சபாநாயகர் அதிகாரம்: புதுச்சேரி - தமிழ்நாடுக்கு வெவ்வேறா?

சபாநாயகர் அதிகாரம்: புதுச்சேரி - தமிழ்நாடுக்கு வெவ்வேறா?

ஓ.பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 27) தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதுபற்றி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று கூறிய தீர்ப்பில் சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே மாதிரியான பிரச்சினையில் ஒரே நீதிமன்றத்தில் இரண்டு விதத் தீர்ப்புகள் வந்திருக்கின்றன. இதுபற்றி சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்ட் வருகின்றன’’ என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக மத்திய அரசால் கிரண் பேடி நியமிக்கப்பட்டதிலிருந்து அவருக்கும் அம்மாநில காங்கிரஸ் அரசுக்கும் அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருக்கிறது.
இதன் ஒரு கட்டமாக, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்எல்ஏக்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற உள்துறை அமைச்சகம், மூன்று பேரையும் எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. இதை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்தார். இதையடுத்து அவர்களுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது அறையிலேயே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்கத் தடை விதித்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ.வுமான லெட்சுமி நாராயணன் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்குடன், ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஆகியவையும் சேர்த்து விசாரிக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் மாதம் தீர்ப்பளித்தபோது, புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய உள்துறை நேரடியாக நியமித்த 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தின்படியே 3 பேரின் நியமனம் நடைபெற்றுள்ளதாகவும், அவர்கள் பேரவைக்குள் செல்வதைத் தடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
இதை நினைவூட்டி பேட்டியளித்த புதுவை நாராயணசாமி, தனது ட்விட்டரில் இன்று, “புதுச்சேரி சபாநாயகர் உத்தரவில் தலையிட்ட நீதிமன்றம் தமிழக சபாநாயகர் விவகாரத்தில் தலையிட மறுக்கிறது. 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு முன்னுக்கு பின் முரணாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் அதிகாரம்: புதுச்சேரி - தமிழ்நாடுக்கு வெவ்வேறா? சபாநாயகர் அதிகாரம்: புதுச்சேரி - தமிழ்நாடுக்கு வெவ்வேறா? Reviewed by நமதூர் செய்திகள் on 04:49:00 Rating: 5

No comments:

Powered by Blogger.