காவிரி நீர் டாடாவிடம்!

காவிரி நீர் டாடாவிடம்!

காவிரியில் ஒப்பந்தங்களை மீறி கர்நாடகா தடுப்பணைகளைக் கட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள திருமுருகன் காந்தி, காவிரி தண்ணீரின் விநியோகத்தைத் தனியார் நிறுவனத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்ச நீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் மே பதினேழு இயக்கம் சார்பில் தாம்பரத்தில் கடந்த 7ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “நாட்டிலேயே தண்ணீரை தனியார்மயப்படுத்திய மாநிலம் கர்நாடகம்தான். மைசூரில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு, டாடா நிறுவனத்திடம் விநியோக உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வேறு சிலரின் நலனுக்காக நாம் ஏன் வரிப்பணம், ஜி.எஸ்.டி கட்ட வேண்டும்? இது காவிரிக்கான போராட்டம் மட்டும் அல்ல. தமிழினத்துக்கான போராட்டம்.
கர்நாடகாவில் எந்த அணை கட்டினாலும், நீர்ப் பாசனப் பரப்பை அதிகரித்தாலும் அதற்குச் சென்னை மாகாண ஒப்புதல் தேவை. இதையடுத்து 1924ல் கிருஷ்ணராஜ சாகர் அணைக் கட்டும்போது, ஒரு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் போடப்படுகிறது. அப்போதைய தமிழக பாசனப் பரப்பு 14.5 லட்சம் ஏக்கர், கர்நாடக காவிரி பாசனப் பரப்பு 1.1 லட்சம் ஏக்கர். ஒப்பந்தத்தில் தமிழகத் தேவை, கர்நாடகத் தேவை எனத் தண்ணீர் அளவு பிரிக்கப்படுகிறது.
கடந்த 1892ஆம் ஆண்டு, சென்னை மாகாணமும் மைசூர் சமஸ்தானமும் ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதன்படி, கர்நாடகத்திற்கு 177 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு 370 டி.எம்.சி கிடைத்து வந்தது. இந்நிலையில் 70 ஆண்டுகளில் தமிழக பாசன பரப்பு 29 லட்சம் ஏக்கராகவும், கர்நாடக பாசனப் பரப்பு 24 லட்சம் ஏக்கராகவும் மாறியிருக்கிறது. இதிலிருந்து யார் பாசனப் பரப்பை அதிகரித்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். கடந்த கால ஒப்பந்தங்களை மீறி, கர்நாடகா 5 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இதனால் தமிழகத்திற்கான நீர்வரத்து குறைகிறது. எனவே 1986ல் தமிழக விவசாயிகள் தொடுத்த வழக்கில், 1991இல் இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி தண்ணீர் தர தீர்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் 2007ல் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கப்பட்டது. தற்போது 14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டு, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகள் என்று சொல்வதன் மூலம், காவிரியை மறக்கடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நிலத்தடி நீரை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால், வெகு சீக்கிரம் அது காணாமல் போய்விடும். அதன் பின்னர் மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் வாயு போன்றவற்றை சுலபமாக எடுக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
காவிரி நீர் டாடாவிடம்! காவிரி நீர் டாடாவிடம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.