து வருபவர், சயீத் (28) வெல்டிங் கடை வைத்திருக்கிறார், இருவரும் வெடிகுண்டுகளைத் தயாரித்தார்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாவது வருடம் BA படித்துக் கொண்டிருக்கும் ஜுபைர் மாலிக் மற்றும் அவரது சகோதரன் சயீத் மாலிக் இருவரும் போலி ஆவணங்களைக் கொண்டு குண்டு தயாரிக்க சிம்கார்டுகள் வாங்கித் தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஹாபுர் பள்ளியின் இமாம் சகிப் இஃப்தெகர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் முகம்மது இருவரும் வெடிகுண்டுகளை ஒளித்து வைக்க உதவியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மெடிக்கல் கடை நடத்தி வரும் முகம்மது ஆஜம் ஆயுதங்களை தயாரிக்க உதவியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவர்கள் அனைவரும் 120B, 121,121A இந்திய தண்டனை சட்டத்தின் கீழும், UAPA பிரிவுகள் 17,18,18B,20,38,39ன் கீழும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். (ஆதாரம் - INDIA TODAY 26/12/18)
அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள்
மெடிக்கல் கடை நடத்தி வரும் முகம்மது ஆஜம், இங்கிருக்கும் அனைத்து சமூக மக்களிடமும் நற்பெயர் பெற்றவர். அவர் நல்லவர் என்று உறுதி கூற இங்கிருக்கும் பலரும் வருவார்கள் என்று இந்தியா டுடே பத்திரிக்கைக்கு கூறுகிறார்கள் அப்பகுதியினர். அதுமட்டுமல்ல அதிகாரிகள் இங்கே வந்து முகம்மது ஆஜம் வீட்டை சோதனை செய்த போது அவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. நாங்கள் அனைவரும் அங்கே தான் இருந்தோம் என்றும் கூறுகிறார்கள். ( INDIA TODAY 26/12/18)
சயீத் மற்றும் ஜுபைர் மாலிக்கின் தந்தை குல்சார் அஹமத் சொல்லும் போது, உங்களுக்கு பத்திரிக்கையின் மூலம் என்ன தெரியுமோ அதுதான் எங்களுக்கும் தெரியும், அதிகாரிகள் எங்களிடம் எதுவுமே சொல்லாமல் மகனை இழுத்துச் சென்று விட்டதாக கண்ணீருடன் புலம்புகிறார்.
அனஸ் யூஸ்ப் உறவினர் கூறும் போது, காலை ஐந்து மணிக்கெல்லாம் நூற்றுக்கும் அதிகமான காவல் அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே குவிந்து யூஸுப்பின் முகத்தை மூடி இழுத்துச் சென்றனர். இது ஜாஃபர்பாத் முழுவதில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்றார்.
முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் சுஹைலைப் பற்றி அவரது மாமா சொல்லும்போது, 'சுஹைல் சிரியாவுக்குப் போயிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சுஹைல் வெளிநாட்டுக்கு எங்குமே சென்றதில்லை. எங்களிடம் சுஹைலின் பாஸ்போர்ட் காப்பி இருக்கிறது. அதில் அப்படி எதுவுமே இல்லை. வேண்டுமென்றே இதில் சுஹைல் சிக்க வைக்கப்படுகிறார்' என்கிறார். ( TOI 27/12/2018)
சயீத் உடைய வெல்டிங் கடைக்கு, கிராம மக்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்றார்கள். அவருடைய வேலையே டிராக்டர்களுக்கும் வண்டிகளுக்கும் பிஸ்டன் செய்து தருவது தான். ஆனால், அதிகாரிகள் இந்த டிராக்டரின் பிஸ்டனை ராக்கெட் லாஞ்சர் என்று அபாண்டமாகக் கூறுகிறார்கள். 26 வருடமாக எனக்கு அவனைத் தெரியும். அவன் அப்படி செய்பவனில்லை என அப்பகுதியைச் சார்ந்த முஹம்மது என்பவர் சொல்கிறார். (The New Indian Express 28/12/18)
முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டிருக்கிற சுஹைலைப் பற்றி அப்பகுதியின் மூத்த மனிதர் முகம்மது இசாக் கூறும் போது, 'அந்த பையன் மிகவும் சாதுவானவர். நல்லவர். யாருடனும் சண்டையிட மாட்டார். இப்பகுதியில் அனைவரிடமும் நல்ல விதமாகவே பழகுவார்.' என்கிறார். ( First post 28/12/18)
அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மேற்கொண்ட விதிமீறல்கள்
கைதாயிருக்கும் ஜாஃபரின் மாமா இக்றார் அஹ்மத் சொல்லும் போது, 'எல்லோருக்கும் தெரியும் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யாரும் இப்படியான செயலை செய்திருக்க மாட்டார்கள். காலை 4 மணிக்கு வீட்டில் சோதனையைத் தொடங்கிய அதிகாரிகள் மதியம் 12 மணி வரை தொடர்ந்தனர். எந்த வித அனுமதியும் இல்லாமல் வீட்டுக்குள் புகுந்து எல்லாவற்றையும் எடுத்து சென்றார்கள்' என்கிறார். ( TOI 27/12/2018)
கைதாயிருக்கும் ராஷித் ஜாஃபர் ராக் அவர்களின் வீட்டுக் கதவை காலை 5.30 மணிக்கு தட்டி வீட்டின் முன்னால் கார் இடையூறாக நிற்கிறது என்று எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது வெளியே வந்த ராஹித்தை கைது செய்து முகத்தை மூடி இழுத்துச் சென்றிருக்கிறார்கள். 14 மணி நேரமாக வீட்டின் எல்லா மூலையிலும் சோதனையிட்டு இறுதியில் எதுவும் கிடைக்காமல் வெளியேறினார்கள் என்கிறார் ராஷித்துடைய சகோதரரின் மனைவி ரெஹ்மத் ரியாஷ்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அக்ரோஹா கிராமத்தில் கைதாக்கப்பட்ட சயீத் மற்றும் ரயிஸ் வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. ரயிஸ் வீட்டை அதிகாரிகள் சூறையாடியதை அவர்கள் அம்மா முஸ்தாரியா விவரிக்கிறார், 'காலை மூன்று மணிக்கெல்லாம் வந்து மதியம் 12 மணி வரை எங்களை மிரட்டினார்கள், வீட்டின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் சோதனையிட்டார்கள். எங்களை எதையும் பேச அனுமதிக்கவில்லை. பாத்ரூம் போக கூட அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டுப் பெண்கள் தங்கள் உடைகளிலேயே சிறுநீர் கழிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். குழந்தைக்கு பால் உட்பட எதையும் கொடுக்க அனுமதிக்கவில்லை. குழந்தை கூட என்ன பாவம் செய்தது' என பரிதாபமாக அழுது கொண்டே நடந்ததைக் கூறினார். ( New Indian Express 28/12/18)
கைது செய்யப்பட்டிருக்கும் ராஹித் ஜாஃபரின் தந்தை இக்பால் அஹமத் அடுத்த நாள் நீதிமன்றத்தில் தன் மகனைக் காண வந்திருந்தார். ஆனால் அவரிடம் முறையான ஒரிஜினல் அடையாள அட்டை இல்லை எனக் கூறி ராஹித்தைப் பார்ப்பதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆனால், வீட்டை சோதனை செய்த அதிகாரிகள் வீட்டிலிருந்த எல்லா ஆவணங்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள். என்னிடம் எனது போட்டோவைத் தவிர வேறு எதுவுமில்லை என நீதிமன்ற வாசலிலேயே கதறுகிற நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.
