அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க வலுக்கும் கோரிக்கை!
பாகிஸ்தான் பிடியிலுள்ள விங் கமாண்டர் அபிநந்தனை பத்திரமாக விடுவிக்க பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. அவரது உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் அபிநந்தனை இந்தியா அழைத்து வர வேண்டுகோள் விடுத்துள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, நேற்று பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பாகிஸ்தான் வெளியிட்டது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்
பாகிஸ்தான் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த இந்திய வெளியுறவுத் துறை, ராணுவத்திடம் பிடிபட்டுள்ள, நம் விமானப் படை விங்க் கமாண்டர், அபிநந்தன் வர்தமானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று பாகிஸ்தானிடம் கூறியுள்ளோம். அவரை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளோம். தாக்குதலில் காயமடைந்த வீரரை மிக மோசமான முறையில் காட்டும் விதமாக, பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று எச்சரித்துள்ளது.
இந்தியா அழைத்து வர கோரிக்கை
இதனிடையே அவரை இந்தியா அழைத்து வர பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி என அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சமூக வலைதளவாசிகள் வரை அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுபோன்று அவரது தாய் ஷோபாவும், அபிநந்தனை உடனே இந்தியா அழைத்து வர கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, அபிநந்தன் சிக்கிய தகவல் தெரிந்தவுடன் அவரது பெற்றோர் வசிக்கும் தாம்பரம் விமானப் படை ஓய்வு பெற்ற அதிகாரிகள் குடியிருப்பு பகுதியான மாடம்பாக்கத்தில் உள்ள ஜல்வியூ விஹார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானியர்களும் கோரிக்கை
பாகிஸ்தானின் செயலுக்கு அந்தநாட்டினரே கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், “இந்திய விமானி பிடிபட்டதை தைரியமாகவும் ஒளிவு மறைவின்றி பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
அதே வேளையில் அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் காவலில் உள்ள இந்திய விமானியை மரியாதையாக நடத்த வேண்டும் என பாகிஸ்தானியர்கள் குரல் கொடுத்து வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய இலக்கை கேட்கும் பாகிஸ்தான்; மறுக்கும் அபிநந்தன்
இதற்கிடையே பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனிடம் விசாரணை நடத்தும் வீடியோவையும் பாகிஸ்தான் வெளியிட்டது. அதில் அவர், சாதாரண உடையில் டீ அருந்திய நிலையில் உள்ளார். தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாகக் கூறுகிறார். அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.
அதற்கு, “என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்தவன்தான், இலக்கு குறித்து தாம் கூற முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
நச்சிகேத்தாவை நினைவூட்டும் அபிநந்தன்
1999ஆம் ஆண்டு கார்கில் போரின்போது தற்போது அபிநந்தன் போன்று ஹீரோவாகத் திகழ்ந்தவர்தான் கம்பம்பட்டியைச் சேர்ந்த நச்சிகேத்தா. கார்கில் போரின்போது பாகிஸ்தான் மீது போர் தொடுத்துவிட்டு இந்தியப் போர் விமானங்கள் திரும்பிக் கொண்டிருக்கும்போது நச்சிகேத்தாவின் விமானம் பழுதடைந்தது. இதில் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதித்த அவர், பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்டார்.
அப்போதும் அவர் தைரியமாகப் பாகிஸ்தான் படையினர் மீது தனது துப்பாக்கியின் இறுதி குண்டு தீரும் வரை தாக்குதல் நடத்தினார். எனினும் அவர் சிறை பிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அவரை மிகக் கடுமையாகக் கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தனர். ஆனாலும் இந்தியாவின் இலக்குகளும் தகவல்கள் எதுவும் சிறிதும் கசியவில்லை. பின்னர் பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவரே நச்சிகேத்தாவின் மன தைரியத்தைப் பார்த்து அவர் மீதான சித்திரவதைகளை நிறுத்தச் சொல்லியுள்ளார். இதுகுறித்து 2016இல் ஊடகம் ஒன்றிடம் நச்சிகேத்தா அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பார். அப்போது பாகிஸ்தான் படை தன்னை கொல்ல முற்பட்டதாகவும், திரும்ப இந்தியாவுக்கு வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும், அங்கு தான் பட்ட துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது எனவும் கூறியிருந்தார்.
அவர் பாகிஸ்தான் பிடியில் 1999 ஜூன் 3ஆம் தேதி வரை போர்க் கைதியாக இருந்தார். அதன் பின்னர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். நாடு திரும்பிய அவருக்கு விமானப் படையின் மிக உயரிய விருதான 'வாயு சேனா' விருது வழங்கப்பட்டது. அதுபோன்று இப்போது அபிநந்தனும் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க வலுக்கும் கோரிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:22:00
Rating:
No comments: