நெல்லையைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் லெனின் சிலைகள்!
திரிபுராவில் 25 ஆண்டுகளாக நிலவிய மார்க்சிஸ்ட் ஆட்சியை தோற்கடித்து பாஜக கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. இதன் விளைவாக திரிபுராவில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரிபுராவில் இடித்தால் நெல்லையில் முளைக்கும் என்பது போல தமிழகத்தின் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 12 உயர லெனின் சிலை நேற்று ஜனவரி 22 மாலை திறந்துவைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சிலையை திறந்து வைத்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன் கான், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
லெனின் சிலையை திறந்து வைத்து பேசிய சீதாராம் யெச்சூரி, “லெனின் ரஷ்யாவுக்கு மட்டுமல்ல உலகம் அனைத்துக்கும் உரிய தலைவர். நாடு, தலைமுறை எல்லைகளைக் கடந்து நிற்பவர் லெனின்” என்று குறிப்பிட்டு திரிபுராவில் தகர்க்கப்பட்ட லெனின் சிலைக்கு பதிலாக நெல்லையில் சிலை எழுப்ப முடிவு செய்த மார்க்சிஸ்ட் மாவட்ட நிர்வாகிகளைப் பாராட்டினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “இப்போதைய மோடி ஆட்சி அகற்றப்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும், அதேபோல தமிழகத்தில் இருந்து அதிமுக ஆட்சி அகற்றப்பட்டால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும். முதலில் மோடியிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம். அதன் பின் மாற்றங்களைக் கொண்டுவருவோம்” என்று குறிப்பிட்டார்.
தமிழக மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்களில் நாம் பேசியபோது, “லெனின் சிலை திறக்கப்பட்டதன் மூலம் அகில இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் நெல்லை மாவட்டம் இன்று பேசப்படுகிறது. இதுபோன்ற லெனின் சிலைகளை அடுத்தடுத்து தமிழகம் எங்கும் பரவலாக திறந்திட பல மாவட்டக் குழுக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்” என்று கூறினார்கள்.
நெல்லையைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் லெனின் சிலைகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:30:00
Rating:
No comments: