வரலாற்று திரிபுகளுக்கு நடுவே – வி.களத்தூர் எம்.பாரூக்


இந்திய தேசம் பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரங்கள் பின்னி பிணைந்த ஒரு அருமையான தேசம். இந்தியாவிற்கென்றே பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. கையில் உள்ள ஐந்து விரல்கள் போல ஒவ்வொருவரும் விதவிதமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிறார்கள்.
இந்திய விடுதலை போராட்ட காலத்தில் இந்த ஒற்றுமை இன்னும் வலுவடைந்தது. இந்து, முஸ்லிம், கிருத்துவம், சீக்கியம், பார்சி என அனைத்து மதங்களை பின்பற்றுவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.
குறிப்பாக முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம்தொட்டு விடுதலை கிடைக்கும்வரை தனது மக்கள் தொகைக்கு மேலான அளவில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஏனோ பலரது தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்படவில்லை. சில வரலாறுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக : “History of Freedom Struggle in India” என்ற நூலில் மாப்பிள்ளை புரட்சி பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “மாப்பிள்ளை கிளர்ச்சி ஒரு சுதந்திர போராட்ட கிளர்ச்சியே அல்ல. அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம். மேலும்
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை கேரளாவில் பின்னடையைச் செய்தது இக்கிளர்ச்சியே. அது மட்டுமல்லாமல் மலபார் முஸ்லிம்களும், மதவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தார்கள் –மதமாற்றம் செய்தார்கள் – இந்துப் பெண்களைக் கற்பழித்தனர் – இந்துக்களின் உடைமைகளைக் கொள்ளையிட்டனர் – வீடுகளை தீயிட்டனர்” என்று மாப்பிள்ளை கிளர்ச்சியை தவறாக மதிப்பீடு செய்கிறது.

ஆனால் இந்திய மண்ணின் விடுதலைக்காக தென் இந்தியாவில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிதான் மாப்பிள்ளை புரட்சி. கேரளாவின் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இப்புரட்சியை ஒடுக்க ஆங்கில அரசு மாப்பிள அவுட்ரேஜ் சட்டம், மாப்பிள்ளை கத்திச் சட்டம் போன்றவற்றை இயற்றி மலபார் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை திணித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா காந்தியடிகள் ஆதரித்த கிலாபத் இயக்கத்தின் எழுச்சியில்தான் மாப்பிள்ளை கிளர்ச்சி உருவாயிற்று.

இம்மாபெரும் தியாக வரலாற்றை தவறாக சித்தரித்த நூலுக்கெதிராக உண்மை வரலாற்றை பதிவு செய்யாமல் முஸ்லிம் சமூகம் இருந்து வருவது துரதிஸ்டவசமானது.
அதேபோல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துணைத் தலைவர் டாக்டர். ஹரி பிரசாத் சாஸ்திரி எழுதிய ஒரு வரலாற்று நூலில் இப்படி ஒரு திரிபு. “திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் பலாத்தகாரம் செய்தபோது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்”. இந்த நூலைத்தான் அன்று ராஜஸ்தான், பிஹார், உத்திர
பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில்
வைத்திருந்தார்கள். இதை படித்த திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த பி.என்.பாண்டே அதிர்ந்தார். இதற்கான ஆதாரம் என்னெவென்று டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பல கடிதத்திற்கு பிறகு அவரிடம் இருந்து பதில் வந்தது. “மைசூர் கெசட்டில் எடுத்தேன்” என்று. உடனே மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிஜேந்திர நாத்ஸீல் அவர்களுக்கு இந்த செய்தி உண்மைதானா, கெசட்டில் அப்படித்தான் இருக்கிறதா என வினவ, அவரும் ஆராய்ந்து அலசிவிட்டு இதுமாதிரி சம்பவம் எதுவும் கெசட்டில் இடம்பெறவில்லை என்று பதில் தருகிறார்.

இந்த ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் இருந்த அந்த பொய்யான வரலாற்று பிழையை நீக்க வைக்கிறார் பி.என்.பாண்டே. இது சில உதாரணங்கள்தான். இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் தவறாக பதிவு
செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் இதுபோன்ற வரலாற்று திரிபுகளுக்கு எதிரான குரல் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து எழுவதில்லை. நடுநிலையான
ஆய்வாளர்களிடமிருந்து மட்டுமே எழுகின்றன.

வரலாற்றை ஆய்ந்து படித்து தவறாக பதியப்பட்ட வரலாற்றை மாற்றி எழுதவும், மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணரவும் முஸ்லிம் சமூகத்திலிருந்து பல வரலாற்று ஆய்வாளர்கள் உருவாக வேண்டும். செ.திவான் போன்ற சிலரே அந்த பணிகளில்
தங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். அதுபோல் யாரும் உருவாகாத காரணத்தால் தான் வரலாற்று திரிபுகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. இன்றைய மத்திய அரசு வரலாற்றை மாற்றி எழுதும் பணியில் தீவிரமாக இருக்கின்றது. டெல்லியில் நீண்டகாலமாக இருந்து வந்த ஒவுரங்கசீப் சாலையின் பெயரை மாற்றியதுகூட அதில் ஒரு பகுதிதான்.

இன்றுமுஸ்லிம்களுக்குமுன் இரண்டு சவால்கள் இருக்கின்றன. ஒன்று – மேலே சொன்னபடி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வரலாற்றையும், முஸ்லிம்களின்
பங்களிப்பையும் மாற்றி உண்மையை பதிவு செய்யக்கூடிய வரலாற்று ஆய்வாளர்கள் உருவாக்க வேண்டும். இரண்டு – முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு செய்த பங்களிப்புகள், தியாகங்கள் என சிறிய அளவில் படைக்கப்பட்டிருக்கும் படைப்புகளை வாசிப்பதும், பாதுகாப்பதும், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபடவும் செய்திடல் வேண்டும். மறைக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகள் ஒரு சில நல்ல மனது படைத்த படைப்பாளிகளால் புத்தகங்களாக பிரசுமாகியுள்ளன. அவற்றை தேடிப்பிடித்து வாசித்திடல் வேண்டும்.

உதாரணமாக : விடுதலை போரில் தமிழக முஸ்லிம்கள், வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள், முதல் சுதந்திர போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், தியாகச் சுடர் திப்பு சுல்தான், திப்பு விடுதலை போரின் முன்னோடி,
இந்திய விடுதலைப்போரில் இஸ்லாமியரின் பங்கு, கான்சாகிப் மருதநாயகம், தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு, தியாகத்தின் நிறம் பச்சை, இஸ்லாம் பரவிய
வரலாறு என எத்தனையோ நூல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இவையெல்லாம் முஸ்லிம்களின் தியாகத்தை, மறைக்கப்பட்ட வரலாற்றினை வெளிக்கொணர்ந்துள்ளது. அவற்றை தேடிப்பிடித்து முஸ்லிம்களின் வீரமிகு வரலாற்றையும், இந்திய தேசத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தையும் பரவலாக பலர்
அறியும்படி பரப்புவதில் கவனம் எடுக்க வேண்டும்.

வரலாற்றை படிப்பதும், வரலாற்றை படைப்பதும் காலம் வழங்கியிருக்கும் உன்னத கடமை என்பதை முஸ்லிம்கள் உணரும் தருணமிது.
வரலாற்று திரிபுகளுக்கு நடுவே – வி.களத்தூர் எம்.பாரூக் வரலாற்று திரிபுகளுக்கு நடுவே – வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 01:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.