மற்றவர்களுக்குத் தைரியம் கூறும் அபிநந்தன் பெற்றோர்!
தங்களுக்கு ஆறுதல் கூற வருபவர்களுக்கு அபிநந்தன் பெற்றோர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
நேற்று இந்தியாவுக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. அப்போது விமானத்தில் இருந்து தப்பிக்க முயன்ற இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார். அவர் தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பாகிஸ்தான் வெளியிட்டு வருகிறது.
அபிநந்தனை பாதுகாப்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அவரது பெற்றோரும், அபிநந்தனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, அரசியல் கட்சித் தலைவர்கள் அபிநந்தன் பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, “ஜெனிவா ஒப்பந்தத்தின் படி, மனிதாபிமானத்தோடும் , மரியாதையுடன் அபிநந்தனை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அபிநந்தனை விடுவிக்க அனைத்து நாடுகளும் விரும்புகிறது. அபிநந்தனின் குடும்பத்தினர் மிக,மிக தைரியமாக, கவலைப்படாமல் இருக்கின்றனர். அவர்களை பார்க்க சென்ற எங்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். அவர் அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்கு அவர்கள் பெருமை கொள்கின்றனர். இதில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. இதுபோன்ற மிக மோசமான சூழலில் அனைத்து இந்தியர்கள் ஒன்றாகவே சிந்திப்பார்கள். அதுபோன்று தான் அரசியல் கட்சிகளும் சிந்திக்கின்றன” என்றார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ”அபிநந்தன் எனது மகன் மட்டுமல்லாமல் இந்த நாட்டிற்கு மகன். அவரை மீட்பதில் இந்தியா நடவடிக்கை எடுக்கும். ஒட்டுமொத்த இந்தியாவின் அன்பும், ஆதரவும் எனது மகனுக்கு உள்ளது என அவரது தந்தை கூறும் போது பெருமையாக இருந்தது. அவர்கள் முழு நம்பிக்கையுடன், தைரியத்துடன் இருக்கின்றனர். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்" என்று கூறியுள்ளார்.
மற்றவர்களுக்குத் தைரியம் கூறும் அபிநந்தன் பெற்றோர்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:20:00
Rating:
No comments: