18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை!

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையனைத் தவிர மீதமுள்ள 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதையெதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் ஒன்றிணைந்த நிலையில், சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும், முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து கொறடா ராஜேந்திரனின் தகுதி நீக்கப் பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார். 15 நாட்கள் அவகாசம் கோரிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க கடைசி நாளான கடந்த 14ஆம் தேதி, கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களில் ஜக்கையன் மட்டுமே சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். தினகரன் தரப்பு தந்த அழுத்தத்தின் காரணமாகவே முதல்வருக்கு எதிராகக் கடிதம் கொடுத்ததாகத் தன்னுடைய விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அதே தினத்தில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று (செப்.18) உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் சார்பில் சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்ட 1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணமாகத் தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர் கீழ்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை இன்று முதல் ( செப்டம்பர் 18) தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக அவர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் விவரம்:
தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி தொகுதி
ஆர்.முருகன் - அரூர்
மாரியப்பன் கென்னடி – மானாமதுரை
கதிர்காமு - பெரியகுளம்
ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம்
பழனியப்பன் - பாப்பிரெட்டி பட்டி
செந்தில் பாலாஜி – அரவக்குறிச்சி
எஸ். முத்தையா – பரமக்குடி
வெற்றிவேல் – பெரம்பூர்
என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்
கோதண்டபாணி – திருப்போரூர்
ஏழுமலை – பூந்தமல்லி
ரெங்கசாமி – தஞ்சாவூர்
தங்கதுரை – நிலக்கோட்டை
ஆர்.பாலசுப்பிரமணி – ஆம்பூர்
எஸ்.ஜி.சுப்ரமணியன் – சாத்தூர்
ஆர்.சுந்தரராஜ் – ஒட்டப்பிடாரம்
கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம்.
முதலில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு மொத்தமுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி உடனே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்றுவிடலாம் என்பதுதான் எடப்பாடி தரப்பினரின் திட்டம் எனப் பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பினர், "எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல 48 மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பினர் மதியம் 12 மணியளவில் தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் தலைமை நீதிபதியோ ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று கூறியுள்ளார். எனவே மதியம் 2 மணியளவில் நீதிபதி துரைசாமியை சந்தித்து தினகரன் தரப்பினர் முறையிட உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை! 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.