பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெரும் அநீதி (கட்டுரை) - வி.களத்தூர் எம்.பாரூக்


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் பின்தங்கி இருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப்பணியில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கி இருந்த அந்த சமூகங்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு ஆளும் அரசுகளால் திட்டமிட்டு இன்று சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வாழும் மக்களின் 52% பேர்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கிறார்கள் என்று மண்டல் கமிசன் குறிப்பிடுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்துவதற்காக, அவர்களின் நலனிற்காக, முன்னேற்றத்திற்காக முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1978 ல் பி.பீ.மண்டல் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தார். அதுதான் மண்டல் கமிசன் என்று பரவலாக வழங்கப்படுகிறது. அந்த ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்து தனது அறிக்கையை 31.12.1980 ல் தாக்கல் செய்தது. நீண்டகாலம் சீண்டப்படாமல் இருந்த அந்த அறிக்கையை 1989 ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் துணிந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்பிறகு 07.08.1990 ல் அரசுப்பணியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் ஆணையை அவர் பிறப்பித்தார்.

பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பின்வாங்காமல் உறுதியாக நின்று இதை நிறைவேற்றியதாலேயே தனது ஆட்சியையும் அவர் பறிகொடுத்தார். அதனால்தான் வி.பி.சிங் சமூகநீதி காவலர் என்று பலராலும் அழைக்கப்படுகிறார். பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 27% இடஒதுக்கீடு 1993 ம் ஆண்டுமுதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதை அப்போதே பாஜக கடுமையாக எதிர்த்தது. வி.பி.சிங்கை மிரட்டியது. அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று எச்சரித்தது. அதன்படியே அந்த அரசிற்கான ஆதரவையும் விலக்கிக்கொண்டது பாஜக. 

எதிர்கட்சியாக இருக்கும்போதே  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த பாஜக ஆட்சிக்கு வந்தால் சும்மாவா இருக்கும்! நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த இடஒதுக்கீட்டினால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறாத வகையில் அநீதம் இழைக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களில் 40% பேருக்கு இடஒதுக்கீட்டின் பயன் சென்றடையவே இல்லை என்கிற ஓர் ஆய்வு அதை உறுதிப்படுத்துகிறது.

மத்திய இடஒதுக்கீட்டில்  பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை 2018 ம் ஆண்டு அக்டோபரில் இதர பிற்படுத்தப்பட்டோர் துணை வகைப்படுத்துதல் ஆணையம் தனது முதல் ஆலோசனை அறிக்கையை அளித்திருக்கிறது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களாக இருக்கும் IIT, NIT, AIIMS, மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்கள் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டின் நிலை குறித்து இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

ரயில்வேதுறை, காவல்துறை, அஞ்சல்துறை, பொதுத்துறை வங்கிகள், காப்பீடு, நிதி நிறுவனங்கள், குடிமைச் சேவைகள் மற்றும் மத்திய செயலாளர்கள் என அனைத்து துறைகளுமே இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுப் பட்டியலில் நாடுமுழுவதும் 2,633 சாதிகள் உள்ளன. இதில் 983 சாதிகளுக்கு மேற்கூறிய துறைகளில் ஒரு இடம்கூட கடந்த  3 முதல் 5 ஆண்டுகளில் வழங்கப்படவில்லை என்பது துயரமான செய்தியாகும். 994 சாதிகளுக்கு வெறும் 2.68% இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 10 சாதிகளுக்கு 24% இடங்களும், 38 சாதிகளுக்கு 25% இடங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது இதன்மூலம் தெரிய வருகின்றது. 

'மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களில் 15% பேருக்கு மட்டும்தான் இதன் பயன் சென்றடைந்துள்ளது' என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வி.ஈஸ்வரய்யா குறிப்பிட்டுள்ளார். அவரின் கூற்றையும் மேற்குறிப்பிட்டுள்ள புள்ளி விபரத்தினையும் பொருத்திப் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக  
தெரிகின்றது.

மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொந்தளித்தார். மேலும் அவர் குரூப் ஏ பணிகளில் 17%, குரூப் பி பணிகளில் 14%, குரூப் சி பணிகளில் 11%, குரூப் டி பணிகளில் 10% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக ஆதாரத்துடன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். 

இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவது அரசியல் சட்டத்தின் அடிப்படையான கடமையாகும். அரசுத்துறைகளில் இதைப் புறக்கணிப்பது அரசியல் சட்டத்திற்கும், சமூக நீதி கொள்கைக்கும் எதிரானதாகும். மோடி அரசு இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும், வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் அதிகாரத்தையும் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்
லிக்கொண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலன் என்று சொல்லிக்கொண்டும் பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். அன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்காக வி.பி.சிங் அரசை பாஜக கலைத்தது. இன்று ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்டுள்ள மக்கள் இடஒதுக்கீடு மூலம் முன்னேற்றம் காண்பதை தடுத்து கொண்டு இருக்கிறது. இதுதான் பாஜகவின் உண்மை முகம் என்பதை பிற்படுத்தப்பட்டுள்ள சமூக மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : புதிய பாதை பிப்ரவரி 2019
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெரும் அநீதி (கட்டுரை) - வி.களத்தூர் எம்.பாரூக் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பெரும் அநீதி (கட்டுரை) - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 03:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.