நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு!: தொல்.திருமா

நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு!: தொல்.திருமா

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யுமாறு திமுக தரப்பு தொடுத்த வழக்கை, நேற்று (ஏப்ரல் 27) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த 11 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், இதனைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தது.
இந்த தீர்ப்பு குறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அப்போது, “சென்னை உயர் நீதிமன்றத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனிக்கின்றபோது, அதில் அரசியல் தலையீடு மிக அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆதாரங்கள் மற்றும் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதற்கு மாறாக, நாட்டில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்பத் தங்களின் பதவி உயர்வைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளது. அதனை எதிர்நோக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார்.
நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு!: தொல்.திருமா நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு!: தொல்.திருமா Reviewed by நமதூர் செய்திகள் on 04:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.