2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்!
புதுடெல்லி (03 ஜன 2019): 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிறுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டை புழக்கத்திலிருந்து இருந்து குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தி பிரிண்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
உயர் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்கள் பண மோசடி, வரி ஏய்ப்புச் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புழக்கத்தைக் குறைப்பதினால் பணம் செல்லாது என்று அர்த்தமில்லை என்றும் கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கப்பட்டதை அடுத்து வேகமாகப் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவே இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்று மத்திய அரசு கூற 2,000 ரூபாய் நோட்டுக்கள் பண மோசடியைக் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதே போன்று 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது முதல் இன்று வரை அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, காவல் துறை சோதனைகளில் சிக்குவதும் இந்த நோட்டுக்களே அதிகமாக உள்ளது. கோடாக் மஹிந்தரா வங்கி நிறுவனரான உதய் கோடாக்கும் கூட அரசின் உயர் மதிப்பு நோட்டு குறித்து விமர்சித்தார்.
2018 ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் பல மாநில ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு மாநில தேர்தல் காரணமாக இருக்குமோ எனச் சந்தேகப்பட்டது.
தினமும் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்துப் புதுப் புதிதாகச் சர்ச்சைகள் வலம் வந்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது கிடைத்துள்ள புழக்கத்தைக் குறைக்கும் செய்தி குறித்து ஆர்பிஐ வங்கியிடம் மனிகண்ட்ரோல் கருத்து கேட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:15:00
Rating:
No comments: