பெண் விடுதலைப் போராளி பெரியார்!

சிறப்புக் கட்டுரை: பெண் விடுதலைப் போராளி பெரியார்!

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காகவே அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். ஜாதி ஒழிப்பையும், பெண் விடுதலையையுமே தனது முழு லட்சியங்களாகக் கொண்டு ஒரு நூற்றாண்டு காலம் போராடியவர் பெரியார். ஜாதி ஒழிப்புக்கும், பெண் விடுதலைக்கும் தடையாய் இருந்த மதம், கடவுள், சாஸ்திரங்கள் என எல்லாவற்றையும் கடுமையாகச் சாடி, அவற்றை சுக்கு நூறாக்கியவர். மனிதனுக்கு மனிதன் சமம் என்று சூளுரைத்தவர். அடிமைத்தனம் எந்த வகையிலானாலும் அதை எதிர்க்க சற்றும் தயங்காதவர்.
அவருடைய போராட்டத்தின் பலனாகத்தான் இன்றுவரை தமிழ்நாடு எந்த விதமான அடக்குமுறைகளுக்கும் முதலில் குரல் கொடுக்கும் சுயமரியாதை மிக்க மாநிலமாய், போராடும் மாநிலமாய் தனித்த அடையாளம் பெற்றிருக்கிறது. இதில் தந்தை பெரியார் பேசிய பெண் விடுதலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு யாரும் பேசிராத வகையில் தனித்துவமானது. அவருடைய 139ஆவது பிறந்த நாளான இன்று அவருடைய பெண் விடுதலை குறித்த சிந்தனைகள் சிலவற்றைக் காணலாம்.
பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கத்தினால் அடிமைகளாக இருந்த, இருக்கின்ற பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடி, பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் சாதிக்காரன் கீழ் சாதிக்காரனை நடத்துவதைவிட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். இது தந்தை பெரியார் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரோட்டில் ஆற்றிய உரையின் சிறு துளி. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் ஆற்றிய இந்த உரை இன்றும் பொருத்தமாய் தான் இருக்கிறது நம் சமூகத்துக்கு.
ஈ.வெ.ராமசாமியாக இருந்தவரை நாம் ‘பெரியார்’ என அழைக்கிறோம். பெரியார் எனும் பட்டம் அவருக்கு 1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் அவருடைய பெண் விடுதலை கருத்துகளுக்கும், போராட்டங்களுக்குமாக பெண்களால் கொடுக்கப்பட்டது. பெண்கள் மாநாட்டில், பெண்களால் வழங்கப்பட்ட இந்தப் பட்டத்துக்கு நூறு சதவிகிதம் உரித்தானவர் பெரியார். பெண் கல்விக்குக் குரல் கொடுத்தல், இளம் வயது திருமணங்களுக்கு எதிர்ப்பு, கட்டாயத் திருமணங்களை ஒழித்தல், மறுமணங்களை ஊக்குவித்தல், பெண்களுக்குச் சொத்துரிமை என வாழும் காலமெல்லாம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கான குரல் கொடுத்தவர் அவர். இதுபோன்று பெண் விடுதலைக்காக மிகப்பெரிய பணிகளைச் செய்தவர் அவர்.
இந்திய விடுதலைக்கு முன்னரே ‘பெண் விடுதலை’ பற்றிப் பேசியவர் பெரியார். பெரியார் என்றொருவர் இல்லை என்றால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்க முடியாது. ‘பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்’ என ஆணாதிக்கத்தைச் சாட்டையால் அடிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டவர்.
உலகமெங்கும் திருக்குறளைக் கொண்டு செல்ல விரும்பியவர் பெரியார். ஆனால், அதற்காக அதில் உள்ள குறையையும் விவாதிக்காமல் அமைதி காக்கவில்லை. உலகப் பொதுமறை எனப்படும் திருக்குறள் நூலே சமத்துவம் பேசவில்லை என்னும் பேருண்மையை பதிவிட்டவர் அவர்.
சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
“காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை; பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும்” என்ற பொருளை இக்குறள் தருகிறது. இது பெண்களை இழிவுபடுத்துவதாய் உள்ளது என்று சாடினார் பெரியார். கல்வி கடவுளாக சரஸ்வதியும் செல்வத்துக்கு லக்ஷ்மியும் இருந்த நாட்டில்கூடப் பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் மறுக்கப்பட்டன. ஆனால், அதை எல்லாம் உடைத்துப் பெண்களுக்கு கல்வியுரிமையும், சொத்துரிமையும் பெற்றுத் தந்த மாபெரும் தலைவர் அவர்.
கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது என்றும், உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை எனவும், அப்படியே இருந்தாலும் அது ஏன் ஆண்களுக்கில்லை? ஏன் எந்த இலக்கிய புராணங்களும் ஆணின் கற்பை சோதிக்கவில்லை? கொண்டாடவில்லை? என கேள்விகளை எழுப்பியவர். கற்புக்காகப் புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மையன்பை, காதலை மறைத்துக்கொண்டு - காதலும், அன்புமில்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும் என்று பெண்கள் விடுதலைக்கு என்றைக்கும் பொருந்தும் கருத்துகளைத் துணிந்து பேசியவர் பெரியார்.
எப்படி ஓர் ஆண் தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்கிறானோ, அதேபோல ஒரு பெண்ணும் தான் விரும்பும் ஆணைத் திருமணம் செய்யலாம். மறுமணம், திருமண விடுதலை, சொத்துரிமை போன்ற கருத்துகளைக் கொண்டு இச்சமூகம் பெண்ணுக்கு இழைத்த அநீதியைத் தோலுரித்தார். பெண்கள் சமையல் கரண்டியை விட்டு, கல்வி கற்க வேண்டும் என்றார்.
கெட்ட வார்த்தைகள்கூட ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிப்பதாய் மட்டுமே இருக்கின்றன. ஏன் ஆண்கள் விபசாரம் செய்ததில்லையா? ஏன் விபசாரகன் என்ற சொல் வழக்கில் இல்லை?
விபசாரம் செய்யும் நிலைக்கு ஒரு பெண்ணைத் தள்ளுவது ஆண் வர்க்கம்தானே?
மது உடல் நலனுக்குக் கேடுதான். ஆண்கள் குடித்தால் அது உடல்நலம் பற்றியது. பெண்கள் குடித்தால் மட்டும் எப்படி கலாசாரம் சீர்குலையும்?
பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என அவர்கள் முடிவு செய்யட்டும். அவர்கள் அலமாரியில் உங்களுக்கென்ன வேலை?
இது போன்ற, இச்சமூகம் பதில் கூறாமல் மௌனம் கொள்ளச்செய்யும் கேள்விகளைத் தொடுத்தவர்.
தற்போது, இந்தச் சமூகம் பேசத் தயங்கும் பெண்ணியக் கருத்தியலை அந்தக் காலத்திலேயே மிகவும் முற்போக்காகத் தீவிரமாகப் பேசியவர் அவர். உலகப் பெண்ணியவாதிகளின் Guide என அழைக்கப்படும் புத்தகம் The second sex. அதிகப் பக்கங்களைக் கொண்ட புத்தகம். ஆனால், அதற்கு இணையாக வெறும் 60 பக்கங்களில் பெண் ஏன் அடிமையானாள் எனும் புத்தகத்தை எழுதிய பெண்ணிய மேதை அவர்.
பெரியார் பார்ப்பனியத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தார். ஆனால், அந்தப் பார்ப்பனியம், பார்ப்பனப் பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. பெரியாரின் பெண்ணியம் என்பது பார்ப்பன பெண்களுக்கும் சேர்த்தே இருந்தது. ‘மொட்டை பாப்பாத்தி’ என்ற இழிநிலை தற்போது இல்லாமல் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெரியார்தான்.
அவரை எந்த ஒரு குறிபிட்ட வட்டத்துக்குள்ளும் சுருக்க முடியாது. ‘A man can’t fix in frames’. இது அவருக்கு சரியாகப் பொருந்தும். இனப்பற்று, மொழிப்பற்று, ஜாதிப்பற்று, மதப்பற்று என எந்தப் பற்றும் இல்லாத மனிதர் அவர். சொல்லப்போனால் ஆண் என்ற உணர்வுகூட இல்லாதவர். பெண்ணாக உணர்ந்துதான் பெண் விடுதலை எனப் பேசினார். அதனால்தான் ஆண்மை என்கிற பதம் அழியாமல் பெண் விடுதலை சாத்தியம் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்.
பெரியாரின் பார்வையில் எது பெண்ணியம்?
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் உணராத உரிமைகளைப் பற்றியும், சுதந்திரம் பற்றியும் பேசுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
இச்சமூகத்தில் ஆணுக்குப் பெண் கேள்விக்கிடமின்றி சரி நிகர் என சொல்வதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் ஒரு வட்டத்துக்குள் அடங்கும் அடிமைதான் எனக் கூறுவதே ‘பெரியாரின் பெண்ணியம்’.
முடிவாக, பெண்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், செயலையும் தகர்த்தெரியும் தளமே ‘பெரியாரின் பெண்ணியம்’.
பெரியார் பிறக்கவில்லை என்றால், இன்று திராவிடம் இல்லை. திராவிட மக்களும் இல்லை. ஆரியருக்கு அடிமைப்பட்டு என்றோ நம் அடையாளம் இழந்து அழிந்திருப்போம். எனவே, பெண்களே... பெரியாரைப் படியுங்கள். அவர் கூறிய கருத்துகளைச் சிந்தியுங்கள். ஆணாதிக்கத்தைப் பெரியாரின் கைத்தடியால் அடித்து நொறுக்குங்கள். தந்தை பெரியாரின் இந்தப் பிறந்த நாளில் நாம் அனைவரும் பெரியார் கண்ட புரட்சி பெண்களாக மாறுவோம் என உறுதியேற்போம்.
பெண் விடுதலையே!
மண் விடுதலை!
- பிரியா மகேஷ்
தொடர்புக்கு: priyarajmahesh@gmail.com
பெண் விடுதலைப் போராளி பெரியார்! பெண் விடுதலைப் போராளி பெரியார்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.