ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை- ஸ்தம்பிக்கிறதா ராணுவம்?

ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை-  ஸ்தம்பிக்கிறதா  ராணுவம்?

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வர, ‘நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் ராகுல் விளையாடுகிறார். ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் எந்த ஊழலும் இல்லை’ என்று மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தாலும் அவற்றைப் பாதுகாத்து பராமரிக்கும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்றும், இதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒதுக்க வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன.
இதுபற்றி இந்திய ராணுவக் கட்டுமான நிறுவனங்களின் சங்கத் தலைவர் ப்ரவீன் மஹானா டெல்லியில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறார். அப்போது அவர்,
“ரஃபேல் போர் விமானங்களைப் பாதுகாப்பதற்கான hangers எனப்படும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுக்கவேண்டும். ஆனால் அந்தத் தொகையை இன்னும் விடுவிக்கவில்லை. ரஃபேல் விமானங்கள் முதல் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வர இருக்கின்றன.
ரஃபேல் விமானங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவுமான உள்கட்டமைப்பு வசதிகளை அம்பாலா, ஹாசிமரா ஆகிய இடங்களில் செய்து வருகிறோம். கடந்த ஏழெட்டு மாதங்களாக இந்தப் பணிகள் மிகவும் தொய்வடைந்துள்ளன. இன்னும் சொல்லப் போனால் இரண்டு மாதங்களாக ரஃபேல் விமானங்களுக்கான பராமரிப்பு உள்கட்டமைப்புப் பணிகள் போதிய நிதியின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. நாங்கள் இந்தப் பணிகளை வங்கிக் கடன் மூலமாகத்தான் செய்து வருகிறோம். ஆனால் இப்போது வங்கிகளும் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன” என்று வேதனை தெரிவித்தார்.
மேலும், “ரஃபேல் விமானங்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல், மே மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 40 முதல் 50 % பணிகள்தான் முடிந்திருக்கின்றன” என்றும் மஹானா கூறினார்.
ரஃபேல் விமானத்துக்கான பராமரிப்பு உள்கட்டமைப்பு மட்டுமல்ல, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவக் கட்டுமானப் பிரிவில் 20 ஆயிரம் கான் ட்ராக்டர்களும், 50 லட்சம் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லைச் சுவர்கள், ஏவுகணைக் கொட்டகைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்களுக்கான ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு நிதி ஒதுக்காததால் இந்தப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் ராணுவக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தினர்.
இச்சங்கத்தின் துணைத் தலைவர் அசிசுல்லா கான், “கடந்த வருடம் தீபாவளிக்கு முன்னரே பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதிப் பற்றாக்குறை பற்றி வலியுறுத்தினோம். அதன் பின் வெறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். அதுவும் ராணுவத்தின் தெற்கு கமாண்ட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதுவும் நாடாளுமன்றத்தில் பிரச்சினைக்கு உள்ளான ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிகல் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது” என்றார்.
“இன்னும் பதினைந்து தினங்களுக்குள் போதிய நிதி ஒதுக்கவில்லை என்றால் ராணுவக் கட்டுமானத் துறையினர் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்தார் சங்கத் தலைவர் ப்ரவீன் மஹானா.
அரசை எதிர்ப்பவர்கள் மீது தேச துரோக குற்றச்சாட்டுகளும், ஆன்ட்டி இந்தியன் என்ற சொற் குண்டும் வீசப்படுகிற நிலையில், ராணுவ கட்டுமான பொறியாளர் சங்கத்தினரின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
https://minnambalam.com/k/2019/01/29/30
ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை- ஸ்தம்பிக்கிறதா ராணுவம்? ரஃபேல்: வாங்கினாலும் வைக்க வசதியில்லை- ஸ்தம்பிக்கிறதா ராணுவம்? Reviewed by நமதூர் செய்திகள் on 02:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.