கீழடிக்கு நிதி வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

கீழடிக்கு நிதி வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

கீழடி அகழ்வாராய்ச்சின் மூன்றாம் கட்ட பணிகள் முடிவடைய இருக்கும் சூழலில் அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சிக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 17) மதுரையில் கூட்டுறவு சங்க கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
”தமிழ்நாடு முழுவதும் உள்ள 24 ஆயிரத்து 300 கூட்டுறவுச் சங்கங்களை பாதுகாக்கப் பிரசாரம் நடைபெற உள்ளது. கடந்த 2013–ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினர் பதவியை கைப்பற்றிய சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் மே மாதம் நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்” என்று கேட்டு கொண்டார்.
மேலும் ” 2500 ஆண்டுகளுக்கு முன்பாக நகர நாகரிகம் இருந்ததை கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படுத்துகின்றன. சாதி, மதம் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. இந்திய வரலாற்றையே திருத்தி எழுதும் சில அடிப்படை அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரி மாற்றம், நிதி ஒதுக்கீடு மறுப்பு என மத்திய அரசு திட்டமிட்டே அகழ்வாராய்ச்சி தொடர அனுமதி மறுத்து வருகிறது. நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடர மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக கீழடியில் இரண்டு கட்ட ஆய்வுகள் நடைபெற்று முடிந்திருந்த நிலையில் தொல்லியல் துறை கீழடி ஆய்வுத் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை கடந்த மார்ச் 24ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தொல்பொருள் பாதுகாப்பு மையத்துக்குப் பணி இடமாற்றம் செய்தது மத்திய தொல்லியல் துறை. அமர்நாத் மட்டுமல்லாமல் அவருடன் கீழடியில் பணியாற்றிய 25 பேர்களும் பல்வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தொல்லியல் துறை அவருக்குப் பதிலாக கீழடி ஆய்வுக்கு ஸ்ரீராம் என்பவரைத் தலைவராக நியமித்தது.
கீழடி ஆய்வில் சிறப்பாகச் செயல்பட்டு தமிழர்களின் நாகரிகத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவைத் தொல்லியல்துறை பணி இடமாற்றம் செய்து கீழடி ஆய்வுப் பணிகளை முடக்க முயற்சிக்கிறது என்று தமிழார்வலர்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழடியில் 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள் உள்ளிட்ட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. கடந்த மே 27-ம் தேதி பெங்களூரு அகழாய்வு ஆறாம் பிரிவு சார்பில், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.
ஏற்கெனவே கிடைத்த கட்டிட எச்சங்களின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், வடபுறத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறைவாக இருந்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்ததாலும் திட்டமிட்டபடி முடிக்க இயலாமல் 400 சமீ பரப்பளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 1500-க்கும் மேலாகக் கண்ணாடி மணிகள், பளிங்கு, சூது பவளம், பச்சைக் கல் மற்றும் சுடுமண் மணிகளாகும். மேலும், தந்தத்தால் ஆன சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வுக்கான அனுமதி வருகிற 30–ந் தேதியுடன் முடிவடைகிறது.
4–ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வரைவு திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து, மத்திய அரசு அனுமதி அளித்தால் அடுத்த கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கும்.
கீழடிக்கு நிதி வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் கீழடிக்கு நிதி வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் Reviewed by நமதூர் செய்திகள் on 00:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.