“குறைந்தபட்ச ஆதார வருமானம் குறித்து ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்கினேன்” – தாமஸ் பிக்கெட்டி
தமிழில்: V. கோபி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச ஆதார ஊதியத்தை ஆதரித்துள்ள பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பொருளாதர அறிஞர் தாமஸ் பிக்கெட்டி, இந்தியாவின் அதிகார வர்க்கத்தினர் ஏழைகளை மிக மோசமாக நடத்துகிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார ஊதியத்திற்கான திட்ட வரைவிற்கு தான் உதவியுள்ளதாக தெரிவித்துள்ள பிக்கெட்டி, சாதிய அரசியலில் இருந்து வருமானம் மற்றும் செல்வத்தை பகிர்ந்தளிக்கும் அரசியலுக்கு மாற இதுவே சரியான நேரம் என்றும் கூறியுள்ளார்.
இந்த தேர்தல் வாக்குறுதி சம்மந்தமாக தாமஸ் பிக்கெட்டியும் 2015-ம் ஆண்டு பொருளாதரத்திற்காக நோபல் விருது பெற்றவருமான அங்கஸ் டீட்டனும் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனை வழங்கியதாக கடந்த மாதம் டெல்லியிலுள்ள The Print இதழ் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை மறுத்த டீட்டன், தான் அப்படி எந்த ஆலோசனையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கவில்லை என மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து தாமஸ் பிக்கெட்டி கூறுகையில், “காங்கிரஸ் முன்மொழிந்துள்ள தேர்தல் வாக்குறுதிக்கு நானும் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரான அபிஜித் பேனர்ஜியும் ஆலோசனை வழங்கினோம். இதனால் எவ்வுளவு செலவாகும், இதை எப்படி நடைமுறைப் படுத்தலாம் போன்றவை குறித்தும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை கூறினோம். என்னைப் பொறுத்தவரை அடிப்படை ஆதார ஊதியம் என்பது மிகவும் வரவேற்கக்கூடியது” என்றார்.
தொழில்துறை புரட்சியிலிருந்து எவ்வாறு சமத்துவமின்மை வளர்ச்சி அடைந்தது மற்றும் சில குடும்பங்களிடம் எப்படி அளவுக்கதிகமாக செல்வம் சேர்கிறது என்பதை விளக்கும் Capital in the Twenty-First Century என்ற புகழ்பெற்ற நூலை எழுதியுள்ளார் தாமஸ் பிக்கெட்டி, தற்போது பாரீஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வரும் பிக்கெட்டியை, பிரபல The Economist இதழ் “நவீன கார்ல் மார்க்ஸ்” என அழைக்கிறது.
முன்னதாக, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமான ஆதார திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒடிஸா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் வரலாற்றுப் பூர்வமான முடிவை எடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் பல கோடி மக்கள் பயன் பெற்றனர். இப்போது நாங்கள் அறிவித்துள்ளது அதைவிட பெரியது. நாட்டிலுள்ள எல்லா ஏழைகளுக்கும் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கான குறைந்தபட்ச வருமான திட்டத்தை கொண்டு வர உள்ளோம். தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாய குடும்பங்களுக்கு தினமும் 17 ரூபாய் தருவதாக கூறியுள்ளது. ஆனால் நங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்குவதற்கு உத்ரவாதம் தருகிறோம்” என்றார்.
நன்றி: theprint
“குறைந்தபட்ச ஆதார வருமானம் குறித்து ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்கினேன்” – தாமஸ் பிக்கெட்டி
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:34:00
Rating:
No comments: