மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பன்! - வி.களத்தூர் எம்.பாரூக்
தமிழகத்தின் சோலைவனமாக உள்ள டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு உறுதி எடுத்திருப்பதுபோல் தெரிகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் அபாயகரமானவையாகவே உள்ளன. மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோலிய எரிவாயு என்ற வரிசையில் தற்போது ஹைட்ரோகார்பன். மண்ணை மலடாக்கும் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் மக்களும், விவசாயிகளும் திரண்டு அதற்கு எதிராக போராடி வருகிறார்கள். அதனால் திட்டங்களை அறிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் தயங்கி நின்றன அரசுகள். போராட்டங்கள் ஓய்ந்து மக்கள் அமைதியாக இருக்கும் நேரத்தை பார்த்து மத்திய அரசு தமிழர்கள் மீதான தனது 'தாக்குதல்' ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக 'ஹைட்ரோகார்பன் வளங்களை கண்டறிதல் மற்றும் உரிமை வழங்குதல்' என்ற கொள்கையை மத்திய அரசு 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய், பாறை எரிவாயு என அனைத்து வகையான ஹைட்ரோகார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பதே இக்கொள்கையின் நோக்கம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவோடு கார்பன் எனப்படும் கரி சேர்ந்தால் உருவாகும் பொருட்களே ஹைட்ரோகார்பன் எனப்படுகிறது.
இந்த ஹைட்ரோகார்பனை எடுப்பதற்கான இரண்டாம் கட்ட ஏல அறிவிப்பு 2019 ஜனவரி 07 ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நாகையில் மொத்தம் 471.19 ச.கி.மீ பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக திருப்பூண்டி, கரியாப்பட்டினம், கருப்பன்புலம், மடப்புரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோகார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 12 ம் தேதிவரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று ஹைட்ரோகார்பன் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் அறிவித்தவுடன் டெல்டா பகுதி விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உடனே இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். இதற்கு முன்பு முதல் சுற்று ஏலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அப்போது நாடு முழுவதும் 55 இடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. அதில் தமிழகத்தின் மூன்று இடங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் இரண்டு இடங்களை நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனம் எடுத்திருந்தது. அப்போதே அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. போராட்டங்கள் வெடித்தன.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வானகன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கு எதிராக மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நெடுவாசலிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நூறு நாட்களுக்குமேல் போராட்டம் நடைபெற்றது. தமிழகமே அந்த போராட்டத்திற்கு பக்கபலமாக நின்றது. இதனால் ஆடிப்போன அரசுகளும், ஒப்பந்தத்தை எடுத்திருந்த ஜெம் நிறுவனமும் பின்வாங்கி சென்றது.
நெடுவாசல் எழுச்சிக்குப்பிறகு 'ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு இனி அனுமதி வழங்காது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி தந்தார். 'காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி தந்தார். இவர்கள் இரண்டு பேர்களும் பொய் சொல்லியுள்ளனர்; மக்களை ஏமாற்றியுள்னர் என்பது தற்போது நடைபெற்ற ஹைட்ரோகார்பன் இரண்டாம் சுற்று ஏலம் மூலம் தெரிய வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் இதில் ஒன்றுபட்டு வேலை செய்வதுபோல் தெரிகிறது.
'காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் குறிப்பிடுகிறார். தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்துவரும் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் மத்திய அரசு அந்த பகுதியை இயற்கை வளங்களை கொள்ளையிடும் எரிவாயு மண்டலமாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
அதனால்தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை நொடிக்க வைக்கும் வேலைகளை கச்சிதமாக செய்து வருகின்றது. காவிரி நீரை உரிய முறையில் தமிழகத்திற்கு வழங்காமல் இருப்பதற்கும் இதுவே காரணமாகும். விவசாயத்திலிருந்து அந்த மக்களை வெளியேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த மண்ணில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய வேண்டும். இதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கின்றது. அந்த இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன.
பல நாடுகள் பூமிக்கு அடியில் இருந்து எரிவாயு எடுக்கும் பிராக்கிங் தொழில்நுட்பத்தை கைவிட்டுவிட்டது. பல நாடுகள் தடையும் விதித்திருக்கின்றன. பல நாடுகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்கள் மக்கள் தொகை குறைவான பாலைவனம், கடல்பகுதி உள்ளிட்ட பகுதிகளில்தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் அடர்த்தியான மக்கள் வசிக்கும் இடங்களிலும், விவசாய நிலங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. ஆட்சியாளர்களுக்கு மக்களின்மீது அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது. மக்களைவிட, விவசாயத்தைவிட கார்ப்பரேட்களின் நலன்தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. தூத்துக்குடியில் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக 13 அப்பாவி உயிர்களின் இரத்தத்தை குடித்த அரசுதான் இந்த மோடி அரசு என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
மண்ணை மலடாக்கும், நிலத்தடிநீரை மாசுபடுத்தும், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும், பல நோய்களை உண்டுச்செய்யும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதுவே வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : புதிய விடியல் 01-05 பிப்ரவரி 2019
மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பன்! - வி.களத்தூர் எம்.பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:37:00
Rating:
No comments: