மக்கள் தெருவுக்கு வருவதை நிறுத்த என்ன வழி?

சிறப்புக் கட்டுரை: மக்கள் தெருவுக்கு வருவதை நிறுத்த என்ன வழி?

அ.குமரேசன்
தற்காலத்தில் இயக்கங்களும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. உலகம் முழுவதும் பொருளாதாரத்தைத் தனது கையில் வைத்திருக்கிற முதலாளித்துவத்தால் மேலும் மேலும் நெருக்கடிகள்தான் அதிகரித்துவருகின்றன. அதுவே மாற்று என்று நம்பிய மக்கள் கைவிடப்பட்டு விட்டார்கள், ஆகவேதான் முதலாளித்துவத்தின் அதிகார முகங்களாக உள்ள அரசுகளை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தவர்களோ, அணிதிரட்டியவர்களோ கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்றாலும் அங்கே “முதலாளித்துவம் ஒழிக” என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது.
முதலாளித்துவத்தின் நவீன தாராளமயம் உலகம் முழுவதும் கால்பரப்பத் தொடங்கிய பிறகு, பொருளாதார வளர்ச்சியின் விளைச்சல்களை ஆகப் பெருமளவுக்கு அறுவடை செய்துகொண்டது மிகச் சிறுபான்மையினரான பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள்தான். புல்லுக்கும் அது புசிந்தது போல உள்நாட்டுப் பெருமுதலாளிகளும் கொஞ்சம் எடுத்துக்கொண்டார்கள் – அவர்களும் பன்னாட்டு வணிகக் கூட்டில் இணைந்திருப்பதால். மற்றபடி, மிகப் பெரும்பான்மையான மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் வேலையின்மை, வேலை கிடைத்தாலும் நிரந்தரமின்மை, உரிய ஊதியமின்மை போன்ற நிலைமைகள்தான். இப்படிப்பட்ட நிலைமைகளின் உடன்பிறப்புகளாக வறுமை, உணவுக்கும் மருந்து மாத்திரைகளுக்குமே வருவாயில் பெரும்பகுதியை விட்டுக்கொடுக்கும் கட்டாயம், பிழைப்புக்காக இடம்விட்டு இடம்பெயர்கிற துயரம், புலம்பெயர்ந்து செல்கிற இடங்களில் சந்திக்கும் அவமானம்...
எல்லா வகையான மக்கள் வாழ்வுத் தளங்களிலும் முதலாளித்துவத்தின் படுதோல்வி அப்பட்டமாகத் தெரிகிறது. அவ்வப்போது திருத்தப்படும் புள்ளிவிவரங்கள், விளம்பர ஏற்பாடுகள், அழகிப் போட்டிகள் முதல் ஐபிஎல் வரையிலான கவர்ச்சிகரத் திசை திருப்பல்கள், கார்ப்பரேட்தனமான ஆன்மிக யோகா ஜமுக்காளங்கள், எல்லோருக்கும் போட்டியிடும் வாய்ப்பு சமமாக இருப்பது போன்ற டிஜிட்டல் தோற்றங்கள் ஆகிய போட்டோஷாப் வேலைகளால்தான் முதலாளித்துவம் தன்னை வெற்றிகரமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. உண்மையில், சாலைச் சந்திப்புகளின் சிக்னல்களுக்காகக் காத்திருக்கும் வண்டிகளை நோக்கி வருகிற பிச்சைக்காரர்கள், கம்ப்யூட்டர் துடைப்பதற்கான குறுந்துடைப்பங்கள் முதல் குழந்தைகள் வண்ணம் தீட்டிப் பழகுவதற்கான புத்தகங்கள் வரையில் விற்பதற்கு ஓடிவருகிற ‘வியாபாரிகள்’ வரையில் முதலாளித்துவத்தின் தோல்விக்கு நேரடி சாட்சிகள்தான்.
நகரங்களெங்கும் உருவாகும் பெரிய நவீன வணிக வளாகங்களுக்கு அருகே இருந்து வந்த சிறிய கடைகள் காணாமல் போய்விட்டன. அந்தக் கடைகளின் முதலாளிகளாக இருந்தவர்கள் இந்த வளாகங்களில் மேலாளர்களாக அல்லது கணக்கெழுதுகிறவர்களாக மாறிவிட்டார்கள். அல்லது நடைமேடையில் கடை போட்டிருக்கிறார்கள். இதுவெல்க்லாம் எதன் அடையாளங்கள் என்று சொல்வது? கார்ப்பரேட்மய முதலாளித்துவ வளர்ச்சியில் சுரண்டப்படுவது தொழிலாளர்கள் மட்டுமல்லர்; சிறிய, நடுத்தர முதலாளிகளும்தான்.
போராட்டங்களின் பொது இலக்கு எது?
இந்தப் பாகுபாடுகளும் பாதிப்புகளும்தான் அந்தந்த வட்டாரத்தின் தன்மைக்கேற்ப இன மோதல்களாக, மதச் சண்டைகளாக, சாதித் தகராறுகளாக வெளிப்படுகின்றன. முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருமே, தங்களது இழப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் முதலாளித்துவம்தான் காரணம் என்பதைப் புரிந்துகொண்டு விட்டார்கள், அந்த வர்க்க அரசியல் உணர்வோடுதான் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அந்த உண்மையைப் புரிந்துகொள்ளவிடாமல் எதிர்வீட்டில் உள்ள நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிற மதத்தைச் சேர்ந்தவனும், பக்கத்து வீட்டில் இடஒதுக்கீட்டால் உயர்கல்வி படித்து அதிகாரியானவனும், தெருவோர வீட்டின் மின்விசிறி இல்லா அறையில் தங்கியிருக்கிற வேறு மாநிலத்துக்காரனும்தான் (வேறு இனத்தவன்) எதிரி என்று நினைக்கிறார்கள். அப்படி நினைக்க வைப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக்கு உதவியாக இனவாத – மதவாத - சாதியக் கைகோர்ப்புகள் இருக்கின்றன.
முதலாளித்துவத்தால் எந்த அளவுக்கு வேலையின்மை பெருகியிருக்கிறது, எந்த அளவுக்கு வறுமை விரிவடைந்திருக்கிறது, எந்த அளவுக்குப் பணக்காரர் – ஏழை இடைவெளி அதிகரித்திருக்கிறது என்பதற்கான அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. அந்த விவரங்களைத் தெரிந்துகொண்டு பல்வேறு நாடுகளிலும் போராட்டக் களம் காண்போரும் உண்டு. ஆனால் அந்தப் போராட்டங்கள், அப்போதைய தற்காப்பு, ஏற்கெனவே அனுபவித்துவந்த உரிமைகளையும் வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்ளுதல் முதலான நோக்கங்களுக்காகத்தான் நடைபெறுகின்றனவேயன்றி, முதலாளித்துவச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அடிப்படை மாற்றத்தை இலக்காகக் கொண்டிருக்கவில்லை. உரிய காலம் கடந்த பின்னும் இன்னும் ஏன் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என்ற அளவிலேயே பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்கள் இருக்கின்றன. அடிப்படை மாற்றத்துக்கான உணர்வையும் உழைப்பாளிகளிடையே கொண்டுசெல்வது கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான சங்கங்கள் மட்டுமே.
ஆயினும், இப்படிப்பட்ட போராட்டங்களின் வெற்றிகள் அந்தப் பெரிய இலக்கை நோக்கி அணி திரள்வதற்கான நம்பிக்கையை வளர்த்தெடுக்கும்.
கடக்க வேண்டிய தூரம்
இதையெல்லாம் பேசுகிறபோது ஏதோ எல்லா நாடுகளிலும் எல்லாக் குடிமக்களும் போராட்டக்களத்தில் இறங்கிவிட்டது போன்ற மயக்கம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும். தொழிலாளி வர்க்கத்தினர் உட்பட பெரும்பகுதி மக்கள் ஆவேச முழக்க வியர்வைக்குக்கூடத் தயாராக இல்லை என்பது உண்மைதான். அப்படிப் பெரும்பகுதியினர் வந்துவிட்டால்தான் புரட்சி வெடித்துவிடுமே!
ஒருவகையில் பார்த்தால், இடதுசாரிகள் உள்ளிட்ட சமுதாய மாற்றப் போராளிகள் நடத்த வேண்டியிருக்கிற போராட்டமே, பெரும்பகுதி மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகத்தான். தலையெழுத்தில் என்ன இருக்கிறதோ அது நடந்தே தீரும், நம்ம நட்சத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்தால் போதும், ஜெபம் பண்ணினா கர்த்தர் பார்த்துக்குவார், தொழுகையில் வேண்டுகோளை வைச்சாச்சு இனி எல்லாப் புகழும் அல்லாவுக்கே என்றிருப்போர் மனங்களில் போராட்ட மார்க்கமே நம்பகமானது என்ற சிந்தயனையைக் கொண்டுசெல்கிற கடுமையான சவால் அவர்களின் முன்பாக இருக்கிறது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இந்தியாவிலோ இதர பல நாடுகளிலோ மக்களைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கும் மதவெறியர்களின் கட்டளைகளையும் அச்சுறுத்தல்களையும் பெருவாரியான மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் தெரியவரும். பாகிஸ்தானில் ஒரு மலாலா சுடப்பட்டுவிட்டதால் பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமலில்லை. ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டத்துக்குப் போய் வந்ததே போதுமென்று தெருவில் சாக்கடை தேங்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் மனுக் கொடுக்காமலில்லை. குருமார்கள் சொல்பேச்சுக் கேட்டுத் தாய்மார்கள் பத்துக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதெல்லாம்கூட மௌனப் போராட்டங்கள்தாம்.
விதையிலிருந்து வெளிவரும் தளிர் தரையைப் பிளக்கிற போராட்டத்தில் வெற்றி பெறுவதால்தான் செடியாகி, மரமாகி, காடாகி நிற்கிறது. கருவறை திறந்து பூமிக்கு வரும் சிசு முதன்முதலாக மூச்சை உள்வாங்கி வெளிவிடுகிற போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதால்தான் மனித சமுதாயம் புவியை அளக்கிறது. போராட்டம் நியாயமானது, இயற்கையானது என்று கற்பிக்கிற இத்தகைய எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கின்றன. ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் அவர்களின் பிள்ளைகளாகப் பேரர்களாக வந்தவர்களும் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தியிருந்திருப்பார்களேயானால் இதை எழுதுவதற்கு நான் ஏது? படிப்பதற்கு நீங்கள் ஏது?
“கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்” என்றார் புரட்சிக்கவி. இன்று உலகெங்கும் தொடுக்கப்பட்டிருக்கிற கெட்ட போர்கள் ஆயிரமாயிரம். ஆயுதங்களே இல்லாத ராணுவமே இல்லாத போர்கள் அவை. அந்தப் போர்களை முறியடிக்க நல்ல போர்களை நடத்தியாக வேண்டும். போராட்டமே இல்லாத ஓர் உலக வாழ்க்கையை மலரச் செய்ய முடியுமா? முடியும் - போராட்டத்தால்! மக்கள் தெருவுக்கு வருவதை நிறுத்த என்ன வழி? மக்கள் தெருவுக்கு வருவதுதான்!
எனது காலை நடையின்போது கேட்டுக்கொண்டு செல்லும் பண்பலை வானொலியில் தொகுப்பாளர் பரவச உணர்வோடு ஒரு தகவலைச் சொன்னார். ஓர் ஆலயத்தைக் குறிப்பிட்டு, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே நடைபெறும் கூட்டு வழிபாடு பற்றிக் கூறினார். எல்லோருமாகச் சேர்ந்து சில சுலோகங்களைச் சொல்கிறபோது அங்கே ஓர் அதிர்வு ஏற்படுகிறது. அந்த அதிர்வு செவிகளின் வழியாக மனதில் இறங்குகிறது. அதன்பின் ஒரு விடுதலை உணர்வு ஏற்படுகிறது என்று சொல்லிக்கொண்டு போனார். தெருமுனையில் அனைவருக்குமான கோரிக்கைக்காக சிலர் மட்டுமே கூடியிருக்கிற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட்டால் தெரியும். அங்கே எழுகிற ஒன்றுபட்ட முழக்கங்களில் ஏற்படும் அதிர்வு பல மடங்கு வலியது. அது மனதில் பதிந்து ஏற்படுத்துகிற உணர்வு உண்மையிலேயே விடுதலையை உறுதிப்படுத்துவது.
மக்கள் தெருவுக்கு வருவதை நிறுத்த என்ன வழி? மக்கள் தெருவுக்கு வருவதை நிறுத்த என்ன வழி? Reviewed by நமதூர் செய்திகள் on 00:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.