வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி 31 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் பாலோ-ஆன் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தின் போது, தேநீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4ஆவது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தைச் சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. மேலும் இந்தச் சாதனையை படைத்த முதல் ஆசிய அணி என்ற பெயரையும் இந்திய அணி பெற்றுள்ளது.
கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தேஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி குறித்துப் பேசியுள்ள விராட் கோலி, “ஆஸ்திரேலிய மண்ணில் 72 ஆண்டுகளில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை. இந்திய அணிக்குச் சர்வதேச அளவில் வித்தியாசமான தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது. எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது. இந்த அணியை வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம், சிறப்புரிமையாகக் கருதுகிறேன். என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது. எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டியிருக்கிறது; பெருமைப்பட வைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
சிட்னியில் கடைசியாக இந்திய அணி 1978ஆம் ஆண்டில்தான் வென்றது. அதன்பிறகு 40 ஆண்டுகளாக சிட்னி மைதானத்தில் டெஸ்ட் போட்டி எதையும் இந்திய அணி வென்றதில்லை. இந்தப் போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில் 40 ஆண்டு சாதனை கைகூடாமல் போனது.
https://minnambalam.com/k/2019/01/07/42
வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இந்திய அணி! வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இந்திய அணி! Reviewed by நமதூர் செய்திகள் on 03:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.