கைது நடவடிக்கையை கேள்விகுட்படுத்தும் தலைவர்கள், அமைப்புகள்
கைது நடவடிக்கையை கேள்விகுட்படுத்தும் தலைவர்கள், அமைப்புகள்
தேர்தல் வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கை சந்தேகத்தை உருவாக்குகிறது. திருவிழாவில் பயன்படுத்தும் பட்டாசுகளைக் கொண்டு தீவிரவாதி என முத்திரையிடுவது தவறு. இதுபோல் எத்தனை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் மூலம் NIA கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் காஷ்மீர் pdp கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி. ( News 18,28/12/18)
ஜமியத்துல் உலமா அமைப்பும் இக்கைதுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ஜமியத்துல் உலமா சபை தீவிரவாதத்திற்கு எதிராக பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தீவிரவாதிகள் என்று கூறி ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை கைது செய்வது அனுமதிக்க முடியாது என்று வெளியிட்டிருக்கிறார்கள்.
NIA'வினால் முஸ்லிம்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கும் சில வழக்குகள்
திசம்பர்,2016ல் மதுரையில் NIA நிகழ்த்திய கைது நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டோர் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். அவர்கள் அப்பாவிகள் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் இருந்த போதிலும் கூட நீதிமன்றங்களை அணுகி வழக்கை நடத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
2016 ஜூன் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஹஷ்மாபாத் பகுதியில் ஹபீப் முகம்மது மற்றும் அப்துல் காதர் என்ற சகோதரர்களை NIa கைது செய்து காதரை சிறிது நேரத்தில் அனுப்பி விட்டார்கள்.ஆனால் ஹபீப் மட்டும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். விடுவிக்கப்பட்ட காதர் சொல்லும் போது நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் குடும்பத்தின் பெயர் அல்பக்தாதி. ISIS அமைப்பின் தலைவர் பெயரும் அல்பக்தாதி என்றிருப்பதால் மட்டுமே தனது சகோதரன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறார்.
ஆந்திரப் பிரதேஷத்தில் வழக்குரைஞர், ரவிச்சந்திரன் தனி நபராக உண்மை கண்டறியும் விசாரணையை மேற்கொண்டார். அதில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் 22 பேரின் வழக்குகளையும் ஆராய்ந்து இப்படி கூறுகிறார், எல்லோரும் நள்ளிரவு அல்லது முற்பகல் நேரத்தில் தான் கைது செய்யப்படுகிறார்கள். உடனே அவர்களை கண்களைக் கட்டி தனியார் விடுதிகளில் கொண்டு சென்று அடைத்து விடுகிறார்கள். பின்னர் 10 நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பல வருட சிறை தண்டனைகளுக்குப் பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள் என்கிறார். ( scroll 01/07/2016)
கைதை சந்தேகத்திற்குள்ளாக்கும் கேள்விகள்!
ஹுமா இஹ்தியார், கைது செய்யப்பட்டிருக்கும் ராஷித் உடைய மூத்த சகோதரரின் மனைவி கூறுகிறார், 'இரவு 7.30வரை 14 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனை எல்லாவற்றையும் முடித்து வீட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போது, ராஷித் அப்பாவி அதனால் கண்டிப்பாக நீதிமன்றம் விடுதலை செய்து விடும் என்று கூறி விட்டுச் சென்றார்கள். ஆனால் அடுத்த நாளே பத்திரிக்கையாளர்களிடம் ராக்கெட் லாஞ்சரை தயாரித்தார் என்று சொல்வதற்கான காரணம் என்ன?
கைது செய்யப்பட்ட அனஸ் யூசுஃப்பின் வீட்டில் பல்வேறு வெடிபொருட்களும் சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது வீட்டிலிருந்து அருகில் வெறும் 150 மீட்டர் தொலைவில் தான் ஜஃப்ராபாத் காவல்நிலையம் இருக்கிறது. அந்தப் பகுதி முழுக்க சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இருக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் காவல் அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாமல் போனது எப்படி? அப்பகுதி மக்களும் அப்படி எதுவும் கண்டதாக கூறவில்லை. அப்படியெனில் இந்த பொருட்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா? ( Hindustan Times 28/12/18)
கைது செய்யப்பட்ட அனஸ் யூசுஃப்பின் வீட்டில் பல்வேறு வெடிபொருட்களும் சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது வீட்டிலிருந்து அருகில் வெறும் 150 மீட்டர் தொலைவில் தான் ஜஃப்ராபாத் காவல்நிலையம் இருக்கிறது. அந்தப் பகுதி முழுக்க சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இருக்கும் பட்சத்தில் அங்கிருக்கும் காவல் அதிகாரிகளுக்கு எதுவும் தெரியாமல் போனது எப்படி? அப்பகுதி மக்களும் அப்படி எதுவும் கண்டதாக கூறவில்லை. அப்படியெனில் இந்த பொருட்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா? ( Hindustan Times 28/12/18)
சர்வதேச குற்றவாளிகள் என்று காட்டப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களில் தீபாவளிக்காக வெடிக்கும் பட்டாசுகளும், வேலைக்கு வைத்திருந்த டிராக்டர் பிஸ்டனும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முஸ்லிம்கள் வீட்டில் இருக்கும் எப்பொருளையும் பயங்கரவாத ஆயுதமாக திரித்து அவர்களுக்கு தீவிரவாத முத்திரை குத்துவோம் என்று முஸ்லிம்களை அச்சுறுத்துகிறதா NIA? இல்லையெனில் இவ்வளவு போலி சாட்சியங்களை உருவாக்குவதற்கான அவசியம் என்ன?
டெல்லியில் உள்ள ஜஃப்ராபாத் பகுதி தொடர்ச்சியாக அரசால் குறிவைக்கப்பட்டு வருகிறது 44.19% மக்கள் இங்கு முஸ்லிம்கள். இதுவே டெல்லி மக்கள் தொகையில் 12.66%. இங்கே கல்வியறியவைப் பொறுத்தவரை 74.20%. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் கல்வியறிவிலும் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதால் அவர்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இப்படியான செயலை செய்கிறார்களா?
முக்கிய குற்றவாளியாக இணைக்கப்பட்டிருக்கும் சுஹைலின் மூத்த சகோதரன் சொல்லும் போது, சுஹைல் பேட்டரி பழுது பார்க்கும் வேலை செய்கிறான். அதனால், அவனது டைரியில் பேட்டரியின் செயல்பாடுகளை குறிக்கும் படங்கள் வரையப்பட்டிருக்கும், அந்த இன்வெட்டர் காயிலின் படத்தை எடுத்து தீவிரவாத செயலுக்காக வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் என்கிறார். முஸ்லிம்கள் வீட்டில் எலக்ட்ரிக்கல் பொருள் இருந்தால் அது குண்டு தயாரிப்பதற்காக, முஸ்லிம்கள் வீட்டில் கத்தி இருந்தால் அது பெரிய தலைவர்களை கொல்வதற்கு எனக் கூறி கைது செய்யும் கொடுமைகள் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் முஸ்லிம் சமூகம் சந்திக்க வேண்டியிருக்கும்?. ( First post 28/12/18)
இந்தியாவில் முஸ்லிம்களுக்கான நீதியை யார் உறுதி செய்வது?
இந்தியாவில் முஸ்லிம்களின் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து நீதியைப் பெற்றுத்தர வேண்டிய நிலையில் உள்ள யாவரும், ஒடுக்குமுறைகளுக்கான காரணமே முஸ்லிம்கள் தான் என்று பொதுச்சமூகத்தில் முஸ்லிம்களை குற்றவாளிகளாக மாற்ற இத்தகைய தீவிரவாத முத்திரையைப் பதிக்க பாசிச அரசுகள் முயற்சிக்கின்றன.
மதுரையில் எப்படி NIA வால் கைது செய்யப்பட்டவர்கள் பத்து நாட்கள் விசாரணைக்குப் பின் துன்புறுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள் என்ற செய்தி வெளியானதோ, அதே போல் நடக்கும் வாய்ப்புகள் இந்த வழக்கிலும் இருக்கிறது. ஆனால் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் எப்போதும் தொய்வில்லாமல் தொடரும். அதையும் முஸ்லிம்கள் அனைத்து சமூகத்தாருடனும் இணைந்து முன்னிறுத்த வேண்டும்.
- அபூ சித்திக்
ISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள் - அபூ சித்திக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:54:00
Rating:
No comments: