கருப்புக்கொடி கடல்: வைகோ வேண்டுகோள்!

கருப்புக்கொடி கடல்: வைகோ வேண்டுகோள்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 12ஆம் தேதியன்று தமிழகம் வரும்போது, கருப்புக்கொடி கடல் என உலகம் அறியும் வகையில், கருப்புக்கொடி போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் பயணமாக வரும் 12ஆம் தேதியன்று தமிழகம் வருகிறார். அப்போது, மாமல்லபுரத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சி நிகழ்ச்சியிலும், அதனையடுத்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிகழ்ச்சியொன்றிலும் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி தமிழகம் வரும்போது திமுகவின் சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) திமுகவின் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இது தொடர்பாக, அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடியும், மத்திய பாஜக அரசும் தொடர்ந்து 46 மாத காலமாக தமிழ் இனத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
”காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்குவதற்கு நாசகாரத் திட்டங்களை செயற்படுத்த முனைந்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணலில் தடுப்பு அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு மறைமுக அனுமதி வழங்கி, காவிரியில் சொட்டு நீர் கூட கிடைக்காமல் செய்வதற்கு சதித்திட்டம் வகுத்திருக்கிறது.
காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப்படிம எரிவாயு போன்ற திட்டங்களை செயற்படுத்த, பன்னாட்டு அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி மோடி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 57500 ஏக்கர் விளைநிலங்களைக் கைப்பற்ற, மோடி அரசின் காலடியில் கிடக்கும் எடப்பாடி அரசு, 2017 ஜூலை 19ஆம் தேதி அரசாணை பிறப்பித்து இருக்கின்றது” என்று கூறியுள்ளார் வைகோ.
கெயில் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லை ஆலை விரிவாக்கம் என்று பல வகையில் தமிழகத்தின் உரிமைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நசுக்கி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
”நாட்டின் பன்முகத்தன்மையைச் சீரழிக்கும் வகையில் இந்துத்துவா மதவெறி கும்பல் கொட்டம் அடிப்பதற்கும், சிறுபான்மை இஸ்லாமியர், கிருத்துவ மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்துவதற்கும் மோடி அரசின் பின்புல ஆதரவுதான் காரணம் ஆகும். பத்திரிகை, ஊடகங்களை மிரட்டுவதும், கருத்து உரிமைக்கு எதிராக செயல்பட்டு, அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிப்பதும் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்.
பாசிசப் போக்குடன் தமிழ்நாட்டிற்கு எதிராக வஞ்சகம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வரும்போது, ஒட்டுமொத்த தமிழகமே அணி திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் 12 அன்று தமிழகம் வரும்போது, பிரதமர் மோடி கருப்புக்கொடி கடலைக் கண்டார் என்று உலகம் அறியும் வகையில், கருப்புக்கொடி போராட்டம் அமைய வேண்டும். தமிழர் இல்லம் தோறும் கருப்புக்கொடிகள் பறக்கட்டும். அலுவலகங்களில் பணிபுரிவோர், ஆலைத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கருப்புப் பட்டை அணிந்து மோடி அரசுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்த வேண்டும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வைகோ.
தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையை பாதுகாக்கவும், காவிரியில் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை மீட்கவும், தமிழ்நாடு கிளர்ந்து எழுந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணரும் வகையிலும், இந்த கருப்புக்கொடி அறப்போரை வெற்றி அடைய செய்திட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருப்புக்கொடி கடல்: வைகோ வேண்டுகோள்! கருப்புக்கொடி கடல்: வைகோ வேண்டுகோள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.