விமானத் தாக்குதலை அரசியலுக்காகப் பயன்படுத்துவோம்: எடியூரப்பா
மத்திய அரசு ராணுவ நடவடிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், “பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதல் மூலமாக பாஜக கர்நாடகத்தில் 28 தொகுதிகள் வரை வெற்றிபெறும்” என்று பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் அதிகாலை இந்திய விமானப் படை யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த இரு நாட்களாக பதற்றம் நீடித்துவருகிறது. மேலும் பாகிஸ்தான் பிடியில் சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் சிக்கியுள்ளார். அவரை மீட்க வேண்டும் என்று கோரிக்கைக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்ற நிகழ்வில் பேசிய எடியூரப்பா, “நாளுக்கு நாள் பாஜகவின் பக்கம் வீசும் காற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலினால் மோடி சாதகமான அலை உருவாகியுள்ளது. இதன் தாக்கம் வரும் மக்களவைத் தேர்தலில் தெரியும். இந்தத் தாக்குதல் காரணமாக இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆகவே மக்களவைத் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் 22 தொகுதிகள் முதல் 28 தொகுதிகள் வரை வெற்றிபெற இது உதவிகரமாக இருக்கும்” என்று பேசியிருக்கிறார்.
இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், எடியூரப்பாவிற்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த தேசமும் ஒருங்கிணைந்து தீவிரவாதத்துக்கு எதிராகச் சண்டையிடும் மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் ஆதரவு தெரிவித்துவருகிறது. ஆனால் பாஜக தலைவரோ இந்தத் தாக்குதலால் தங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிகமாகக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் ஆதாயத்திற்காக நமது ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பயன்படுத்துவது அவமானகரமானது” என்று விமர்சித்துள்ளார்.
விமானத் தாக்குதலை அரசியலுக்காகப் பயன்படுத்துவோம்: எடியூரப்பா
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:21:00
Rating:
No comments: